விவாதமேடை

"தமிழக அரசு, ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

20th Jul 2022 04:48 AM

ADVERTISEMENT

தவறான போக்கு
 தமிழக அரசு, ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பது சரியல்ல. அரசின் போக்குவரத்துத் துறை கடனில் சிக்கியிருப்பதைக் காரணமாகக் கூறுவதை ஏற்க முடியாது. போக்குவரத்துத் துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகளைக் களைந்து வருவாய் பெருகுவதற்கான வழிமுறைகளை அரசு கண்டறிய வேண்டும். நஷ்டமடையும் துறையை தனியாருக்கு விடுவது என்பது தவறான போக்காகும். தனியார் துறை லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும். அரசுத் துறையில் இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய மக்கள் சேவை என்கிற நோக்கம் தனியாரிடம் சிறிதும் இருக்காது.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 வரவேற்கத்தக்கது
 தற்போது பெரும்பாலான அரசுப் பேருந்துகள் பழுதடைந்திருக்கின்றன. பேருந்து முழுக்க குப்பைகள் நிறைந்திருக்கின்றன. மழைக்காலத்தில் பேருந்து உள்ளே தண்ணீர் சொட்டுகிறது. மக்கள் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியவில்லை. அவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் நல்ல முறையில் பராமரிப்பார்கள். ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்வார்கள். பேருந்துகளின் வருவாயைப் பெருக்குவதில் நாட்டம் கொள்வார்கள். சரியான நேரத்திற்கு பேருந்துகள் புறப்படும்; குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று சேரும். மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். அரசின் முடிவு வரவேற்கத்தக்கதே.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 பாதிப்பு
 பேருந்துகளை தனியாருக்குக் கொடுப்பதால் அரசுக்கு போக்குவரத்துத் துறையில் ஏற்படும் நஷ்டம் குறையலாம். ஆனால், அதே வேளையில் வருவாய் குறைவாக வரக்கூடிய வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை நிச்சயம் இயக்க மாட்டார்கள். அரசு போக்குவரத்து என்பது மக்களுக்கான சேவைப் பணி. வருமானம் குறைந்த ஏழை எளிய மக்கள்தான் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணிக்கிறார்கள். மகளிர் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்க அரசு வழிசெய்திருக்கிறது. தனியாரிடம் இதை எதிர்பார்க்க முடியாது. பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு என்பது மக்களை பாதிக்கக்கூடிய செயல்.
 ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 மக்கள் சேவை
 இந்தக் கேள்வி எழுந்த மறுநாளே போக்குவரத்துத் துறை அமைச்சர்அரசுப் பேருந்துகள் தனியார்மயம்ஆக்கப்படாது என்று அறிவித்திருக்கிறார். இருப்பினும், மக்கள்சேவைக்காக பல முதலாளிகளிடமிருந்து அரசுடமையாக்கப்பட்ட இத்துறையை மீண்டும் தனியாருக்குக் கொடுக்க முன்வந்தால் அது எப்படிச் சரியாகும்? மத்திய அரசு அரசுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நம் மாநில அரசு, அதே முறையைப் பின்பற்றலாமா? மக்கள் சேவைக்கு மதிப்பளிக்கும் அரசு இது போன்று தனியாருக்கு தாரைவார்க்கும் செயலைச் செய்யாது. அப்படிச்செய்வது கண்டனத்திற்குரியது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 நிபந்தனைகள்
 எத்தனை காலத்துக்குத்தான் ஓர் அரசுத் துறை நஷ்டத்திலேயே இயங்க முடியும்? வேணடுமானால், பேருந்துகளை தனியார்வசம் ஒப்படைக்கும் முன்பு அரசு அவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்கலாம். பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை வழங்க வேண்டும். பராமரிப்புப் பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும். அரசு மாணவர்களுக்கு அளித்துள்ள கட்டணமற்ற சேவையைக் கட்டாயம் தொடர வேண்டும். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கத் தயாராக இருப்போர் வசம் அரசுப் பேருந்துகளை ஒப்படைப்பதில் தவறில்லை.
 ஆர். தீனதயாளன், காரமடை.
 கேள்விக்குறி
 தனியாரைப் பொறுத்தவரை, லாபம் தரும் வழித்தடங்களைத்தான் தனியார் விரும்புவர். இந்த "தனியார்' என்போர் அநேகமாக அரசியல் தொடர்புடையவராகத்தான் இருப்பர். அரசுப் பேருந்து தனியார்வசம் சென்றவுடன் மெல்ல மெல்ல கட்டணம் உயர்ந்து விடும். வருமானம் இல்லாத வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். வருமானம் இல்லாததால் சில வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன என்று அறிவிப்பார்கள். மொத்தத்தில் இதனால் பாதிக்கப்படப்போவது ஆட்சியாளர்களுக்ககு வாக்களித்த மக்கள்தான். பேருந்து சேவை தனியார்வசமானால், பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறிதான்.
 நா. குழந்தைவேலு, சென்னை.
 வேறு வழியில்லை
 அந்த காலத்தில் பொதுப் போக்குவரத்து அத்தனையும் தனியார்வசம்தான் இருந்தன. அவர்கள் அதிக லாபம் தரக்கூடிய நகர்ப்பகுதி வழித்தடங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதால், கிராமப்புற மக்கள் போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் போக்குவர்த்து வசதி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அன்று போக்குவரத்துத் துறை நாட்டுடமை ஆக்கப்பட்டது. ஆனால் அரசு போக்குவரத்துத் துறை இன்று நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம் தொடர்ந்து வீணாகிக்கொண்டே இருப்பதைத் தடுக்க அரசுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 காலத்தின் கட்டாயம்
 தமிழக அரசு ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது காலத்தின் கட்டாயம். அரசு போக்குவரத்துத் துறையின் மீது பொது மக்களுக்கு அதிருப்தியே உள்ளது. தனியார் போக்குவரத்துத் துறை தமிழக அரசால் அரசுடைமை ஆக்கப்பட்டபோது தனியார் நிர்வாகத்தினர் தங்களது பேருந்துகளையும், தொழிலாளிகளையும் அரசிடம் ஒப்படைத்தபோது தொழிலாளிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால், இன்று போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும் திருப்தி இல்லை; பொதுமக்களுக்கும் திருப்தி இல்லை. எனவே தனியார்மயமாக்கல் சரியே.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 அரசின் பணி
 அரசுத் துறைகளை தனியார் பொறுப்பில் விட்டுவிட மத்திய - மாநில அரசுகள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவது எதனால் என்பதுதான் புரியவில்லை. பொதுத்துறை நஷ்டத்தில் இயங்குவது எதனால் என்பதனைக் கண்டறிந்து அதனை சரிசெய்வதுதான் அரசின் பணி. அப்படிச் செய்வதுதான் உண்மையான மக்கள் நல அரசாக இருக்க முடியும். நஷ்டத்தில் இயங்குகிறது என்ற காரணத்தைக் காட்டி பல பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு தருவது தனியாரின் வளர்ச்சிக்குத்தான் உதவும். போக்குவரத்து துறையை அரசே நடத்தினால்தான் மக்கள் பயனடைவார்கள். அரசு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 பொறுப்புத் துறப்பு
 தமிழக அரசு, ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது அரசின் பொறுப்புத் துறப்பு என்றே கருதவேண்டியுள்ளது. போக்குவரத்துத் துறையில் நிலவும் முறைகேடுகள், பேருந்துகளுக்கான பாகங்களை கொள்முதல் செய்வதில் நிலவும் ஊழல், கட்டுப்பாடற்ற இலவச பேருந்து பயணங்கள், அரசியல்வாதிகளின் தலையீட்டால் ஏற்படும் குளறுபடி இவற்றையெல்லாம் சரிசெய்தாலே போக்குவரத்துத் துறை நல்ல லாபத்தில் இயங்கும். இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் உள்ளது அரசின் தனியார்மய முடிவு.
 த. முருகவேள், விழுப்புரம்.
 நிதர்சனம்
 தனியார் நிறுவனங்கள் வருவாய் குறைவாக வரும் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க முன்வராது. அதனால், தற்போது போக்குவரத்து வசதி இருக்கும் பல இடங்களுக்கு பேருந்து இல்லாத சூழல் உருவாகும். அது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். தனியார் பேருந்து நிறுவனங்கள், கட்டணத்தை உயர்த்திவிடும். தற்போது அரசுப் பேருந்தில் சில பிரிவினருக்குக் கிடைத்துவரும் சலுகைகள் பறிபோகும். கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்டுவரும் அரசுப் பேருந்துகளால், கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. தனியார்மயத்தால் இந்த வளர்ச்சி தளர்ச்சி அடையும் என்பதே நிதர்சனம்.
 ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.
 சாத்தியமே
 இப்போதே அரசுப் பேருந்துகளில், குறிப்பாக அரசின் சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் அதிகமாகத்தான் உள்ளது. தனியார் பேருந்து என்றால் கட்டணம் அவர்கள் விருப்பம்போல் பல மடங்கு உயர்த்தப்படும். அதனை எவரும் கேள்வி கேட்க முடியாது. பேருந்துகள் ஏழை எளிய மக்களுக்கானது என்கிற நிலை மாறிவிடும். அரசின் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிற அறிவிப்பை அரசு எதற்காக வெளியிட்டது? நிர்வாக சீர்கேடுகள் களையப்பட்டால் போக்குவரத்துத் துறையை நஷ்டத்தில் இருந்து மீட்பது சாத்தியமே.
 கே. விஸ்வநாதன், கோயமுத்தூர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT