விவாதமேடை

"தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

13th Jul 2022 04:45 AM

ADVERTISEMENT

 சரியல்ல
 தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல. ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, இன்னொரு பொதுமுடக்கத்தை மக்களால் தாங்க இயலாது. பெரும்பாலானவர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. மக்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 பா. திருநாவுக்கரசு, சென்னை.
 அலட்சியம்
 கரோனாவின் முதல் அலையின்போதே பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டோம். பொதுமக்களும் அலட்சியமாக இருந்துவிட்டனர். அதனால்தான், இரண்டாம் அலையின்போது ஏராளமான மனித உயிர்களை பலிகொடுக்க நேரிட்டது. இரண்டாவது அலை உருவானபோதும், அரசு பாதுகாப்பு விதிமுறைகளை அறிவித்தது. ஆனால், அந்த பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர். அதனால், மேலும் பல உயிர்களை இழக்க நேரிட்டது. எனவே, மீண்டும் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
 எம். ஜோசப் லாரன்ஸ்,
 சிக்கத்தம்பூர் பாளையம்.
 கட்டுப்பாடு
 மீண்டும் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்துவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, கரோனா தீநுண்மியால் ஏற்படும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க இரு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன. தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அதனால், நோய்த்தொற்றுப் பரவல் இருந்தாலும் உயிரிழப்புகள் அதிகம் இருக்காது என்று நம்பலாம். ஆனாலும், கரோனா கட்டுப்பாடுகளை சற்று அதிகரிக்கலாம். மக்கள் கூடும் எந்த நிகழ்வும் கூடாது என்று அறிவிக்கலாம். மக்களும் முகக்கவசம், சமூக இடைவெளி எனகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
 கலைப்பித்தன், கடலூர்.
 விழிப்புணர்வு
 ஏற்கெனவே பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது, எப்போதும் முகக்கவசம் அணிதல், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைக் கட்டாயமாக்கலாம். நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தாலே கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். தவிர அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வருகையை கட்டுப்படுத்த, அதிகாரிகளே வாரந்தோறும் மக்களைசந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
 உ. இராசமாணிக்கம், ஜோதி நகர்.
 சந்தேகம்
 கரோனா நோய்த்தொற்று பாதிப்பு சற்று குறைய ஆரம்பித்ததும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் மக்கள் கைவிட்டு விடுகின்றனர். அதனால்தான், கரோனா பாதிப்பு முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்து, அவ்வாறு அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியும் அனைத்து மக்களும் இதனைப் பின்பற்றுவார்களா என்பது சந்தேகம்தான். எனவே பொதுமுடக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதே நல்லது.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 காக்கும் வழி
 கடந்த மூன்று அலைகளின்போதே கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் போக்கை நாம் நன்கு புரிந்து கொண்டு விட்டோம். தகுந்த தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்தலும் சுய கட்டுப்பாடுமே முக்கியம். தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவையே போதுமானவையாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புக்களை முறையாகப் பின்பற்றினாலே போதுமானது. பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதே நம்மை கரோனாவில் இருந்து காக்கும் வழியாகும்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 உறுதி
 அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு நீரில் கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாது என்பது உறுதி. அதை விடுத்து அரசாங்கம் மக்களை கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பது சரியல்ல. பெரும்பாலானோர் தங்கள் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிவதில்லை; அபராதத்தொகை செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகவே அணிகின்றனர். மீண்டும் ஒரு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும்.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 இடர்ப்பாடுகள்
 தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்று நிலையானதாக இல்லை. புதுவகையான உருமாற்ற கரோனா தொற்று சில நாள் குறைந்தும் சில நாள் அதிகரித்தும் வருகிறது. சுகாதாரத்துறையும் பொது இடங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. மீண்டும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எவ்வளவு இடர்ப்பாடுகளை சந்திக்க நேரிடும் என்பதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் வேண்டாம் மீண்டும் ஒரு பொதுமுடக்கம்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 என்ன செய்ய இயலும்?
 தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்தான். ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்திக்கொண்டவர்கள், ஒரு தவணை கூட செலுத்திக்கொள்ளாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். எத்தனை முகாம்கள் நடத்தினாலும், சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை. தற்போது உயிரிழப்புகள் குறைந்துவிட்டன என்பது உண்மைதான். அதற்காக மக்கள் அலட்சியமாக இருப்பது சரியா? திடீரென கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அரசாங்கத்தால் என்ன செய்ய இயலும்? பொதுமுடக்கம் அறிவித்தால்தான் நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
 ஆர். முகுந்தன், உறையூர்.
 கட்டுப்படுத்தலாம்
 கரோனா நோய்த்தொற்று தற்போது பரவிவருகிறது என்றாலும், அது ஒரு சிலரைத்தான் பாதிக்கிறது. முக்கியமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பாதிக்கிறது. தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டு மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்கள், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அரசாங்கம் அறிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டால் கரோனா நோய்த்தொற்றை கட்டாயம் கட்டுப்படுத்தலாம்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 கசப்பான அனுபவம்
 கடந்த இரண்டு வருடமாக, கரோனா நோய்த்தொற்று நமக்கு பல கசப்பான அனுபவங்களைத் தந்திருக்கிறது. அப்போது தடுப்பூசி செலுத்தலில் ஆரம்ப நிலையில் இருந்தோம் என்பதால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அவசியமாய் இருந்தது. தற்போது நிலைமை அப்படி இல்லை. பெரும்பாலான மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். மூன்றாம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி உபயோகித்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் போதும்.
 வினோதினி சுப்பிரமணியன், தூத்துக்குடி.
 பின்னடைவு
 தற்போது கரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல் வந்தாலே தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் மனோபாவம் மக்களிடையே இருக்கிறது. மருத்துவ உலகமும் முன்னைவிட எளிதாக கரோனாவைக் கையாளும் வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால் கரோனா பரவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை. மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாகப் பின்பற்றப்படுவதுபோல் பொதுவெளியிலும் பின்பற்றப்பட வேண்டும். பொதுமுடக்கம் பொருளாதாரப் பின்னடைவையே உண்டாக்கும்.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT