விவாதமேடை

"புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

6th Jul 2022 03:48 AM

ADVERTISEMENT

பாதிப்பு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கூறுவது தவறு. புதிய கல்விக் கொள்கை கூடாது என்றால் சட்டரீதியாகத்தான் அதனை நீக்குவதற்குப் போராட வேண்டும். இரு ஆண்டுகளுக்குப் பின்னர் கல்விக்கூடங்களுக்கு வந்திருக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் அமைச்சரே அவர்களைப் போராடத் தூண்டுவது ஏற்கத்தக்கதல்ல. ஜனநாயக நாட்டில் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் குரல் கொடுக்காமல் மாணவர்களைப் போராடத் தூண்டுவது தவறு. இதனை மாணவர்கள்கூட ஏற்க மாட்டார்கள்.
பா. அருள்ஜோதி, மன்னார்குடி.
தவறு இல்லை
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளதில் தவறு எதுவும் இல்லை. புதிய கல்விக் கொள்கையின்படி 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். இது மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை உருவாக்கும். கற்றல் - கற்பித்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்வு வைப்பதை ஏற்கலாம். படிப்பதற்கு முன்பே தேர்வு வைப்பதை ஏற்க முடியாது. மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. மத்திய அரசு திணிக்க முயன்றால் நீங்கள் போராட தயாராக இருக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அமைச்சர் கூறியுள்ளது சரியே.
என். கோவிந்தராஜன், திருமுட்டம்.
பொறுப்பு
மாணவர்களின் இலக்கு என்பது படிப்பு மட்டுமே. அவர்களின் எதிர்கால வாழ்வு வளமாக அமைய வழிகாட்டக்கூடிய படிப்புகளை முடிவு செய்வது, அதனை கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கே உண்டு. ஆட்சியாளர்கள் தான் கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து கல்விக் கொள்கையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் அநீதிகளை எதிர்த்துப் போராடலாம். இந்தக் கல்விக் கொள்கைதான் மாணவர்களுக்கு ஏற்றது என்பதை முடிவு செய்ய வேண்டியது ஆட்சியாளர்களே. மாணவர்களை அமைச்சரே போராட்டத்தில் ஈடுபடுத்துவது நல்லதல்ல.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
பெருமை
கல்வியாளர்களே புதிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்களைப் புரிந்து கொள்ளாமல் வாதம் செய்து கொண்டிருக்கும் நிலையில், மாணவர்களை, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தூண்டுவது முற்றிலும் தவறானது. ஆரம்பக் கல்வியில் கட்டாயத் தாய்மொழிக்கல்வி, ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்விக்கு ஊக்கம், இந்திய பல்கலைக்கழகங்களை உலகத்தரத்துக்கு உயர்த்துவது எனப் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் எவ்வாறு நன்முறையில் அமல்படுத்துவது என்பது குறித்து அமைச்சர் கல்வியாளர்களுடன் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அதுதான் கல்வி அமைச்சருக்குப் பெருமை சேர்க்கும்.
முகதி. சுபா, திருநெல்வேலி.
ஏற்புடையதே
புதிய கல்விக் கொள்கையால் பாதிப்படையப்போவது தமிழக மாணவர்கள்தான் என்று மாநில அரசு கருதுகிறது. மாணவர்களும் புதிய கல்வி கொள்கையால் ஏற்படக்கூடிய பாதகங்களைப் புரிந்து கொண்டு அதற்கு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கலாம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை கூடாது என்று வலியுறுத்தி, தன்னுடைய எதிர்ப்பினை தெரிவித்து இருக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் மாணவர்களும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தங்கள் கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற அமைச்சரின் கருத்து ஏற்புடையதே. மாணவர்கள் குரல் கொடுத்தால் தவறில்லை.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
அழகல்ல
உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கூட்டாட்சியினை அடிநாதமாகக் கொண்டுள்ள நமது குடியரசு அமைப்பில், மத்திய அரசின் முடிவுகளை ஏற்க இயலாதபோது, மாநில அரசு, சட்டத்தின்பால் நம்பிக்கை கொண்டு வழிவகை காணவேண்டுமேயன்றி இது போன்று மாணவர்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசுவது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல. இன்னும் சொல்வதெனில் இவரது சக அமைச்சரவையிலேயே மாற்றுக் கருத்து ஒன்று விவாதத்திற்குள்ளானால் இது போன்று பொது வெளியில் தூண்டுதல் பிரசாரம் செய்வாரா அமைச்சர்?
சி. இரத்தினசாமி,
பொல்லிக்காளிபாளையம்.
உலகத்தரம்
உலகத்தரத்திற்கு நிகராக இந்திய கல்விமுறை இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் உருவானதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை. அதிலுள்ள நிறை குறைகளை ஆராய்ந்து குறைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசை அணுகி சரிசெய்வதுதான் கல்வித்துறை அமைச்சரின் முக்கிய பொறுப்பாகும். நிறை குறைகளை பள்ளி ஆசிரிய பெருமக்கள் மூலமும் பெற்றோர் மூலமும் பெற்று அதன் அடிப்படையில் குறைகளை சரி செய்ய முதலில் மத்திய அரசின் கல்வித்துறையை அணுக வேண்டும். புதிய கல்விக் கொள்கை கூடாதென்று அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கோரிக்கை வைக்கிறார்களே தவிர பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை வைக்கவில்லை.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
கடமை
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அருமையான கொள்கை. தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரும் இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்களின் வாதங்கள் வெறும் எதிர்ப்பு அரசியலின் வெளிப்பாடு என்பது தெளிவு. தமிழகம் இந்தக் கொள்கையை கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் மூலம் நமது இளைய சமுதாயம் பெரிதும் பாதிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்களையோ, திருத்தங்களையோ செய்ய பரிந்துரைப்பதுதான் நல்ல ஒரு மாநில அரசின் கடமையாகும். புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் சிறப்புகளை நமது மாணவர்கள் அடைய வழிகாண வேண்டும்.
சோம. இளங்கோவன், தென்காசி.
ஐயமே
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நன்மை தீமைகள் என்னென்ன என்பது குறித்தும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்குமா என்பது ஐயமே. மாநில நலனை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்பது இயல்பானதுதான். ஆனால், படிக்கும் மாணவர்களை புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் எதற்காக கூற வேண்டும்? மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் பாதகமான அம்சங்கள் ஏதேனும் இருப்பதாக மாநில அரசு கருதினால், அதனை எதிர்க்க மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதே சரியானதாக இருக்கும்.
மா. பழனி, தருமபுரி.
மன்னிக்க இயலாதது
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது தவறான செயல்பாடு. கல்வியாளர்கள், உயர்நிலை அலுவலர்கள், சமூக செயற்பாட்டர்கள் இணைந்து, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள சாதக பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசை சட்ட ரீதியாக அணுக வேண்டும். அதை விடுத்து, புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் சாயம் பூசி அதற்கு மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பலி கொடுப்பது மன்னிக்க இயலாதது. எந்தக் கொள்கையின் அடிப்படையிலான கல்வியையும் மாணவர்கள் கற்பதற்குத் தயாராக உள்ளனர்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
அச்சம்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றி விட்டால் மாணவர்கள் விரும்பும் தரமான கல்வியை அந்தந்த மாநிலமே அளித்துவிடும் என்பதே உண்மை. ஏற்கனவே 75 ஆண்டுகளாக அளிக்காத சிறந்த கல்வியை புதிய கல்விக் கொள்கை எப்படி அளிக்கப் போகிறது என்று மாணவர்கள் சிந்திப்பதோடு, அது மறைமுகமாக ஹிந்தித் திணிப்புக்கும் வழி வகுத்துவிடுமோ என்றும் அவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. கல்வித்துறை என்பது மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறை என்பதனால் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியது மிகவும் சரியே.
என்.வி. சீனிவாசன், சென்னை.
துரதிருஷ்டவசமானது
மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று கோருவது ஏற்கத்தக்கதல்ல. அமைச்சர் இப்படிக் கூறுவது, மாணவர்களை போராடத் தூண்டுவதாகத்தான் பார்க்கப்படும். ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் போல மீண்டும் மாணவர் போராட்டம் நடைபெற வேண்டும் என்று அமைச்சர் விழைகிறாரா? புதிய கல்விக் கொள்கையை ஏற்பதும் மறுப்பதும் மாணவர், பெற்றோரின் விருப்பம். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதபோது அமைச்சர் மாணவர்களைப் போராடத் தூண்டும் விதமாகப் பேசுவது துரதிருஷ்டவசமானது.
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT