விவாதமேடை

"அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

25th May 2022 03:47 AM

ADVERTISEMENT

ஜனநாயகம் அல்ல

ஓய்வூதியம் என்பது ஓய்வுக்குப் பின் கெளரவமான வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எந்தத் திட்டமும் முற்போக்காக அமைய வேண்டுமே தவிர பிற்போக்கானதாக அமையக்கூடாது. பழைய ஓய்வூதியத்தில் ஊழியர் எந்தத் தொகையையும் அரசுக்குச் செலுத்தாமல் தன் பழைய சம்பளத்தில் பாதி அளவை ஓய்வூதியமாகப் பெறுவார். புதிய திட்டத்தில் ஊழியர்கள் பணமும் செலுத்த வேண்டும், அவர்கள் பெறும் ஓய்வூதியமும் மிகக்குறைந்த தொகையே. இது ஓய்வூதியர்களைப் பிறரை நம்பி வாழும் அவல நிலைக்குத் தள்ளிவிடும். அறம் பிறழ்ந்த இத்திட்டத்தைத் தொடர்வது ஜனநாயகம் அல்ல.  

என்.ஆர். ஸத்யமூர்த்தி,
கோண்டூர். 

 

ADVERTISEMENT

நெருக்கடி

கடந்த ஆண்டுகளில் ஓய்வு பெறுவோரின் வயதையும் 59, 60 என்று உயர்த்தி, புதிய அரசின் தலையில் சுமையை சுமத்தி விட்டன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு பண இழப்பு ஏற்படாது என்பதை பல்வேறு சங்கங்களும் உரிய முறையில் அரசின் ஆய்வுக்குழுவிடம் எடுத்துரைத்துள்ளன. இன்றைய அரசுக்கு உள்ள நெருக்கடி, ஏறத்தாழ கடந்த 19 ஆண்டுகளுக்குமான பணப் பயன்களை அளிக்கவேண்டும் என்பதே. இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தலின்போது ஆராயாமல் வாக்குறுதி கொடுத்திருக்க மாட்டார்கள். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது நல்லது.

அ. கருப்பையா,
பொன்னமராவதி.

 

தொலைநோக்குப் பார்வை

இக்கோரிக்கை சரியல்ல. 19 வருடங்களுக்கு முன்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறையால் தமிழக அரசு தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக்கியதற்கான காரணமே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான பணப்பயன்களைக் கொடுப்பதற்கு அரசிடம் போதிய நிதியாதாரம் இல்லை என்பதே. தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து அரசின் நிதிநிலை மேம்படும்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.  

சீ. காந்திமதிநாதன்,
கோவில்பட்டி.

 

கட்டாயத் தேவை

தற்போது அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது அறுபதாக உள்ளது. அறுபது வயதில் ஒருவர் ஓய்வு பெறும் போது அவரை நம்பியிருக்கும் குடும்பத்தை அவர் காப்பாற்றியாக வேண்டும். அப்படிபட்ட சூழ்நிலையில் அவருக்கு மாதாந்திர வருமானம் கட்டாயத் தேவையாகிறது. ஓய்வு பெற்ற ஊழியருக்கு அரசு வழங்கக்கூடிய ஓய்வூதியம்தான் ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். மேலும், பிள்ளைகளின் ஆதரவு இல்லாத அரசு ஊழியர்கள், முதுமையில் அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலை ஏற்படும். ஆதலால் பழைய ஓய்வூதிய த் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். 

க. இளங்கோவன்,
நன்னிலம்.

 

பயன் இóல்லை

இது சரியான கோரிக்கையே. இன்றைய நிலையில் ராணுவத்தினர், நீதிபதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பயன் பெறுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய ஓய்வூதிய சட்டம் சுதந்திரத்திற்கு பின் மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அதை இன்னும் மேம்படுத்தி அமைப்புசாரா தொழிலாளார்களுக்கும் எப்படி விரிவுபடுத்தலாம் என்று யோசிக்க வேண்டுமே ஒழிய, ஊழியர்களுக்கு பயன் இல்லாத புதிய பென்சன் திட்டத்தை அரசு தொடரக்கூடாது. 

பி.எஸ். ராஜசேகரன்,
அம்பாசமுத்திரம்.

 

பாலம்

அரசுக்கு ஊழியம் செய்பவர்கள் மக்களுக்கு ஊழியம் செய்பவர்களேயாவர். அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய பாலமாக இரு ருந்தாலும் சுயலாபம் மட்டுமே மேலோங்கி இருக்கும். அரசுத் துறைகளில் மட்டுமே சேவை மனப்பான்மை இருக்கும். தனது இளமைக்காலம் முழுவதையும் மக்கள் சேவைக்காக செலவிடும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் முதுமைக் காலம் மன நிறைவாகக் கழிய போதுமான ஓய்வூதியம் அவசியமாகும். அதற்கு, பழைய முறையிலான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே சரியானதாக இருக்கும். புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம்.

வே. வரதராஜன்,
மகாஜனம்பாக்கம்.

 

கண்கூடு

இன்றைய ஆளுங்கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவித்தது. ஆனால், தற்போது தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பது கண்கூடு. இந்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், நிதிநிலைமை மேலும் மோசமடையும். எனவே, அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வற்புறுத்தாமல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்க வேண்டும். அரசின் நிதிநிலைமை மேம்பட்ட பின்னர் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திக்கலாம். அதுதான் நாட்டுக்கு நல்லது.

மா. தங்கமாரியப்பன்,
கோவில்பட்டி.

 

சாத்தியமற்றது

அரசின் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செலவிடப்படுகிறது. இதனால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாத நிலை அரசுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் பழை ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது. கரோனா காலத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் இன்னும் சீரடையாத நிலையில், அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, பழைய ஓய்வூதியம் தேவை என்கிற கோரிக்கையை அரசு ஊழியர்கள் கைவிட வேண்டும்.

குரு. பழனிசாமி,
கோயமுத்தூர்.

 

எளிதல்ல

பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும்போதே அவருக்கான பணிப்பயன்களைக் கொடுத்தாலே போதும். படி உயர்வு என்பது இல்லாமல், ஓய்வு பெறுபவரின் பணிக்கு ஏற்றவாறும், அவர் தனது முதுமைக் காலத்தை கண்ணியமாகக் கழிக்கும் வகையிலும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினால் போதும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அரசு அனைத்து இலவசங்களையும் நிறுத்திவிட வேண்டும். இலவசங்களால் நிதி வீணாவதை விட, ஓய்வூதியதாரர்களுக்கு தொகை தர வேண்டியது முக்கியம்.

மகிழ்நன்,
கடலூர்.

 

கடமை

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியாகவும், கௌரவமாகவும் வாழ வழிசெய்ய வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் இப்போது இருக்கிற புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அப்படி ஒரு கெளரவமான வாழ்வை நடத்த இயலாது. பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்களை விட புதிய ஓய்வூதிய திட்டத்தில் பலன்கள் குறைவாகவே கிடைக்கும். மேலும், தனியார் நிறுவனங்களிடம் ஓய்வூதிய நிதிமேலாண்மையை ஒப்படைப்பதன் மூலம், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம், அரசு பங்களிப்பு பணம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் இல்லை. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை. 

துளிர்,
மதுரை.

 

சாட்சி

அரசுத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு அவர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50 விழுக்காடாவது ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும். இல்லாவிடில் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களே சாட்சி. ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர், முதுமையில் அடிப்படைத் தேவைகளுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிவிட்ட மருத்துவ செலவினங்களையும் எதிர்கொள்வதற்காகவும்தான். இது பழைய நடைமுறைதானே.

உ. இராசமாணிக்கம்,
ஜோதி நகர்.

 

நியாயமற்றது

தற்போது அரசு ஊழியர்களின் ஊதியம், ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், பணியில் இருக்கும்போது தங்களின் ஓய்வூதியத்திற்கு நல்ல காப்பீடுகளை தெரிவு செய்யும் வாய்ப்புகளும் அதிகம். அப்படி இருக்க பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான கோரிக்கை நியாயமற்றது. பல திட்டங்களின் மூலம் நிதிச்சலுகைகளை அனுபவிப்போரும் அரசு ஊழியர்களே. ஒரு ராணுவ அதிகாரியை விட அரசு ஊழியரின் ஊதியமும், பணிப் பாதுகாப்பும் அதிகம். இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதே நாட்டுக்கு நல்லது.

சோம. இளங்கோவன்,
தென்காசி. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT