விவாதமேடை

"தமிழகத்தில் இரு மாதங்களுக்கான அளவீட்டில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பது ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

ஏற்புடையதல்ல
தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பது ஏற்புடையதல்ல. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் மாதாமாதம் மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று கூறியது. அதனை நிறைவேற்றவில்லை. மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது உயர்த்த முடிவெடுத்துள்ளது. அதற்கு மத்திய அரசின் மீது பழிபோடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். மத்திய அரசின் பல முடிவுகளை துணிச்சலாக எதிர்ப்பவர்களால் இதனை எதிர்க்க முடியாதா? மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
பாதிப்பு
மின்துறை நஷ்டத்தில் இயங்குவதால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது அரசு. ஆனால், ஏழை எளிய மக்கள் தாங்கக்கூடிய அளவுக்கு கட்டணத்தை உயர்த்தினால் தவறில்லை. இப்போது திட்டமிடப்பட்டிருக்கும் கட்டண உயர்வு, சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டணம் என ஒவ்வொன்றாக உயர்த்திக்கொண்டே இருப்பது சரியா? மின் உற்பத்தியை தனியாருக்குத் தராமல் அரசே மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம். நிர்வாகத்தை சீர்படுத்தலாம். இவற்றையெல்லாம் செய்தலா இழப்பு குறையும்.
பா. திருநாவுக்கரசு, சென்னை.
தவிர்க்க இயலாதது
தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனையும் மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஆலோசனைகள் பெறப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மின்வாரியம் இப்போது பெருத்த நஷ்டத்தில் இயங்கி வருவது நாம் அறிந்ததுதான். பணியாளர்களுக்கு ஊதியம் தருவதற்குக்கூட போதிய நிதி இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், நாம் பயன்படுத்துகின்ற அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் மின்கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது என்பது புரியும்.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
ஆறுதல்
தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பது ஏற்புடையதல்ல. மின்கட்டணத்தை உயர்த்தவில்லையெனில் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது என்று மத்திய அரசு மீது பழிபோடுவது சரியல்ல. நூறு யூனிட் இலவச மின்சாரம் தொடருமென்ற அறிவிப்பும், 300 யூனிட் வரை உபயோகிப்போருக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்பதும் ஆறுதலான அம்சங்களாகும். இருப்பினும் மின்கட்டண உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்களை நிச்சயம் துயரத்தில் ஆழ்த்தும். இம்முடிவைக் கைவிடுவதே திராவிட மாடல் ஆட்சிக்கு அழகாகும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
கட்டாயம்
தமிழக மின்வாரியம் ஏற்கெனவே கடனில் தள்ளாடுகிறது. மேலும், மின் உற்பத்தி செலவு, உபகரணங்கள் விலை உயர்வு ஆகியவற்றை சரி செய்வதற்கு மின்கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மின்கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்காத வகையில் உயர்த்துவதற்கு அரசு பரிசீலனை செய்வதே நல்லது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் தவறில்லை. இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக ஒரு குறிப்பிட்ட தொகையை மின்வாரியம் வசூல் செய்யவேண்டும்.
க. இளங்கோவன், நன்னிலம்.
சலுகை கூடாது
மின்வாரியத்திற்கு கடன் சுமை அதிகரித்து இருப்பது உண்மைதான். அதற்காக சாமானிய மக்களை பாதிக்கும் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்துவது கூடாது. ஆட்சியாளர்கள் தங்கள் மீது பழி விழும் என யோசிப்பதைத் தவிர்த்து ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சிறிதளவு மின்கட்டணத்தைக் கூட்டலாம். அது போலவே, விரும்புபவர்கள் 100 யூனிட் மின்சாரசலுகையை விட்டுக் கொடுக்கலாம் என்பதைத் தவிர்த்து, குறிப்பிட்ட அளவிற்கு மேல்மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் 100 யூனிட் மின்சார சலுகையை ரத்து செய்யலாம்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
கருணை
அரசு தனியாரிடம் மின்சாரத்தை அதிக விலைக்குக் கொள்முதல் செய்வதால் அதற்கு வட்டி செலுத்துவதிலும், மத்திய அரசின் தொகுப்பிற்கு குறிப்பிட்ட அளவு மின்சாரம் வழங்குவதிலும் நஷ்டத்தையே எதிர்கொள்கிறது. நுகர்வோர் நிலைக் கட்டணத்தில் அனைவருக்கும் விலக்கு; 100 யூனிட் வரை விலையில்லை; சில பிரிவுகளுக்கு மானியம் போன்ற அம்சங்களை வரவேற்கலாம். மேலும், ஒரு மாதத்திற்குரிய கட்டண உயர்வான 27.50-ஐ இரண்டு மாதக்கட்டண உயர்வாக்கி பணம் செலுத்தச் செய்யலாம். தேர்தல் வாக்குறுதிகளை மனதில் கொண்டு அரசு மின்கட்டண உயர்வில் கருணை காட்டவேண்டும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
நிதிச்சுமை
ஏற்கெனவே, சொத்து வரி உயர்வு, குடிநீர் கழிவுநீர் வரி உயர்வு இவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த மின்கட்டண உயர்வு மிகுந்த நிதிச்சுமையை உண்டாக்கும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது வரியில்லா நிதிநிலை அறிக்கை என்று பெருமை பேசிய அரசின் இன்றைய முடிவு சரியா? எடுத்ததற்கெல்லாம் மத்திய அரசின் மீது பழி போடுவது கூடாது. மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்துமாறு சொல்லவில்லை. மின்பகிர்மான மையங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதற்காக நிதியும் வழங்கியுள்ளது. எனவே, மின்கட்டண முடிவை அரசு கைவிட வேண்டும்.
அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
மின்தாக்குதல்
ஏற்கெனவே பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு இவற்றால் லட்சக்கணக்கான நடுத்தர, ஏழைக்குடும்பங்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், மின் கட்டண உயர்வு அவற்றின் மீது தாங்க இயலாத சுமையை ஏற்படுத்தும். திமுக தேர்தல் அறிக்கையில் மின் நுகர்வு வீடுகளில் மாதந்தோறும் கணக்கெடுக்கப்படும் என்ற உறுதிமொழி இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. மின்கட்டண உயர்வு என்பது சாமானிய மக்களுக்கு மின்தாக்குதலாக இருக்கும். மின்வாரிய இழப்பை ஈடுகட்ட மக்களின் தலையில் கட்டண உயர்வை சுமத்துவது வாக்களித்தவர்களுக்கு அரசு தரும் பரிசாகும்.
உ . இராசமாணிக்கம், கடலூர்.
அநியாயம்
தமிழ்நாட்டில் இருமாதங்களுக்கான மின்கட்டணத்தை அரசு அநியாயமாக உயர்த்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக தனது தேர்தல் அறிக்கையில், இருமாத மின்கட்டண பில்லிங் முறையை ரத்து செய்து விட்டு, மாதந்தோறும் மின்கட்டண பில்லிங் முறை அமல்படுத்துவோம் என்று உறுதி அளித்தது. ஆனால், இருமாத மின் கட்டண கணக்கீட்டு முறையை ரத்து செய்யாமல் இருப்பதோடு, ரூ. 55 முதல் ரூ. 1,130 வரை கட்டணத்தை உயர்த்தியும் இருப்பது அநியாயமானது. மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை அஞ்சாமல் செய்துள்ளது தமிழக மின்வாரியம். இம்முடிவு ஏற்புடையதல்ல.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
கேள்விக்குறியே
தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால் இந்த மின்கட்டண உயர்வு இந்த அவசியமான ஒன்றுதான். மேலும், மத்திய அரசு மின்பகிர்மானங்கள், மின் ஓட்டங்கள், ஸ்மார்ட் மீட்டர் போன்ற எல்லாவற்றையும் நிர்மாணிக்க வேண்டுமென மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. அதற்காக மாநிலங்களுக்கு ரூ. 35,000 கோடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதையெல்லாம் செய்தாலாவது மின்துறை கடனில் இருந்து மீளுமா என்பது கேள்விக்குறியே. இன்றைய காலகட்டத்தில் இந்தமின் கட்டண உயர்வு ஏற்புடையதுதான்.
ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.
விழிப்புணர்வு
அனைத்துத் தரப்பு மக்களும் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, கொடிய கரோனா நோய்த்தொற்று தாக்குதலால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான மின்கட்டண உயர்வு ஏற்புடையதல்ல. தேர்தல் நேர வாக்குறுதியில் அளவற்ற இலவச திட்டங்களை அள்ளி வீசியது திமுக. ஆட்சிக்கு வந்தபின், அவற்றை நிறைவேற்றுவதற்காக தேவையற்ற செலவினங்களை உண்டாக்கியது. மின்வாரியத்தில் மின்சிக்கன விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கே. ராமநாதன், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT