விவாதமேடை

"தமிழகத்தில் வெப்பம் தகித்து வரும் நிலையில் 9-ஆம் வகுப்பு வரை கோடை விடுமுறையும் அனைவருக்கும் தேர்ச்சியும் வழங்கலாமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

தவறான கருத்து
 இக்கருத்து முற்றிலும் தவறானது. இரண்டாண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போதுதான் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். இணையவழியில் படித்ததால் பாடங்களை சரியாகப் புரிந்துகொள்ளாத நிலை, மன அழுத்தம் இவற்றோடு வரும் மாணவர்கள் தொடர்ந்து வகுப்பில் இருந்தால்தான் பாடங்களைப் புரிந்து படிக்க முடியும். மேலும், தற்போது மாணவர்களிடையே வன்முறைப் போக்கு பெருகியுள்ளது. எனவே, மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அளித்து தேர்வில்லா தேர்ச்சியும் அளித்துவிட்டால், மாணவ சமுதாயம் சீர்திருத்த இயலாத நிலைக்குச் சென்றுவிடும். எனவே, பள்ளியில் நேரடிக் கல்வியைக் கற்பதே நல்லது.
 கே. விஸ்வநாதன், கோயமுத்தூர்.
 நியாயமல்ல
 ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்
 கள் அனைவருக்கும் தேர்வில்லாமல் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமல்ல. கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பது வழக்கம்தான். அடுத்த ஆண்டும் கோடை வெப்பம் அதிகம் இருந்தால் அப்போதும் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க முடியுமா? மேலும், இந்த ஆண்டு விடுமுறை அளித்துப் பழகிவிட்டால், வரும் ஆண்டுகளிலும் மாணவர்களும், பெற்றோரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவார்கள். எனவே, மாணவர்களின் கல்வி விஷயத்தில் தேர்வில்லாமல் தேர்ச்சி என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.
 கலைப்பித்தன், கடலூர்.
 மீண்டு வரும் கல்வி
 தமிழகத்தில் வெப்பம் தகித்து வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை கோடை விடுமுறையும், அனைவருக்கும் தேர்ச்சியும் வழங்குவது கூடாது. ஏற்கெனவே கரோனா தீநுண்மியால் மாணவர் கல்வி முடங்கி விட்டது. தற்போதுதான் ஓரளவு மீண்டு வரும் நிலையில் வெப்பத்தைக் காரணம் காட்டி மீண்டும் கல்வியை முடக்க நினைப்பது தவறு. விடுமுறை அளித்தால், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஊர் சுற்றுவதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். உழைக்காமல் ஊதியம் பெற முடியாது; தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலைப்பாடே சரி. கட்டாயப்படுத்தாமல் கல்வி வளராது.
 தெ. முருகசாமி, புதுச்சேரி.
 கேள்விக்குறி
 இரண்டு ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதப் போகிறார்கள். அனைவரும் தேர்ச்சி என்ற முடிவு எடுத்தாலும், மாணவர்களுக்கு தேர்வு என்ற ஒன்று வைத்தால்தான் கொஞ்சமாவது அவர்களுக்குப் படிக்கத் தோன்றும். குறுகிய இடைவெளியில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்க இருப்பதால் மனதளவில் அவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள இந்த தேர்வுகள் உதவும். மேலும், தேர்வுக்காக அவர்கள் பள்ளிக்கு வரப்போவது ஐந்து நாட்கள் மட்டுமே. வெயிலை காரணம் காட்டி தேர்வுகளை நடத்தாமல் போவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 இன்னல்கள்
 கரோனா காரணமாக தற்போது இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்தும், கரோனாவின் அடுத்த அலையிலிருந்து காத்துக்கொள்ளவும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையை உடனே அமல்படுத்தலாம். ஆனால், தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பது கூடவே கூடாது. அது மாணவர்களின் படைப்பாற்றலை குறைத்து விடும். கோடைக்காலத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பு ஏற்பாடு செய்து தேர்வு நடத்துவதே நல்லது. தேர்வின்றி தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி கற்கவோ வேலைவாய்ப்பு தேடியோ செல்லும்போது பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
 ம. குழந்தைவேலு, கோவிலம்பாக்கம்.
 உறுதுணை
 பள்ளிகள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கல்விநிலை பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் கோடை வெப்பத்தைக் காரணம் காட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தேவையற்றதாகும். மேலும், தேர்வுகளை நடத்தாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று முடிவெடுப்பதும் மாணவர்களின் மேல்நிலை கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 9-ஆம் வகுப்பு என்பது மேல்நிலைக் கல்விக்கு அடிப்படையாக உள்ள நிலை. எனவே, மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி அதனடிப்படையில் தேர்ச்சிப் பெறச்செய்வதே மாணவர்களின் உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்கும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 முன்னுதாரணம்
 கோடை வெயிலைக் காரணம் காட்டி ஒன்பதாம் வகுப்பிற்குக் கோடை விடுமுறையும் அனைவருக்கும் தேர்ச்சியும் வழங்குவது தவறு. இது கரோனா காலத்திற்குப் பின் பள்ளிக் கல்வி மேம்பட அரசு எடுத்த முயற்சிகளை மாசுபடுத்துவதாகும். அரசுப் பள்ளிகளில் பாடங்களைக் குறைத்ததும், மாநில கல்விஆராய்ச்சி நிறுவனம் புதிய பயிற்று முறைகளை நடைமுறைப்படுத்தியதும் உரிய காலத்தில் தேர்வுகளை நடத்திவிட வேண்டும் என்பதற்காகவே. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தேர்வுகளை நடத்தவில் லையென்றால் வரும் காலங்களிலும் அனைவருக்கும் தேர்வில்லாமல் தேர்ச்சி வேண்டும் என்கிற தவறான முன்னுதாரணமும் ஏற்பட்டு விடும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 காலநிலை
 மாணவர்களுக்கு வகுப்புகளையும், இறுதி தேர்வையும் மே மாதத்தில் நடத்தாமல், இந்தக் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புவரை மே மாதம் முழுவதும் கோடை விடுமுறையும், அனைவருக்கும் தேர்ச்சியும் வழங்கலாம். இனி வருங்காலங்களில் காலநிலை மாற்றத்தால் நீண்ட கோடைக் காலம் அமைவதற்கும், அதிகபட்ச வெப்பநிலை நிலவுவதற்கும் சாத்தியங்கள் அதிகம். ஆகவே, பள்ளி இறுதித் தேர்வை மட்டும் நம்பி தேர்ச்சி வழங்காமல், கல்வியாண்டு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றி மாணவர்களை மதிப்பீடு செய்து வந்தோமேயானால் பள்ளி இறுதித்தேர்வை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் எழாது.
 ஏ. ராஜசேகரன், அம்பாசமுத்திரம்.
 விபரீத விளைவு
 இது தவறான முடிவாகும். கடுமையான வெப்பம் என்ற ஒரே காரணத்திற்காக 9-ஆம் வகுப்பு வரை கோடை விடுமுறையை அறிவிப்பதும், தேர்வுகளை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பதும் விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏற்கெனவே பள்ளி நாட்கள் வீணாகி, பாடங்கள் சரிவர நடைபெறாத நிலையே உள்ளது. இந்நிலையில், தற்போது தேர்வு இல்லாமல், அனைவரும் தேர்ச்சி என்பது அறிவிப்பது மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் தாழ்த்தி விடும். இந்த முடிவு, அவர்களுடைய கற்றலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 சவால்
 கடந்த இரு ஆண்டுகளாக நேரடி வகுப்புக் கல்வி இல்லாததால் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு இருந்து வந்தது. அந்தக் குறைபாட்டை நீக்கி தற்போது மாணவர்களை வாசிக்கவும், எழுதவும் பழக்குவதென்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால் மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி வழங்கலாம். மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு வந்தவுடன் அதற்கு தகுந்தாற்போல் அவர்களை பயிற்றுவிக்க இயலும். அண்டை மாநிலங்களில் தேர்ச்சியுடன் கோடை விடுமுறை வழங்கியிருக்கின்ற சூழ்நிலையில் நாமும் தேர்வை நடத்தி விடுமுறை அறிவிப்பதே நல்லது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 சித்திரவதை
 மே மாதம் எல்லா மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து தேர்வு நடத்துகிறோம் என்ற பெயரில் சித்திரவதை செய்கிறார்கள். இந்த கல்வியாண்டில் சில மாதங்கள் மட்டுமே முழுமையாக பள்ளிகள் செயல்பட்டிருக்கின்றன. இந்த குறுகிய காலத்தில் தொடக்கக்கல்வி மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தி எதை சோதித்தறிய போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவரும் தேர்ச்சி என்ற நிலை இருக்கிறது. இப்போது தேர்வின் மூலம் யாரை தேர்ச்சி பெறாமல் செய்துவிட முடியும் என்பதை யோசிக்க வேண்டும். அனைவருக்கும் தேர்வில்லாமல் தேர்ச்சி வழங்குவதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.
 மா. பழனி, தருமபுரி.
 ஈடுசெய்ய முடியாது
 கடந்த இரண்டாண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படாததால் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த ஆண்டும் தேர்வு இல்லை என்றால் அவர்களின் கல்வியில் ஏற்படும் சரிவை எக்காலத்திலும் ஈடுசெய்ய முடியாது. கோடைக்காலம் என்றால் வெப்பம் கடுமையாகத் தான் இருக்கும். அதற்காக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடிக்கலாமா? தேர்வு என்றால்தான் இப்போது மாணவர்கள் படிக்கிறார்கள். தேர்வு மட்டும் இல்லை என்றால் புத்தகத்தையே மறந்து விடுவார்கள். எனவே,தேர்வில்லாமல் தேர்ச்சி வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT