விவாதமேடை

"மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

2nd Nov 2022 04:09 AM

ADVERTISEMENT

பன்முகத்தன்மை
 மத்திய அரசின் அறிவுறுத்தல் சரியல்ல. இந்தியா பல்வேறு மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டாட்சிக் குடியரசு. பன்முகத்தன்மை கொண்டது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தை ஏற்றுக்கொண்டு, மாநிலங்களில் ஆட்சி நடைபெறுகின்றது. மத்திய அரசை ஆள்பவர்கள் ஒரு கட்சியை சார்ந்தவர்கள். பல மாநிலங்களில் ஆள்பவர்கள் வேறு கட்சியை, கூட்டணியைச் சார்ந்தவர்கள். மாநில ஆட்சியாளர்களின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் கருவியாக தொலைக்காட்சி உள்ளது. தனியார்கள் வசமே தொலைக்காட்சிகள் இருக்கின்ற நிலையில் மாநில அரசுகள் தொலைக்காட்சிகளில் நடத்துவது தவறு இல்லை.
 எஸ். காசி விஸ்வநாதன், திருநெல்வேலி.
 நன்மையே
 மத்திய அரசின் அறிவுறுத்தல் வேடிக்கையாக உள்ளது. தொலைக்காட்சி இன்று மக்களிடையே ஓர் இன்றியமையாத சாதனம் ஆகிவிட்டது. கல்வி, வேளாண்மை போன்ற துறைகளில் மாணவர்களும் பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய, பல முக்கியச் செய்திகளை தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பு செய்வதனால் மக்களுக்கு நன்மையே. மத்திய அரசு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யும் போது மாநில அரசுகள் ஒளிபரப்பு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் இது போன்ற கட்டுப்பாடுகள் தேவையற்றவை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 தவறில்லை
 மத்திய அரசு தனது திட்டங்களை தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு அறிவித்து மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறது. அது போல மாநில அரசுகளும் தங்கள் திட்டங்களை தொலைக்காட்சி மூலம் அறிவித்து மக்களின் நன்மதிப்பைப் பெற விரும்புவதில் தவறில்லை. அரசு தொலைக்காட்சிகளை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளது. தனியார் தொலைக்காட்சியைப் கட்டுப் படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை. தொலைக்காட்சிப் பயன்பாடு என்பது அனைவர்க்குமானதாக இருப்பதால் அதில் தலையிடும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. எனவே இந்த அறிவுறுத்தல் ஏற்புடையதல்ல.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 ஆரம்பம்
 மத்திய அரசின் அறிவுறுத்தல் ஹிந்தித் திணிப்பிற்கான முயற்சியே ஆகும். மாநில அரசுகள் ஒளிபரப்பும் கல்வி நிகழ்ச்சிகள் அந்தந்த மாநில மொழியிலேயே ஒளிபரப்பாகும். தொலைக்காட்சி மத்திய அரசின் கைக்கு போகும் போது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மாநில மொழிப் பாடங்கள் கூட ஹிந்தி மொழியின் முன்னோட்டத்துடன் ஒளிபரப்பாகும். பள்ளி மாணவர்கள் எதுவும் புரியாமல் ஹிந்தியைக் கேட்க வேண்டியதாகும். இந்த அறிவுறுத்தல் ஆரம்பம்தான். பின்னர் இது கட்டாயமயமாக்கப்படும். இச்செயல் நாளடைவில் இந்திய ஒற்றுமைக்கு எதிராக மாறும். அதனால் நம் நாட்டின் பன்முகத்தன்மை பாதிக்கப்படும்.
 கோவி. சேகர், சென்னை.
 மிகவும் சரி
 மத்திய அரசின் அறிவுறுத்தல் மிகவும் சரியானதே. அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்கத்தான் தொலைக்காட்சி என்றால், அதனை மத்திய அரசின் தூர்தர்ஷன் மூலமே செய்ய முடியும். அத்துடன் மாநில அரசையே சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் அரசின் சாதனைகளை ஒளிபரப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம். மாநில அரசே தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஈடுபட்ட வேண்டிய தேவையில்லை. செய்தித்தாள்களில் அரசின் திட்டங்களை விளம்பரம் செய்தால் போதும். மாநில அரசு தொலைக்காட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேவையற்றது.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 ஏற்புடையதல்ல
 நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. மத்திய அரசும் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல. எந்தவொரு ஒளிபரப்பும் இலவசமாக வழங்கப்பட்டால்கூட தரமுள்ளதாக இருந்தால்தான் அது மக்களுக்கு பிடிக்கும். இல்லையேல் அதை யாரும் பார்க்க மாட்டார்கள். மாநில அரசுகள் ஒளிபரப்பு தொடங்கினால் அவற்றின் திட்டங்களை, சாதனைகளை அதன் மூலம் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 கட்டாயம் தேவை
 தொலைக்காட்சி நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்துவது நம் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டே வருவது எந்த வகையில் நியாயம்? மத்திய அரசு மட்டும் ஒளிபரப்பை வைத்துக் கொண்டு தனது சாதனைகளை மக்களிடம் விளம்பரப்படுத்திக்கொள்வது சரியா? மாநில அரசுகள் தங்களது மாநில மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை வளர்த்து பாதுகாப்பதற்கும் அவை குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் மாநில அரசுகளுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு கட்டாயம் தேவையாகும்.
 நா. குழந்தைவேலு, மதுரை.
 சமரசம் கூடாது
 இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மாநில அரசுகள் தன்னிச்சையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் ஒளிபரப்புவது தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும் அமையலாம். தேச ஒற்றுமையில் சமரசம் கூடாது. மாநில அரசுகள் தொலைக்காட்சி மூலமாக மொழி, கலாசாரம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை உருவாக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது சரியே.
 வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.
 நியாயமல்ல
 மாநில அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவையே. அவை தாங்கள் செயல்படுத்தும் நலத் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்க சிறந்த ஊடகம் தொலைக்காட்சிதான். மாநில அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வேண்டுமானால் மத்திய அரசு வகுக்கலாம். ஆனால், மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஈடுபடக்கூடாது என்று கூறுவது நியாயமல்ல. மாநில அரசும் நடுநிலையோடு தொலைக்காட்சியை நடத்துவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். அதனைப் பின்பற்றவும் வேண்டும். மத்திய அரசு மாநில அரசை தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஈடுபட அனுமதிக்கலாம்.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 காலத்தின் கட்டாயம்
 மத்திய அரசின் அறிவுறுத்தல் சரியல்ல. நாடாளுமன்றம் கூடும் நாட்களில் அங்கு நடப்பவற்றை மத்திய அரசின் ராஜ்யசபா தொலைக்காட்சி மூலம் மக்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மாநில சட்டப்பேரவைகளில் நடக்கும் நிகழ்வுகளை, விவாதங்களை மக்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை. மாநில அரசின் செய்தி - ஒளிபரப்புத் துறையின் மூலம் அன்றைய நிகழ்வின் தொகுப்பு மட்டுமே வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களின் பேச்சுகளும் செயல்பாடுகளும் மாநில மக்களுக்கு முழுமையாகத் தெரிய வேண்டுமானால் மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 நல்லது
 மாநில அரசுகள் தங்கள் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் சிறந்த ஊடகம் தொலைக்காட்சியே ஆகும். எடுத்துக்காட்டாக சில வன்முறை நிகழ்வுகளில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது, சட்டப்பேரவைவிவாதங்கள் முதலியவற்றை மக்களுக்குக் கொண்டுசெல்லும் சிறந்த ஊடகம் தொலைக்காட்சியே ஆகும். எனவே தொலைக்காட்சி ஒளிபரப்பில் மாநில அரசுகள் ஈடுபடுவது நல்லதுதான். இதனை மத்திய அரசு தடுப்பது தேவையற்றது. மாநில அரசுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஈடுபட உரிமை உண்டு.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 ஜனநாயகமாகாது
 ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை உள்ளன. அவற்றை முன்னெடுக்க அந்தந்த மாநிலங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஈடுபடுவதில் என்ன தவறு? மத்திய அரசு மாநிலங்களைக் கட்டுப்படுத்த முனைவது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதால் தாங்கள் நினைத்ததையெல்லாலம் செயல்படுத்த முற்படுவது ஜனநாயகமாகாது. அப்படிச் செய்தால் எதிர்க்கட்சிகள் அதிகம் முயலாமலே ஆளுங்கட்சியாகும் நிலையை மக்கள் உருவாக்கி விடுவார்கள். இதனை மத்திய அரசு உணர வேண்டியது அவசியம்.
 கலைப்பித்தன், கடலூர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT