விவாதமேடை

"வரும் கல்வியாண்டு முதல், 9, 10 வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் இடம்பெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

8th Jun 2022 03:53 AM

ADVERTISEMENT

 ஏற்கத்தக்கதல்ல
 வரும் கல்வியாண்டு முதல் 9,10 வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் இடம்பெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது சரியல்ல. பள்ளிப் படிப்பு படிக்கும்போதே தொழிற்கல்வி படிக்கிற வாய்ப்பு கிடைப்பதால் சுய வேலைவாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வகையில் டெய்லரிங், வேளாண்மை, மின் சாதனங்கள் பழுது பார்த்தல், ஆடை வடிவமைத்தல் போன்றவை 9,10 வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெறாது என்பதற்கு ஒரே காரணம், போதிய ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தாததுதான். இம்முடிவு ஏற்கத்தக்கதல்ல.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 சரியான முடிவு
 9, 10 வகுப்புகளுக்கு தொழில் கல்வி அளித்து அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து அவர்களை தொழிற்சாலை வேலைக்கு அனுப்ப முடியுமா? பதினொன்றாம் வகுப்பில் தொழிற்கல்வி பிரிவு உள்ளது. அதை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும். மேலும் பதினொன்றாம் வகுப்பில் இருந்து மாணவ மாணவியருக்கு வாரம் ஒரு சிறப்பு வகுப்பில் அந்தப் பகுதிக்கு ஏற்றவாறு ஏதாவது தொழிலை கற்றுத் தரலாம். ஆகவே வரும் கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளுக்கு தொழில் கல்வி பாடத்திட்டம் இடம்பெறாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது சரியான முடிவு.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 பதற்றம்
 மாணவர்கள் 10-ஆம் வகுப்பு வரை எல்லா அடிப்படை செய்திகளையும் அறிந்து பிறகு 11-ஆம் வகுப்பிலிருந்து தொழில்நுட்ப அறிவு சார்ந்து படிப்பதுதான் சரியாக இருக்கும். 15 வயதுக்குட்பட்டோர் தொழில்கல்வி பயில சிரமப்படுவார்கள். மாணவர்கள் இயல்பான நிலையில் கல்வியறிவு பெறவேண்டும். கற்றல், கற்பித்தலில் நிர்ப்பந்தம் கூடாது. இவை எல்லாம் மாணவர்களுக்கு பதற்றம் ஏற்படவே வழிவகுக்கும். "எடை குறைவான மயில் தோகையே ஆனாலும் அதிகமாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறிந்துவிடும்' என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆகையால் கல்வித்துறை முடிவு மிகவும் சரியானது.
 என். கோவிந்தராஜன், திருமுட்டம்.
 தொழில் முனைவோர்
 வரும் கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளுக்கு தொழிற்கல்வியை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கியிருக்கலாம். இது மாணவர்களின் படைப்பாக்கத் திறனை கூர்மைப்படுத்த உதவியாக இருந்திருக்கும். இன்றளவும் மாணவர்களை மதிப்பெண்களைக் கொண்டே தரப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கணினி துறையின் வளர்ச்சி தொழிற்கூடங்களில் ஏற்படுத்தியுள்ள நவீன மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக தொழிற்கல்வியை வடிவமைத்து வழங்குவதன் மூலம் வேலை தேடுபவர்களாக இல்லாமல் தொழில் முனைவோர்களாக மாணவர்கள் உருவெடுக்கக்கூடும். தொழில்கல்வியை நீக்கியது சரியல்ல.
 பி.எஸ். ராஜசேகரன், அம்பாசமுத்திரம்.
 சோதனை
 கடந்த ஆட்சியில் பள்ளிகளில் 9,10 வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் சோதனை முறையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அது எதிர்பார்த்த அளவு சேர்க்கை, தேர்ச்சி போன்ற விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மேலும் 15 வயதிற்குட் பட்ட மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் தேவையுமில்லை; அவர்கள் அதைப் புரிந்து கற்கும் திறனுடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது; அவர்கள், மொழி மற்றும் பிறதுறை அடிப்படைப் பாட அறிவைப் பெற்றாலே போதுமானது. எனவே, பள்ளிக்கல்வித்துறை தொழிற்கல்வி பாடப்பிரிவை நீக்கியிருப்பது மிகவும் சரியானதே.
 அ.கருப்பையா, பொன்னமராவதி.
 பயன் தரும்
 வரும் கல்வி ஆண்டு முதல் 9, 10 வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியுடன் சிறிய தொழில் கல்வியைக் கற்பது மிகுந்த பயனைத் தரும். இக்கால இளைஞர்கள் பலருக்கு வீட்டில் செய்ய வேண்டிய சிறிய வேலைகளான தையல், குழாய் பழுது பார்த்தல் போன்றவை கூடத் தெரிவதில்லை. நாங்கள் அன்று கைத்தொழில் வகுப்பின் வழி பயின்ற பாடங்கள் இன்று எங்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன. எனவே, 9,10 வகுப்புகளுக்கு தொழில் கல்வியைத் தொடர்வதே நல்லது.
 நா. குழந்தைவேலு, சென்னை.
 ஐயம்
 இதுவரை 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு அளித்து வந்த தொழிற்கல்வியை திடீரென நிறுத்துவதற்கான காரணம் என்ன? எவ்வளவு சிறிய அளவினாலும், மாணவர்களுக்கு 9,10 வகுப்புகளில் தொழிற்கல்வி அளிப்பதென்பது அவர்களுக்குத் தொழிலின் மேன்மையை உணரச்செய்யும். எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் பயனுடையதாகவும் இருக்கும். மத்திய அரசின் உதவி மற்றும் முந்தைய அரசின் திட்டம் ஆகிய காரணங்களால்தான் 9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி நிறுத்தப்படுகிறதா என்கிற ஐயம் எழுகிறது. அவைதான் காரணங்கள் என்றால், இது மிகவும் வருந்தத்தக்கது.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 மறுபரிசீலனை
 மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தொழிற்கல்வி மிகவும் அவசியமாக பார்க்கப்படும் இன்றைய சூழ்நிலையில் ஏற்கெனவே இருக்கின்ற தொழிற்கல்வி பாடத் திட்டத்தை நீக்குவது சரியாக இருக்காது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்கல்வி மிகவும் அவசியமான ஒன்றாகும். பள்ளி பருவத்திலேயே தொழிற்கல்வியை படிக்க வைத்து மாணவர்கள் வாழ்வில் உயர்வடைய வழிகாட்ட வேண்டும். தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து என்கிற முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 சிரமம்
 வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 9,10 வகுப்புகளுக்கு தொழில்கல்வி பாடத்திட்டம் இடம் பெறாது என கல்வித்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதாக இல்லை. மேனிலை வகுப்புகளிலிருந்து மாணவர்கள் தொழில்கல்வி கற்கத் தொடங்கினால் மிகுந்த சிரமப்படுவார்கள். தொழிற்கல்வி படிப்பை 9-ஆம் வகுப்பிலிருந்து தொடர்வதுதான் மாணவர்களுக்கு நன்கு புரிதலை ஏற்படுத்தும். மேலும் 11-ஆம் வகுப்பிலிருந்து தொடங்கினால், செயல்முறை பயிற்சி முழுவதும் இல்லாமல் சுருக்க வேண்டிய தேவை ஏற்படும். மத்திய அரசிலிருந்து நிதி உதவி கிடைப்பது நிறுத்தப்பட்டாலும் இது தொடர வேண்டும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 அவசியம்
 வரும் கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் இடம்பெறாது என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது சரியே. மாணவர்களுக்கு 11-ஆம் வகுப்பும் 12-ஆம் வகுப்பும்தான் மிகவும் முக்கியமானவை. அப்போது தொழில்கல்வி பாடத்திட்டமும் அவசியமாகிறது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கின்றபோது இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த தொழிற்கல்வி பாடத்திட்டம் தேவையில்லை. ஒரு மாணவனுக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தொழில்கல்வி பாடத்திட்டம் கூடாது. 9, 10 வகுப்புகளில் நீக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 நல்லொழுக்கம்
 பாடப்புத்தக அறிவு மட்டும் ஒரு மாணவனை முழு அறிவு பெற்ற மனிதனாக மாற்றிவிடாது. ஏற்கெனவே நீதிபோதனை வகுப்புகளை நீக்கியதால்தான் மாணவர்களிடையே நல்லொழுக்கம் இல்லாமல் போய்விட்டது. இப்போது தொழில் கல்வியும் வேண்டாம் என்பது சரியல்ல. பாடப்புத்தகத்தை மட்டுமே படிப்பதால் மாணவர்களிடையே சலிப்பும் சோர்வும் உருவாகிறது. அவர்கள், தங்கள் வாழ்க்கைக்குப் பயனளிக்கும் தொழில்கல்வியை விரும்பிக் கற்பார்கள். எனவே, பள்ளிகளில் 9,10 வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டதைத் தொடர வேண்டும்.
 எம். ஜோசப் லாரன்ஸ்,
 சிக்கத்தம்பூர் பாளையம்.
 நியாயமல்ல
 9,10 வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டத்தை ரத்து செய்யும் முடிவு ஏற்புடையதல்ல. 9 அல்லது 10 வகுப்புவரை படித்த மாணவர்கள் மேற்கொண்டு படிக்க இயலாத நிலை உருவானால், தாங்கள் பள்ளியில் கற்ற தொழிற்கல்வியைக் கொண்டு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக்கொள்ள முடியும். அப்படி முடியாவிட்டாலும், ஏதேனும் தொழில் நிறுவனங்களில் பணிக்கு சேர முடியும். பட்டப்படிப்பு படித்தவர்கள் கடைநிலை ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு வேலைவாய்ப்பின்மை மிகுந்த இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதை தடை செய்வது நியாயமல்ல.
 மு. பாஸ்கரன், புதுச்சேரி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT