விவாதமேடை

"அரசுக் கல்லூரிகளில் பெண்களுக்கு காலையிலும் ஆண்களுக்கு மாலையிலும் வகுப்புகள் நடத்த அரசு பரிசீலனை செய்வது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

18th May 2022 04:26 AM

ADVERTISEMENT

பாதுகாப்பு
 அரசுக் கல்லூரிகளில் பெண்களுக்கு காலையிலும் ஆண்களுக்கு மாலையிலும் வகுப்புகள் நடத்த அரசு பரிசீலிப்பது சரியானதே. பெண்கள் காலை வகுப்புகளில் பங்கு பெறுவது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். மாணவர்கள் காலையில் ஏதாவது பகுதி நேர பணியில் ஈடுபடலாம். மாணவியரும் மாலையில் வீட்டுக்கு வந்துவிடுவதால், பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை எடுக்கலாம். வீட்டு வேலைகளிலும் ஈடுபடலாம். பெண்கள் கல்லூரி வகுப்பு முடிந்து மதியமே வீட்டுக்கு வந்து விடுவார்கள் என்பதால் அது பெற்றோருக்கு பெரும் நிம்மதியைக் கொடுக்கும். மொத்தத்தில் இது நல்ல முடிவுதான்.
 கே. விஸ்வநாதன், கோயமுத்தூர்.
 நன்மை
 இப்போதே பெரும்பான்மையான அரசுக் கல்லூரிகள் காலை, மதியம் என இரு வேளைகளில் ஷிப்ட் முறையில்தான் செயல்படுகின்றன. மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் காலையில் மாணவிகளுக்கும் மாலையில் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெற்றால் அது எல்லோருக்கும் நன்மையளிப்பதாக இருக்கும். பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால், பெரும்பான்மையான தனியார் கல்லூரிகள் ஏற்கெனவே மகளிருக்கென தனியேதான் செயல்படுகிறது. கிராமப்புறத்திலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகள் மாலைக்குள் வீடு திரும்ப முடியும்.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 சரியல்ல
 மாணவிகள் காலையிலும், மாணவர்கள் மாலையிலும் கல்லூரிக்கு வந்தாலும் ஆசிரியர்கள் அங்கேயேதானே இருப்பார்கள்? அவர்கள் காலையில் மாணவிகளுக்கு நடத்தும் பாடத்தையே மாலையில் மாணவர்களுக்கும் நடத்த வேண்டுமா? அப்படியானால், கற்றல் - கற்பித்தல் சீராக இருக்குமா? மாணவ - மாணவியருக்கு தனித்தனி வகுப்புகள் என்றால், அவர்கள் குழுவாக சேர்ந்து கற்க இயலாமல் போகும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றால், வகுப்பறைகளில் போதிய இடைவெளியுடன் இருக்கைகளை அமைப்பதே சிறந்தது. தனித்தனி வகுப்புகள் என்கிற முடிவு சரியல்ல.
 சி. கஸ்தூரிரத்தினம், மதுரை.
 கவனச் சிதறல்
 மாணவ மாணவியர் சேர்ந்து பயில்வது என்பது பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், இருபாலரும் போட்டி போட்டுக்கொண்டு கல்வி கற்பதற்கும் கொண்டுவரப்பட்ட திட்டம்தான். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாணவர் உலகம் வேறு மாதிரியாக இருக்கிறது. இருபாலரும் ஒரே வகுப்பில் பயில்வதால், நிச்சயமாக இருபாலருக்குமே கற்றலில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது அவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பை உருவாக்கிவிடும். அது இருபாலரும் இணைந்த கல்வி என்ற நோக்கத்தையே சிதைத்துவிடும். எனவே, தனித்தனியே வகுப்புகளை நடத்துவதே நல்லது.
 பா. இராமகிருஷ்ணன், சிந்துபூந்துறை.
 வரவேற்கத்தக்கது
 அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களே படிக்கின்றனர். அவர்களில் பலர் தங்கள் பொருளாதார சூழல் காரணமாக பகுதி நேர வேலைக்குச் செல்லும் நிலையில் உள்ளனர். இது போன்று சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்தால், அவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிலவும் உதவியாக இருக்கும். இருபாலாரும் தனித் தனியே கல்வி கற்கும்போது, தேவையற்ற பிரச்னைகள் நிகழாமல் தவிர்க்க இயலும். எனவே மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே வகுப்புகள் நடத்துவது வரவேற்கத்தக்கதே.
 எம். சங்கீதா, பட்டுக்கோட்டை.
 சோதனை முறை
 இதனை வரவேற்கலாம். இந்த திட்டத்தை ஒரே நேரத்தில், மாநிலம் முழுதும் உள்ள கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, முதலில் சோதனை முறையில் பெருநகரங்களில் உள்ள கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தலாம். பின் படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இந்த நடைமுறையால் பாலியல் சீண்டல்கள் குறையும். புதிதாக கல்லூரிகளையும், பள்ளிகளையும் கட்டுவதற்கான செலவு மிச்சப்படும். கூடுதல் மாணவ-மாணவியருக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். பேருந்துகளில் காலை நேர நெரிசல் குறையும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 மகிழ்ச்சி
 இது சரியான பரிசீலனையே. இதனால் அரசுக் கல்லூரிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. அரசுக்கு இதனால், கூடுதலாக செலவு எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு கட்டணத் தொகையும் கூடுதலாக கிடைக்கும். தொழிற்சாலைகள் 24 மணி நேரம் இயங்குவது போல கல்வித்துறையும் 24 மணி நேரம் இயங்க ஆரம்பித்தால் இடமில்லை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும். கல்வித் துறை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த திட்டம் உதவும்.
 எஸ். காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 தயக்கம்
 இது வரவேற்கத்தக்கது. இது நடைமுறைக்கு வந்தால், பெண்களை கல்லூரிக்கு அனுப்பி படிக்கவைக்க யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய பெண்களை தைரியமாக உயர்கல்வி படிப்பதற்கு அனுப்புவார்கள். ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளில் தங்களது பெண் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகிறார்கள். பதின்பருவத்தில் ஏற்படும் சிக்கல்களால் கல்லூரியில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக கல்லூரி நேரத்தில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி வகுப்புகள் நடத்துவதில் தவறேதும் இல்லை. மாணவர்களும் இதனை வரவேற்பார்கள்.
 மா. பழனி, தருமபுரி.
 மாறுதல்
 காலையில் பெண்களுக்கும் மாலையில் ஆண்களுக்குமாக வகுப்புகள் நடத்த அரசு பரிசீலித்து வருவது சரியே. இதன் மூலம் பெண்களும், ஆண்களும் அதிக அளவில் வகுப்புகளில் சேர்ந்து படிக்க இயலும். கல்லூரி தொடங்கும் நேரத்தில் பேருந்தில் நெரிசலோடு பயணிக்கின்ற சூழல் தவிர்க்கப்படும். பெண்களுக்கு வகுப்பு நடத்தும் பெண் பேராசிரியர்களும் பகல் நேரத்திலேயே வீட்டிற்குச் செல்லவும் வாய்ப்பு உருவாகும். இருபாலினத்தாரும் இரு வேளையும் படித்து கொண்டிருக்கின்ற சூழலிலிருந்து இது சற்று மாறுதலைத் தந்தாலும் பெண்களுக்கு இது பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 நிம்மதி
 இது சரியான முடிவு. காலையில் தொடங்கி மதியத்திற்குள் பெண்களுக்கான வகுப்புகள் முடிந்து விடுமாதலால், அவர்கள் பகல் பொழுதிலேயே தங்கள் வீட்டிற்கு சென்று விடுவர். இது அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த நிம்மதியைத் தரும். மேலும், மாணவிகளுக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வினைக் கொடுக்கும். மாணவிகள் மாலையில் வீட்டில் இருப்பதால், பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து தங்கள் திறமைக்கு ஏற்ற வகையில் வருமானமும் ஈட்டலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு அருமையான யோசனையாகும். அரசு விரைவில் இதனை நடை
 முறைப்படுத்த வேண்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 ஏற்கத்தக்கதல்ல
 ஆணுக்கு பெண் சமம் என்று வாழும் சமூகத்தில் கல்லூரியில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும், பெண்களுக்கு மற்றொரு நேரத்திலும் வகுப்பகளை நடத்துவது என்கிற முடிவு ஏற்கத்தக்தக்கதல்ல. கல்லூரியில் பாலியல் வன் கொடுமைகள் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்வி கற்பிப்பது மட்டுமே கல்லூரியின் நோக்கமல்ல. ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாத கல்வி நிலையங்கள் பயனற்றவை. தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசு அனைவருக்கும் பொதுவானது. அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 நிரந்தரத் தீர்வு
 அரசுக் கல்லூரிகளில் பெண்களுக்கு காலையிலும், ஆண்களுக்கு மாலையிலும் வகுப்புகள் நடத்த அரசு பரிசீலனை செய்வது என்பது மீண்டும் கற்காலத்தை நோக்கி அரசு பயணிப்பதையே காட்டுகிறது. பிரச்னைகளைத் தவிர்க்க அரசு முயல்கிறதே அன்றி, பிரச்னைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாகத் தெரியவில்லை. நாட்டில் ஆண்களுக்கு என்றும், பெண்களுக்கு என்றும் தனித்தனி கல்லூரிகள்இருக்கின்றன. இருபாலருக்கான கல்லூரிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடத்துவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் சிரமம்தான் ஏற்படும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT