விவாதமேடை

"பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

அழகல்ல
 சாமானிய மக்களுக்கு, கல்விக் கடன், சிறு குறு தொழில் கடன், வேளாண் கடன், வாகனக் கடன் ஆகியவற்றை பொதுத்துறை வங்கிகளே வழங்குகின்றன. ஆனால் வாராக்கடன் என்றுதெரிந்தும் வழங்கப்படும் பெருந்தொகை கடன்களே பொதுத்துறை வங்கிகள் அரசுக்கு சுமையாகத் தோன்ற காரணமாகின்றன. இக்கடன்களை வழங்காமலிருக்க இயலாது என்பதையும், வழங்கிய கடன்களை வசூலிக்க இயலாதென்பதையும் ஒப்புக்கொள்வதாகவே பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிர்வாகத்தோல்விக்காக மக்களின் முன்னேற்றத்தை காவுகொடுக்க முன்வருவது ஒரு ஜனநாயக ஆட்சிக்கு அழகல்ல.
 த. முருகவேள், விழுப்புரம்.
 சிரமம்
 இது தவறான முடிவாகும். சாதாரண மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில்தான் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அவற்றை மீண்டும் தனியார்மயமாக்கினால் வசதிபடைத்தோரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டுமே வங்கிகளில் கணக்குத் தொடங்கி, கடன் பெற முடியும். சாதாரண மக்கள் கடன் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும், மாத ஊதியம் பெறுவோர், ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் தங்களின் சேமிப்புக்கு மிகவும் நம்பியிருப்பது அரசுடைமை வங்கிகளையே. வங்கிகள் தனியார்மயமானால் மக்களின் சேமிப்புக்கு போதிய பாதுகாப்பு இருக்காது.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 கண்கூடு
 வங்கித் துறை எப்போதும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் நல்லது. குறைந்த வட்டியில் பொதுமக்களுக்குக் கடன் கொடுத்தல், வாடிக்கையாளர்களின் பணத்துக்குப் பாதுகாப்பு மற்றும் வங்கி ஊழியர்கள் நலன் போன்ற பிரச்னைகளில், தனியாரை விடவும் பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவது கண்கூடு. மத்திய அரசு மேற்கொண்ட உயர் மதிப்பிலான பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, நாட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடுமோ என்று பலரும் அஞ்சியபோது, வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடாமல் காப்பாற்றினர்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 ஒரே வழி
 முன்பெல்லாம் பணம் செலுத்த வேண்டும் என்றாலும், பணம் எடுக்க வேண்டும் என்றாலும் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போது நாம் இருக்கும் இடத்திலிருந்தே வங்கி சேவைகளை எளிதாகப் பெற முடியும். அந்த அளவுக்கு உலகம் இப்போது சுருங்கிவிட்டது. கிராமப்புறத்தில் வசிப்பவர்கள், குறிப்பாக முதியவர்கள் வங்கிச் சேவைகளை எளிதாகப் பெற இயலாத நிலையே உள்ளது. சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் வங்கி சேவைகள் சிறப்பாக அமைய வேண்டும் எனில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது ஒன்றுதான் வழி. எனவே, மத்திய அரசின் தனியார்மய முடிவு சரியானதே.
 எஸ். சிவகாமிநாதன், தூத்துக்குடி.
 வரவேற்கத்தக்கது
 மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பொதுத்துறை வங்கிகளின் நோக்கம்அரசுக்கு நேரடியாக லாபம் கிடைப்பது மட்டுமல்ல, ஏழை எளிய மக்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று வாழ்வை மேம்படுத்திக்கொள்வதும்தான். ஆனால், இப்போதெல்லாம் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்தாத நிலைதான் உள்ளது. வாராக்கடன் என்ற பெயரில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்பட்டால் சாமானிய மக்களும் எளிதாக வங்கிச் சேவையைப் பெற முடியும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 விளைவுகள்
 வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதால் ஏழைகள் விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் போன்றவற்றை எளிதாகப் பெற்றுப் பயனடைய முடிந்தது. இருப்பினும் பெரும் தொழிலதிபர்கள் மிக எளிதாகக் கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர். பொதுத்துறை வங்கிகள் தள்ளாடத்தொடங்கின. அரசு, பொதுத்துறை வங்கிகளில் நடக்கும் தவறுகளை சரிசெய்வதை விட்டுவிட்டு அவற்றை தனியார்மயமாக்க முடிவெடுத்துள்ளது தவறு. யாரெல்லாம் பயனடைவார்கள் என்று கருதி வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டனவோ அதற்கு எதிரான விளைவுகளையே தனியார்மய நடவடிக்கை ஏற்படுத்தும்.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 அடையாளம்
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்றம் செய்ததன் நோக்கமே பொதுமக்களுக்கு வங்கி சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், தரமற்ற சேவை, சிக்கலான நடைமுறை, அலைக்கழிக்கும் கடனுதவி, வாடிக்கையாளர் நலன் பேணாமை போன்றவை பொதுத்துறை வங்கிகளின் அடையாளங்களாகிவிட்டன. ஆட்சியாளர்களுக்கு மட்டும் பயன்படும் விதத்தில் பொதுத்துறை வங்கிகள் இயங்குவதில் என்ன பயன்? வங்கிகளை தனியார் மயமாக்குவதால், மக்களின் வரிச்சுமையாவது குறையும். ஏனெனில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பொதுமக்களின் தலையில்தான் விடிகிறது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 கேள்விக்குறி
 வங்கி கணக்கு அனைவருக்கும் தேவை என்கிற கட்டாயம் உருவாகியுள்ள வேளையில் வங்கிச் சேவைகள் மக்களுக்கு எளிதாக சென்றடைய பொதுத்துறை வங்கிகளே உகந்தது. மேலும் சிறுசிறு அளவிலான கடன்கள் பெறுவதற்கும் பொதுத்துறை வங்கிகளே ஏற்புடையது. சாமானிய, நடுத்தரப் பிரிவினர் வைப்பு நிதியினை பத்திரமாக வைத்திருக்கக் கூடிய வங்கிகள் பொதுத்துறை வங்கிகளே. மக்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கினால் மக்களுடைய சேமிப்புக்கு உள்ள பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே மத்திய அரசு தனது முடிவைத் தவிர்ப்பதே சிறந்தது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 வாய்ப்பு
 அரசின் முடிவு சரியல்ல. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தனியார் வங்கிகளாக இருந்தவற்றைப் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினார். அதனால் சாமானிய மக்களுக்கும் வங்கியின் சேவைகள் எளிதாகக் கிடைத்தன. அதற்கு முன்னர் தனியார் வங்கிகளால் குறிப்பிட்ட ஒருசில முதலாளிகள் மட்டுமே பயனடைந்து வந்தனர். நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னரே எளியவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடங்கவும் அதன் மூலம், கல்விக் கடன், வீட்டுக் கடன் போன்றவை பெறவும் வாய்ப்பு ஏற்பட்டது. கல்விக் கடன் வசதியால் எண்ணற்ற ஏழைக் குடும்பங்கள் பயன் பெற்றன. எனவே தனியார்மயம் தேவையில்லை.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 நிர்ப்பந்தம்
 அரசின் பணி அரசு நிர்வாகத்தை செம்மையாகக் கையாளுவதுதானேயன்றி வியாபார நிறுவனங்களை நடத்துவது அல்ல. பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலான பணியாளர்கள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்வதில்லை. காரணம், தங்களுக்கான பணி நிரந்தரம் என்கிற எண்ணமே. அது மட்டுமல்ல தற்காலத்தில் பொதுத்துறை வங்கிகள் அரசியல்வாதிகளுக்கும், பெருநிறுவன உரிமையாளர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. அதனால், தகுதியற்றவர்களுக்கு கடன் வழங்கி அது வாராக்கடனாக மாறி மக்களின் பணம் விரயமாகிறது. எனவே, பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முடிவு சரியே.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 எதிர்பார்ப்பு
 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க அரசு முடிவெடுத்து இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். நாட்டில் உள்ள அனைத்துமே தனியார்மயம் ஆகிவிட்டதென்றால் அரசு தனது கட்டுப்பாட்டில் எதைத்தான் வைத்திருக்கப்போகிறது என்று தெரியவில்லை. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவங்களில் குறைபாடுகள்
 இருந்தால் அவற்றை நீக்கி பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட அரசு வழிகாண வேண்டும். பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவு கைவிடப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
 மா. பழனி, தருமபுரி.
 யார் பொறுப்பு?
 சிறு முதலீட்டாளர்களும் பொதுமக்களும் வங்கியில் சேமிக்கும் பணத்தை, பெருந்தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடனாக வழங்குகின்றன. ஆனால், பெருநிறுவனங்கள் கடன்தொகையை முறையாகத் திருப்பிச் செலுத்துவதில்லை. அதற்குக் காரணம் பெருநிறுவனங்களுக்கு உள்ள அரசியல் தொடர்புதான். வங்கியில் சிறிய தொகை கடன் வாங்கிய விவசாயியின் நிலம் ஜப்தி செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிய தொழிலதிபரின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு? வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கூடாது.
 என்.வி. சீனிவாசன், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT