விவாதமேடை

"பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படும் கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

26th Jan 2022 04:35 AM

ADVERTISEMENT

 கொள்கை பரப்புக் கழகம்
 தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்காக அமைக்கப்பட்டக் குழுக்களுக்கு கட்சித் தொடர்புடையவர்களே நியமிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பிறகுமா இப்படியொரு சந்தேகம்? "ஒரே தேசம் ஒரே கல்வி' என்கிற தொலைநோக்குப் பார்வை வெற்றி பெற வேண்டுமாயின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்வித் திட்டங்கள் இருப்பதுதான் சரியானதாக இருக்கும். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசிடம் செல்லுமானால் அப்பதவி நியமனத்தில் ஊழல் உருவாகும். பல்கலைக்கழகங்கள் கொள்கை பரப்புக் கழகங்களாக மாறிபோய்விடும்.
 உதயம் ராம், சென்னை.
 தற்போதைய நடைமுறை
 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக திகழும் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டாலும் நீண்ட நடைமுறைகளைக் கடந்து மாநில அரசுடன் கலந்தாலோசித்தே செயல்படுத்தப்படுகிறது. செனட் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேடுதல் குழு விண்ணப்பங்களை பெறுகிறது. அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறார்கள். நேர்காணல் நடத்தப்பட்டு அதிலிருந்து மூன்று பேர் கொண்ட பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்படுகிறது. அதிலிருந்து அவர் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். ஆதலின் தற்போதைய நடைமுறை தொடர்வதே நல்லது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 தேர்வுக் குழு
 துணைவேந்தர்கள் நியமனத்தை மாநில அரசுகள் மேற்கொள்ளக் கூடாது. இதில் ஆளுநரின் தலையீடும் இருக்கக் கூடாது. இவை இரண்டும் தீர்வு வராத நிலைக்கு பிரச்னையைத் தள்ளும். துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல், சிபாரிசு ஆகியவை இருக்கக் கூடாது. தமிழகத்தில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களிடம் இந்த நியமனப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இந்த நியமனம் செய்யும் தேர்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும். துணைவேந்தர்கள் சிறந்த கல்வியாளர்களாகவும் இருக்க வேண்டும்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 ஆய்வு
 துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் போது, மாநில அரசின் இணக்கம் இன்றியும் மத்திய அரசின் விருப்பங்களுக்கு ஏற்பவும் தேர்ந்தெடுக்கப்படும் துணைவேந்தர் செயல்பட வேண்டியுள்ளது. மேலும், பெரும்பாலும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக அல்லாமல் இருப்பதால் மாநில அரசுடன் ஒத்திசைவாக இருப்பதில்லை. தற்போது இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாநில அரசால் நியமிக்கப்பட்டு அதற்கு வேந்தராக முதலமைச்சர் இருக்கிறார். ஆக இந்த அடிப்படையில் ஆய்வு செய்து மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கலாம். இதற்காக சட்டம் மற்றும் விதிகள் மாற்றலாம்.
 ஆர்.எஸ். மனோகரன், முடிச்சூர்.
 தார்மிக நெறிமுறை
 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பார்வையாளராக குடியரசுத் தலைவரும், அந்தந்த மாநில ஆளுநர்கள் வேந்தர்களாகவும் இருக்கிறார்கள். அது போதாதென்று, துணைவேந்தர்கள் நியமனங்களில் மத்திய அரசு தலையிடுவது தார்மிக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது; கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. துணைவேந்தரை தேடும் குழுவிற்கு தலைவரை மத்திய அரசு நியமிக்கிறது. இது ஓர் அதிகார துஷ்பிரயோகமாகும். மாநில நலனுக்கு எதிராக துணைவேந்தர்களை திணிப்பது மாநில அரசுகளுடனான மோதல் போக்குக்கும், அதிகார குவிப்புக்குமே இவை வழிவகுக்கும்.
 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
 பண்பாடு
 இன்றைய உலகலாவிய பொருளாதார போட்டியில், நாம் ஒரே நாடாக ஒற்றுமையாக இருப்பதின் பலன் நிறைய. அதை வரவேற்போம். அதே நேரத்தில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதின் நோக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மாநில மொழி, அவர்களின் தனித்தன்மை, கலாச்சாரம் இவற்றை பாதுகாப்பதுடன் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இதன் தாரக மந்திரம். இவை காக்கப் பட வேண்டும் எனில், அந்தந்த மாநில மொழி, அதன் தொன்மை, கலாச்சாரம், பண்பாடு இவை அறிந்தவர் தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வர வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லது.
 கோவி. சேகர், சென்னை.
 எதிர்காலம்
 லட்சக்கணக்கான மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடும் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டிற்குப் பொறுப்பான துணைவேந்தர் நியமனம் சட்டத்திற்குப் புறம்பாக இல்லாது, நேர்மையுடனும், நியாயத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் உள்நோக்கத்துடன் இந்த முக்கியப் பணியில் மாநில அரசு தலையிடுவது பல்கலைக்கழகங்களின் கல்விசார் மேதமைக்குப் பங்கம் விளைவிப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம், பணியாளர் நியமன முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல்களுக்கும் அடிகோலும் என்பதில் ஐயமில்லை.
 கே. ராமநாதன், மதுரை.
 சரியான நிலை
 மாநில ஆளுநர் நியமிக்கும் குழு பரிந்துரைக்கும் மூன்று நபர்களில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிக்கிறார். இதில் மாநிலத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தை மாநில அரசு மேற்கொள்வதே சரியான நிலையாகும். ஏனெனில் சில சமயங்களில் வேற்று மாநிலத்தவர்கள் கூட நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருப்பதில்லை. மாநில உரிமைகளும் இதனால் பாதிக்கப்படுகிறது. எனவே துணைவேந்தர்கள் நியமனத்தில் மத்திய அரசோ அல்லது அவர்களின் அதிகாரம் பெற்ற அமைப்பின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்சரம்.
 உச்சகட்ட விவாதம்
 துணைவேந்தர் நியமனத்தில் மாமியார்-மருமகள் சண்டை உருவாகியிருப்பது கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும்தான் பிரச்னை. கல்வித்துறைக்கு கெட்ட நேரம். ஆளுநர் வேந்தர் என்றால், கல்வித்துறை அமைச்சர் இணை வேந்தர். அரசு பல்கலைக்
 கழகங்களில் தான் இந்த பிரச்னை. துணை வேந்தரை சரியான நபராக இருப்பின் யார் நியமித்தால் என்ன? அதை விடுத்து நியமனத்தில் குறை கண்டு கொண்டிருப்பின் பல்கலைக்கழக நிர்வாகம் என்னவாகும் என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும். ஆளுநர், வேந்தர் என்பதால் அவர் துணைவேந்தரை நியமிப்பதுதான் முறை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 முழு உரிமை
 மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. முதல்வர் கல்வி அமைச்சர் உட்பட ஒரு சிலரைத் தேர்வுக் குழுவில் உறுப்பினராக அமர்த்த வேண்டும். துணைவேந்தருக்கு விண்ணப்பம் செய்யும் பேராசிரியர்களை இந்தக் குழு ஆய்ந்து அந்த பட்டியலை மாநில முதல்வரிடம் தர வேண்டும். கல்வியாளர்கள் இந்தக் குழுவில் இடம் பெறலாம். அறம் சார்ந்த நேர்மையான வழியில் துணைவேந்தர் முதல்வரால் நியமனம் செய்யப்பட வேண்டும். மாநில ஆளுநர்களை என்ன செய்வது என்ற முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதில் முதல்வருக்கே முழுஉரிமை என்பதை உணர வேண்டும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 வரவேற்கத்தக்கதே
 மாநிலத்தில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சியின் பரிந்துரையின்பேரில் நியமனம் செய்வதுதான் சரியானது. மத்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் துணைவேந்தராக நியமிக்கிறார். இதனால் பதவி மூப்பு அடிப்படையில் கிடைக்க வேண்டிய துணைவேந்தர் பதவி பலருக்கு கிடைக்காமல் போகிறது. மாநில அரசுக்கு உள்ள உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொள்வது தவறு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் துணைவேந்தர்களை நியமனம் செய்ய வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 பொதுப் பட்டியல்
 கல்வித்துறை என்பது பொதுப் பட்டியலில் இந்திய அரசியலமைப்பு வைத்துள்ளது. அவற்றை நீக்கி எப்படி தேர்தல் ஆணையம், சிஏஜி, ஒன்றிய பொதுப் பணியாளர் தேர்வாணையம், மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையம், எவ்வாறு இயங்குகிறதோ அதுபோல உயர் கல்வி சம்பந்தமான முடிவுகள் (புதிய கல்வி கொள்கை) அல்லது பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் போன்ற பணிகளை உள்ளடக்கி ஒன்றிய உயர்கல்வி ஆணையம் மற்றும் மாநில உயர்கல்வி ஆணையம் என பிரித்து தன்னிச்சையாக இயங்க அரசியலமைப்பில் சட்டபூர்வ இயக்கமாக கொண்டு வரவேண்டும்.
 கோபி. இராஜேந்திரன், சங்ககிரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT