விவாதமேடை

"மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்கிற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

வரவேற்கத்தக்கது
 மதுரையை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதே. இப்போதைய சென்னை மாகரில் மக்கள்தொகை பெருக்கம், மழைவெள்ள பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மதுரையை இரண்டாம் தலைநகர் ஆக்கினால், சென்னையில் மக்கள் நெருக்கம் குறையும். போக்குவரத்து நெருக்கடியும் கணிசமாகக் குறையும். பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுவது குறையும். எனவே மதுரையைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டியது அவசியமும் வரவேற்கத்தக்கதும் ஆகும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 ஒரே வழி
 வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது - இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. தமிழ்நாட்டின் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னை நகரை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. தென்மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் வேலைவாய்ப்பு தேடி மக்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெரிசல், வசிப்பிடப் பற்றாக்குறை போன்றவை ஏற்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டுமானால், மதுரையைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்குவது ஒன்றுதான் வழி. வேறு வழியில்லை. எனவே, அரசு இக்கோரிக்கையை ஏற்க வேண்டும்.
 பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
 சாலச்சிறந்தது
 வரலாற்றுச் சிறப்பு கொண்ட மதுரை மாநகரம் தென்மாவட்ட மக்களின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைந்துள்ள நகரம், சர்வதேச தரத்திலான மருத்துவ சேவையை வழங்கக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் நகரம். இப்படிப்பட்ட எல்லாத் தகுதிகளும் நிறைந்த நகரமான, மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரம் ஆக்குவது சாலச்சிறந்தது. கன்னியாகுமரியில் இருப்போரும், ராமேசுவரத்தில் இருப்போரும் தலைநகர் சென்னைக்கு சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்படுவது கண்கூடு. எனவே, அரசு விரைந்து மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும்.
 நெ. இராமச்சந்திரன், திருக்களம்பூர்.
 ஏற்புடையதே
 ரயில், பேருந்து, விமானம் என பல்வேறு வகை போக்குவரத்து வசதி, வைகையாறு இருப்பதால் தண்ணீர் வசதி, நகரைச் சுற்றிலும் கிராமங்கள் நிறைந்திருப்தால் வசிப்பிட வசதி என எல்லா வசதிகளும் நிறைந்துள்ள நகரம் மதுரை. மேலும், தூங்காநகரம் என்று சொல்வதற்கேற்ப எப்போதும் மக்கள் நடமாட்டம், பாண்டியர் தலைநகராக இருந்த பெருமை, நவீன மருத்துவமனைகள் என தலைநகருக்கான அனைத்துத் தகுதிகளும் நிரம்பிய மதுரையை இரண்டாம் தலைநகர் ஆக்குவது அவசியம். இவை மட்டுமல்ல, இதனால் சென்னைவாழ் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிடவும் வாய்ப்பு ஏற்படும்.
 சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.
 அவசியம்
 நிர்வாக வசதிக்காக கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் எனப் பிரிப்பது போல் மதுரையை இரண்டாம் தலைநகராக ஆக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களைச் சேர்ந்த தொழில் வர்த்தகத்துறையினர் சென்னையைத் தலைநகராகக் கொண்டும், தென்மாவட்ட தொழில் வர்த்தகத்துறையினர் மதுரையைத் தலைநகராகக் கொண்டும் வர்த்தகத்தில் மேம்பாடு காண முடியும். இருதுறையினரும் தலைநகரங்களில் உள்ள அலுவலர்களை உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியும். மதுரை இரண்டாம் தலைநகரானால், மக்களின் பயண நேரம் குறையுமாதலால், காலவிரயம் தவிர்க்கப்படும்.
 க. கருணாமூர்த்தி, செவிலிமேடு.
 சாத்தியமே
 அனைத்துத் துறைகளின் மையமாக சென்னை அமைந்துள்ளதால் மக்கள்தொகைப் பெருக்கம், போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி, அடிக்கடி மழைவெள்ள பாதிப்பு போன்ற பிரச்னைகளை சென்னை சந்தித்து வருகிறது. தலைநகர் மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. மாற்று நகரத்தேவை அதிகரித்துள்ளதால் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் சென்னையில் குவிக்காமல், சில அலுவலகங்களை புதிய தலைநகரிலும், வேறு சில அலுவலகங்களை மாநிலத்தின் பிற நகரங்களிலும் அமைக்க வேண்டும். தற்கால மின்னணு யுகத்தில் புதிய தலைநகர் உருவாக்கல் சாத்தியமே.
 எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
 காலத்தின் கட்டாயம்
 ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள்அதிக பலன்அடைந்து வருகிறார்கள். சென்னையைவிட மதுரை எல்லா வகையிலும் மேம்பட்ட நகரம். குறிப்பாக புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் பாதிப்புகள் மதுரையில் குறைவுதான். மேலும் பண்டிகை நாட்களில் தென்மாவட்ட மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல ரயிலிலும், பேருந்திலும் இடம் கிடைக்காமல் அவஸ்தைப்படுவது முடிவுக்கு வரும். "எய்ம்ஸ்' மருத்துவமனை மதுரைக்கு வரப்போகிறது. எனவே மதுரையை இரண்டாவது தலைநகர் ஆக்குவது காலத்தின் கட்டாயம்.
 கடல் நாகராஜன், கடலூர்.
 சீரிய பலன்
 மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் முயற்சி ஏற்கெனவே எம்.ஜி.ஆர். அரசால் முன்னெடுக்கப்பட்டது. அப்போதே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இப்போது, வியத்தகு முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமாகி இருக்கும். எப்போதும் எதிலும் பரவலாக்கம் சீரிய பலனைத் தரும். தமிழகம் என்றால் சென்னை மட்டுமே என்கிற நிலை சென்னைக்கும் நல்லதல்ல; தமிழகத்திற்கும் நல்லதல்ல. அனைத்தும் ஓரிடத்தில் குவிதல் என்பது இடர்ப்பாடுகளையே உருவாக்கும். நகரங்கள் நரகங்களாக மாறுவதைத் தவிர்க்க இரண்டாம் தலைநகர் மதுரையில் அமைவது பெருமளவில் துணைபுரியும்.
 த. முருகவேள், விழுப்புரம்.
 உதவி
 இக்கோரிக்கை ஏற்புடையதே. அடிக்கடி சென்னை சென்று வருவது தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில்தான் அமைந்துள்ளது. எனவே மதுரை பொருத்தமான தேர்வுதான். முன்பு பெருநகரமாக இருந்த சென்னை இப்போது மாபெரும் நகரமாகி விட்டது. இந்நிலையில் தொடர்ந்து சென்னையில் அனைத்து மாவட்ட மக்களும் குவிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையின் மக்கள் நெருக்கத்தைக் குறைக்க புறநகர்ப் பகுதியில் புதிய நகரத்தை உருவாக்குவதை விட, மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றுவது எளிதானது.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 வளர்ச்சி
 மதுரை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்தாலும் தற்போது அதிக அளவில் தொழில் முன்னேற்றம் இல்லை; வெறும் வர்த்தகம் மட்டுமே நடைபெறுகிறது. பொதுவாக தமிழகம் வரும் அனைவரும் பார்க்க விரும்புவது மதுரையைத்தான். தலைநகரமாக்கப்பட்டால், மதுரை நன்கு வளர்ச்சி பெறும், சுற்றுலா மேம்படும், வேலைவாய்ப்பு பெருகும். அத்துடன் தென்மாவட்டங்கள் அனைத்துமே வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அடையும். முக்கியமாக, புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத நகரம் மதுரைதான். எனவே இரண்டாம் தலைநகரமாக்கி மதுரையை வளர்ச்சி பெற செய்யலாம்.
 நா. குழந்தைவேலு, மதுரை.
 கட்டாயம் இல்லை
 மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது அரசியல் லாபங்களுக்கான கோரிக்கையாகும். அரசு சம்பந்தப்பட்ட எந்தவொரு பணிக்கும் மாநிலத் தலைநகருக்கு நேரில்தான் சென்றாக வேண்டும் என்கிற கட்டாயம் இன்றைய கணினி யுகத்தில் இல்லை. இதற்கு நீதித்துறை மட்டுமே விதிவிலக்கான ஒன்று. அதற்கும் ஏற்கெனவே மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று அரசு முடிவு செய்தால், மதுரை மட்டுமல்ல, திருச்சி, கோவை என பல நகரங்களிலிருந்தும் கோரிக்கை எழும்பும். அது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 பொருத்தம்
 மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்கிற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதே. மதுரை எல்லா வகையிலும் சிறப்பான நகரம். மதுரை இரண்டாம் தலைநகரானால், தென்மாவட்ட மக்கள் அடிக்கடி சென்னைக்கு அலைய வேண்டியிருக்காது. பழைமையும் புதுமையும் கலந்த கோயில் நகரமான மதுரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் ஆவதற்கு முற்றிலும் பொருத்தமான நகரமாகும். தமிழகத்தின் பிற நகரங்களை விட பலவிதமான சிறப்புகளையும் வசதிகளையும் கொண்டுள்ள நகரம் மதுரை. எனவே மதுரையை இரண்டாம் தலைகராக்க வேண்டியது மிகமிக அவசியம்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT