விவாதமேடை

"நாடு முழுவதும் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

குழப்பம்
 நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் என்பது நியாயமானதே ஆகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அனைத்து மதத்தினருக்குமான பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. ஹிந்து மதத்தினருக்கு ஒரு சட்டம், இஸ்லாமியர்களுக்கு ஒரு சட்டம், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டம், சீக்கியர்களுக்கு ஒரு சட்டம் என்று வெவ்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருப்பது நாட்டில் தேவையற்ற குழப்பத்தையே உருவாக்கும். எனவே நாடு முழுவதும் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே ஆகும்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 உரிமைப் பறிப்பு
 பல மொழிகள், பல மதங்கள் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. பொதுமக்கள் அவரவர் விரும்பும் மதக்கோட்பாட்டின்படி வாழ உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதத்திற்கும் தனியாக உரிமையியல் சட்டங்கள் உள்ளன. அதன்படி சொத்துரிமை,திருமணம், மணமுறிவு, வாரிசுரிமை போன்றவற்றுக்கு தனிநபர் சட்டம் மூலமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதற்கும் பொது சிவில் சட்டம் என்பது தனி நபர்உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். தனிநபர் உரிமைகளில் தலையிடுவது தேவையில்லாதது ஆகும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 சரியல்ல
 ஒவ்வொரு மதத்தினரும் தங்களுடைய சமய நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவானாம்சம் உள்ளிட்ட சிவில் விவகாரங்கள் குறித்து இச்சட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன. இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது சரியல்ல. பொது சிவில் சட்டம் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றிவிடுமா? சமூகத்திற்குத் தேவை கருத்தான சமத்துவம். பொது சிவில் சட்டம், பெரும்பான்மையினரின் சட்டத்தை பிறர் மீதும் திணிப்பதாகும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 அவசியம்
 அனைத்து மதத்திற்கும் பொதுவான சிவில் சட்டம் அவசியம் தேவை. அதற்கு இந்தியாவில் உள்ள அனைவரும் முதலில் இந்தியர் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும். அனைத்து மதங்களுக்கும் ஒரே விதமான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ, மொழிக்கோ, மாநிலத்திற்கோ சலுகைகள் அளிக்கப்படுவது படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான சட்டத்தை ஏற்படுத்த வேண்டிய காலம் உருவாகி விட்டது. பிறப்பால் அனைவரும் இந்தியர் என்னும்போது, அனைவருக்குமான பொது சிவில் சட்டம் இருப்பதே சரி.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 அடிப்படைத் தேவை
 ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ள இன்றைய நிலை மதச்சார்பில்லாத இந்தியா அமைய தடையாக உள்ளது. சொத்துப் பிரிப்பு, திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு போன்ற சிவில் சார்ந்த விஷயங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான சட்டம் இருப்பது ஒன்றுபட்ட வலிமையான நாடாக இந்தியா திகழ்ந்திட அடிப்படைத் தேவையாகும். முத்தலாக் தடை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற சட்டங்கள் நாட்டு நல்லிணக்கத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுத்திருப்பது கண்கூடு. எனவே, "ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் தாரக மந்திரம் மெய்ப்பட வேண்டும்.
 கே. ராமநாதன், மதுரை.
 ஒற்றுமை உணர்வு
 நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் நடைமுறையில் இருப்பதுதான் நியாயமாகும். அதனால்தான் பொது சிவில் சட்டம் கோரிக்கை எழுந்துள்ளது. ஆளுக்குத் தகுந்த மாதிரியும், இடத்திற்குத் தகுந்த மாதிரியும் சட்டம் வளைந்து கொடுத்தால் அது சரியான சட்ட நடைமுறையல்ல. பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம், "நாம் அனைவரும் இந்தியர்' என்ற ஒற்றுமை உணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும். எல்லாருக்கும் பொதுவான கிரிமினல் சட்டம் நடைமுறையில் இருப்பது போல் பொதுவான சிவில் சட்டமும் நடைமுறையில் இருக்க வேண்டும். இக்கோரிக்கை சரியானதே.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 எல்லோரும் சமம்
 நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் என்பது முற்றிலும் சரியானதே. ஒரு நாட்டில் வாழும் குடிமக்களிடையே ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சட்டம் என்பது இன்றைய நாகரிக உலகில் எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதன்று. "எல்லோரும் சமம்' என்பதுதானே ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றாக இருக்கும்போது, சிவில் சட்டங்கள் மட்டும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? இந்த நிலை மக்களிடையே வேற்றுமை உணர்வை அல்லவா வளர்க்கும்? எனவே, பொதுசிவில் சட்டம் என்பது காலத்தின் கட்டாயம்.
 முகதி. சுபா, திருநெல்வேலி.
 இடர்ப்பாடுகள்
 இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. மொழியால், இனத்தால், மதத்தால், பண்பாட்டு கூறுகளால் வேறுபட்ட பல பிரிவுகளைக் கொண்ட நாடு. இவை அனைத்தையும் பொதுவாக்கும் போது பல இடர்ப்பாடுகள் ஏற்படக்கூடும். தண்டனைச் சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருப்பதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்தியாவை ஒன்றாக இணைக்கும் போது நமது தலைவர்கள் பல சமரசங்களை ஏற்றுக் கொண்டனர். உணவு தொடங்கி ஆடை வரை எல்லாம் ஒன்றே என்ற தத்துவம் பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாய் இருக்கலாம். நடைமுறைக்கு வரும்போது சரிவராது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 தனித்துவ பெருமை
 இக்கோரிக்கை ஏற்புடையதல்ல. இதனால் வீண் குழப்பமும் போராட்டங்களும் உருவாகும். நமது நாட்டின் பன்முகத்தன்மையும் வேற்றுமையில் ஒற்றுமையும் உலக அரங்கில் தனித்துவ பெருமை கொண்டவை. மேலும் நமதுஅரசியல் சாசனம் முகப்புரையில் இந்திய மக்கள் அனைவருக்கும் சமத்துவம் பேணுவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே அவரவர்களின் மத, கலாசார, பண்பாட்டில் எவரும் ஆதிக்கம் செலுத்த இயலாது. எனவே பொது சிவில் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாக இருப்பதால் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது. இக்கோரிக்கை அர்த்தமற்றது.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 அவகாசம் தேவை
 இக்கோரிக்கை நியாயமானது அல்ல. இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. மக்களின் பண்பாடுகளில், பழக்கவழக்கங்களில் மதங்களின் வேர்கள் ஊடுருவியுள்ளன. அவை நல்லவையோ, அல்லவையோ அவற்றைக் கைவிட முடியாதபடி சமூக அமைப்பு உள்ளது. ஆனால் எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டு விழுமியப் பண்புகளை நோக்கி மனித சமுதாயம் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நகர்வு பொது சிவில் சட்டத்தை நோக்கிய நகர்வு என்றும் கொள்ளலாம். ஆனால், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படலாம். இப்போதே அவசரப்பட வேண்டாம்.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 விதிவிலக்குகள்
 நம் நாட்டில் சட்டம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று கிரிமினல் சட்டம், மற்றொன்று சிவில் சட்டம். சிவில் சட்டத்தில் மட்டும் மதங்களுக்கு ஏற்ப சில விதிவிலக்குகள் உள்ளன. நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்பு தில்லி நீதிமன்றம் தெரிவித்தது. நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர்
 உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இக்கோரிக்கை நியாயமானதே.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 கேள்விக்குறி
 இக்கோரிக்கை ஏற்புடையதாகத் தெரியவில்லை. சமீப காலமாக நம் நாட்டில் ஒற்றைத்தன்மையுடைய பல விஷயங்களை நடைமுறைபடுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இவை மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் தேசத்திற்கு இது போன்ற பொது சிவில் சட்டம் பொருத்தமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை என்றெல்லாம் கூறப்பட்ட வரிசையில் இப்போது பொது சிவில் சட்டமும் சேர்ந்துள்ளது. பன்முகத்தன்மையுள்ள நம் நாட்டிற்கு பொது சிவில் சட்டம் ஏற்புடையது அல்ல.
 மா. பழனி, தருமபுரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT