ஏற்புடையதன்று
அனைவர்க்கும் கல்வி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த தனியார் கல்லூரி, மாலைநேரக் கல்லூரி, சுயநிதி கல்லூரி, தொலைநிலைக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழகம் எல்லாம் உருவாயின. ஒரு கட்டத்தில் தொலைநிலைக் கல்வி தரம் தாழ்ந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பல்கலைக்கழகங்களின் தரம் தாழாமல் அரசுதான் கண்காணித்திருக்க வேண்டும். கல்வியைப் பரப்புவதற்காக அனைத்தையும் அரசே செய்தது. அரசு நிறுவிய தொலைநிலைக் கல்வி வழியில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியில்லாதவர்கள் என்று இப்போது அரசே கூறுவது ஏற்புடையதன்று.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
சரியானதே
அரசின் முடிவு சரியானதே. பள்ளி, கல்லூரிகளில் படிப்பை முடிக்காமல் இடைநின்றவர்கள் படித்து பட்டம் பெறவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தொலைநிலைக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அரசுப் பணியில் சேர்ந்தவர்களின் பதவி உயர்வுக்கும், ஊதிய உயர்வுக்கும் அதிக கல்வித்தகுதி தேவைப்படும் நிலையில் தொலைநிலைக் கல்வி வழியில் அவர்கள் படித்துத் தங்கள் கல்வித்தகுதியை உயர்த்திக்கொண்டனர். ஆனால், ஆசிரியர் பணிக்கு தொலைநிலைக் கல்வித் தகுதி போதும் என்று கூறுவது சரியல்ல. கல்லூரியில் பயின்றவர்களால்தான் ஆசிரியப் பணியைத் திறம்பட நிறைவேற்ற முடியும்.
டி.கே. கங்காராம், மதுரை.
நியாயமானது
அரசின் முடிவு மிகவும் சரியான முடிவு. தரமான ஆசிரியர்களால் மட்டுமே சிறப்பாகக் கற்பித்து தரமான மாணவர்களை உருவாக்க முடியும். திறமையும், தகுதியும் வாய்ந்த, நேரடிக் கல்வி பயின்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் பணி நியமன ஆணைக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது, தொலைநிலைக் கல்வி வழியில் படித்தவர்களை ஆசிரியர் பணிக்கு நியமிப்பது "கனியிருப்பக் காய் கவர்தல்' போலாகும். மாணவர்களின் எதிர்காலத்தையும், எதிர்காலக் கல்வியின் தரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது அரசின் முடிவு சரியானது மட்டுமல்ல, நியாயமானதும்கூட.
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
கண்கூடு
நேரடிக்கல்வி முறையைவிட தொலைநிலைக் கல்வி பாடத்திட்டம் தகுதி குறைவானது என்று அரசு கருதினால் அதன் பாடத்திட்டங்களை நேர்வழிக் கல்விக்கு நிகராக உயர்த்த வேண்டுமேயன்றி தொலை நிலைக் கல்வி வழியில் பயில்வோர் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்கள் எனக் கூறுவது சரியில்லை. இது அவர்களின் பணிவாய்ப்பினை அரசே மறுப்பதாக அமையும். தொலைநிலைக் கல்வி வழியில் பயின்றோர் அனைவரும் தகுதியற்றவர்கள் அல்ல. தொலைநிலைக் கல்வியில் பயின்ற பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு பெற்று ஆட்சிப் பணியில் இருப்பது கண்கூடு.
சி. இரத்தினசாமி, திருப்பூர்.
வேறுபாடு
நேரடி படிப்பிற்கும் தொலைநிலை வழி கற்பதற்கும் நடைமுறையில் வேறுபாடு இருக்கவே செய்கிறது. பாட நூல்களைப்படிக்காமல் விலை மலிவாகக் கிடைக்கும் ஐம்பதுபக்க உரைநூல்களை மட்டும்படித்துவிட்டு பட்டம்பெறுகிற வாய்ப்பு தொலைநிலைக்கல்வியில் இருக்கிறது. இதனால், ஒப்பீட்டளவில் கல்லூரியில் நேரடியாகப் பயின்று பட்டம்பெறுவது தரத்தில் உயர்ந்தே நிற்கிறது. அதே நேரம் தொலைநிலையில் ஆர்வத்தோடு பயின்று நேரடிப்படிப்பை விஞ்சிய திறன்பெறுவோரையும் காணமுடிகிறது. பணிவாய்ப்புக்கு நுழைவுத்தேர்வினை அடிப்படையாக்கினால் உண்மையான திறமைசாலிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
த. முருகவேள், விழுப்புரம்.
மதிப்பெண்
தொலைநிலைக் கல்வியில் செமஸ்டர் தேர்வு இல்லாததால் மதிப்பெண் வழங்கும்போது தேர்ச்சிக்குரிய குறைந்தபட்ச மதிப்பெண்ணே வழங்கப்படுகிறது. அதை அரசுப் பணியில் இருப்பவர்கள் ஊக்க ஊதியத்திற்கும் பதவி உயர்வுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியப் பயிற்சியில் சேர்வதற்கு இனவாரியாக மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருவத் தேர்வுகளில் அகமதிப்பீட்டின் மூலமாக நல்ல மதிப்பெண் பெறுபவர்கள் ஆசியர்களாகின்றனர். அப்படியிருக்க, தொலைநிலைக் கல்வி வழி பயின்று, ஆசிரியப் பணிக்கு வரக் காத்திருப்போரை தகுதியற்றவர்கள் என்று கூறும் அரசின் முடிவு சரியானதன்று.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
நியமனம்
அரசின் முடிவு ஏற்புடையதன்று. பணியில் சேர்ந்த பின்னர் நேரடி வகுப்புகளில் படிக்க வாய்ப்பு குறைவு என்பதாலேயே தொலைநிலைக் கல்வி வழியில் படிக்கின்றனர். அரசு இதனை அனுமதிக்கிறது; ஊக்க ஊதிய உயர்வும் தருகிறது; பதவி உயர்வும் வழங்கி வருகிறது. இப்போது பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பாலோர் பணி நியமனம் பெற்றபின், தொலைநிலைக் கல்வி வழியே உயர்கல்வி பெற்று பதவி உயர்வு பெற்றவர்களே. தகுதி இல்லாத கல்வியை அரசு ஏன் நடத்த வேண்டும்? தொலைநிலைக் கல்வி நிலையங்களை அரசு மூடிவிடலாமே!
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,
வேம்பார்.
கேள்விக்குறி
அரசின் முடிவு சரியானதே. நேரடிக் கல்வி வழியில் பயின்றவர்களுடன் ஒப்பிடும்போது தொலைநிலை வழியில் கல்வி பயின்றவர்களின் ஆற்றல் சிறப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. இப்போது பல ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக தொலைநிலை வழி கல்வியில் சேர்ந்து பயில்கிறார்கள். பட்டதாரி ஆசிரியர் ஒரே துறையில் சிறந்து விளங்குவதால் மாணவர்களின் கற்றல் திறன் சிறப்பாக இருக்கும். நேரடிக் கல்வி வழியில் படித்தவர்கள் மட்டுமே மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க முடியும். எந்த பாடத்தை எப்படி விளக்கினால் மாணவர்களுக்குப் புரியும் என்கிற உத்தியும் அவர்களுக்குத் தெரியும்.
நிஷா, பெரம்பலூர்.
வரவேற்கத்தக்கது
அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. வாழ்வில் ஏதோ ஒரு பட்டம் இருந்தால் போதும் என்று படிப்பதற்கும், மாணவர்களுக்கு நன்கு கற்பித்து அவர்ளை பட்டதாரிகளாக்கி அவர்களின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்ற நோக்கில் படிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மாணவர்களின் உளவியல் தன்மைகளை அறிந்த ஆசிரியர்களே கற்பித்தலுக்குத் தகுதியுடையவர்கள். தொலைநிலை வழியில் பயில்பவர்களுக்குப் பாடங்களை யார் நடத்துகிறார்கள்? நேரடிக் கல்வி வழியில் படித்தவர்கள்தானே! எனவே, நேரடிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே ஆசிரியப் பணிக்குத் தகுதியுடையோர் என்பது சரியே.
ச. கார்த்திக், சென்னை.
மறுபரிசீலனை
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து, கல்வி கற்பது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் அரசின் இந்த அறிவிப்பு வியப்பளிப்பதாக உள்ளது. நேரடிக் கல்வி கற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் என்றால் பிறகு தொலைநிலைக் கல்வி முறை எதற்காக? தகுதியை, தேர்வு மூலம் சோதித்துப் பார்ப்பதே சரியாக இருக்கும். அதை விடுத்து கல்வி வழியை தகுதியாக்குவது தவறு. அரசே அவர்களைப் புறக்கணித்தால், தனியார் நிறுவனங்கள் நிச்சயம் அவர்களை ஒதுக்கி விடும். கல்வித் தகுதி இருந்தும் வேலை வாய்ப்பை மறுக்கும் அரசின் இந்த முடிவு மறுபரிசீலனைக்குரியது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
ஏமாற்றம்
நேர்முகக் கல்வியின் அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தொலைநிலைக் கல்வி முறை. இந்த வழியில் படித்தவர்கள், நேரடிக் கல்வி வழி பயின்றவர்கள்போல் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களே. பல்கலைக் கழகங்கள் தகுதியானவர்களைத்தானே பட்டதாரிகளாக அங்கீகரிக்கின்றன? பட்டப் படிப்போ, பட்ட மேற்படிப்போ படித்த பின் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அனைவருக்கும் பொதுவானவைதானே. லட்சக்கணக்கான மாணவர்கள் தொலைநிலைக் கல்வியில் நம்பிக்கையுடன் பயின்று வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அரசின் முடிவு அவர்களுக்கு ஏமாற்றமே.
கே.ராமநாதன், மதுரை.
மகத்தானது
அரசின் முடிவு ஏற்புடையதே. வருங்காலத் தலைமுறையை சிறப்பாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. முறையாக கல்லூரியில் சேர்ந்து கல்வி பயிலாமல் தொலைநிலைக் கல்வி வழியில் கற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களால் மாணவர்களை சரிவர கையாள முடியாது. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் தெரியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல தொலைநிலை கல்வி படித்தவர்களால் சிறப்பாகக் கற்பித்து சிறந்த மாணவர்களை உருவாக்க இயலாது என்பதே நிதர்சனம். எனவே அரசின் முடிவு மிகச்சரியே.
ந. சண்முகம், திருவண்ணாமலை.