விவாதமேடை

"மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு என்பதைக் கைவிட வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சரியானதுதான்
 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கைவிட வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை சரியானதுதான். மின் கட்டண உயர்வு மூலம் மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி, மின் தட்டுப்பாடு போன்றவை மக்களை பெரும் அளவில் பாதித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும். மக்கள் வேலை தேடி பல்வேறு இடங்களுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற அறிவிப்புகள் அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 முரண்பாடு
 மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை சரியே. ஆதாரை வேண்டாம் என்று சொல்லிய கட்சிகள், ஆதார் எண்ணை எல்லாவற்றிலும் இணைக்கின்ற போது அதனை தவறு என்று எதிர்த்த கட்சிகள், ஆட்சி கட்டிலுக்கு வந்தவுடன் அனைத்திற்குமே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்வது முரண்பாடானது. முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்து முந்தைய ஆளுங்கட்சி ஆட்சியைப் பிடித்தது. பின்பு அமைந்த அரசு அந்த மானியத்தை ரத்து செய்து இருக்கலாம். அதை விடுத்து தற்பொழுது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது. இது மக்களுக்கு சிரமத்தைக் கொடுத்துள்ளது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 அச்சம்
 மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை சரியானதே. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு சொன்னவுடன், தேவையற்ற அச்சத்தை அது மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது. மேலும் அமைச்சர் தனது பதிவில், மக்களை பாதிக்கும் எந்த மாற்றமும் வராது என உறுதியளித்தார். மாற்றம் இல்லாததற்கு ஏன் இந்த இணைப்பு? நாளையே அரசு, நிதி நிலையை கட்டுப்படுத்த, ஒரு வீட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்தலாம். வாடகைக்கு விடும் வீடுகளுக்கு மின் கட்டணத்தை ஏற்றலாம். எனவே மக்களின் நலன் கருதி இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
 கோவி. சேகர், சென்னை.
 அவலம்
 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு என்பதைக் கை விடவேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தேவையற்றது. தொட்டதற்கெல்லாம் ஆதாரை இணைக்கச் சொல்கிறார்கள். மக்கள் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அவலம் இது. குழந்தைகள் தவிர, சுதந்திர இந்தியாவின் மக்கள் அனைவரும் அன்றாடம் அற்ப விஷயங்களுக்கெல்லாம் ஆதாரைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியதுதான் போலும். இது போன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பையே உருவாக்கும்.
 ஆர். தீனதயாளன், காரமடை.
 தெளிவில்லை
 பல மின் இணைப்பு ஒரே பெயரில் இருப்பின் ஒரே ஒரு ஆதார் எண்ணை இணைக்க இயலுமா என்ற விவரத்தில் தெளிவில்லை. அவர்களுக்கு இலவச மின்சாரம் தொடருமா என்பதும் உறுதியில்லை. ஆதார் எண்ணுடன் இணைப்பதை மின்சார வாரியம் முறைப்படுத்தாமல், தக்க முன்னேற்பாடுகள் செய்யாமல் ஏழை எளிய மக்களை அலைகழிக்கின்றனர். இணையத்தில் மின் இணைப்பு குறித்த தகவல்கள் சரியாக இல்லை. ஆதார் எண் இணைப்பு எளிதாக இல்லை. இணையம் இல்லாதோர், அதனை முறையாகப் பயன்படுத்த தெரியதோர் இந்த அவசர அறிவிப்பால் மிகவும் தடுமாறுகின்றனர். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை பரிசீலனைக்குரியதே.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 தேவையற்றது
 மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை சரியே. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு என்பதே தேவையற்றது. ஒருவருக்கு ஒரு இணைப்புக்கு மட்டுமே நூறு யூனிட் மின்சாரம் இலவசம் என்கிற அறிவிப்புக்கான முன்னோட்டமே இது. அரசு கூறியபடி, மின்வாரிய அலுவலகம் சென்று மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோர் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். மின்வாரிய இணைய தளம் சரியாக இயங்கவில்லை. தெளிவான காரணத்தை தெரிவித்து வாரியமே அலுவலர்கள் மூலம் இணைப்பை மேற்கொள்ளலாம். ஆதார் இணைப்பு திட்டத்தால் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 ஒத்துழைப்பு
 அரசு, நிர்வாக மேம்பாட்டிற்காக சில தரவுகளை பதிவு செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்போது பொதுமக்களாகிய நாம் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும். எத்தனை பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, அவற்றுள் கணக்கில் அடங்கா சொத்துகள் வைத்துக் கொண்டுள்ள ஒரு நபர் லட்சக்கணக்கான ரூபாய்க்கு இலவசம் மின்சாரம் பெற்றுக் கொண்டிருப்பது இவற்றையெல்லாம் இந்த இணைப்பின் வாயிலாக இனம் காண முடியும். மக்களுக்காக போராடுகின்றோம் என்ற போர்வையில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை முன்னெடுப்பது மிகவும் தவறு.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 புரியவில்லை
 மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை சரியானது அல்ல. இத்தனை அவசர கதியில் இணைக்க வற்புறுத்துவதுதான் தவறே தவிர, எல்லாம் ஆதார் மயமான பின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதைத் தவறு எனக் கூற முடியாது. வங்கிக் கணக்கு, வருமானவரி கணக்கு, சம்பளக் கணக்கு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்திலும் ஆதார் எண்ணை இணைத்துவிட்டு மின் இணைப்புடன் மட்டும் ஆதாரை இணைக்கத் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை. ஆதாரை ஆக்ரோஷமாய் எதிர்த்த கட்சிகளே இன்று இதனை ஏற்று நடைமுறைப் படுத்தும்போது மக்கள் மறுத்துப்பேசி பயன் ஏதும் இல்லை.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 தவறொன்றுமில்லை
 அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் பொதுமக்களின் பணப் பரிவர்த்தனை உட்பட அனைத்திற்கும் ஆதார் எண் இணை ப்புக் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் தற்போது மின் இணப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு கூறுவதில் தவறொன்றுமில்லை. வாடகை வீடுகள் மற்றும் தொழிற்சாலை போன்ற இடங்களில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் இருந்தால் இலவசம் போன்ற சலுகைகளை ஓர் இணைப்பு மட்டுமே பெற முடியும். சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அரசு, இத்திட்டத்தைக் கைவிட வேண்டாம்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அவகாசம் தேவை
 மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் முடிவு மக்களை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. பொதுமக்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க அலுவலர்கள் வீடு வீடாக வந்தது போல ஆதார் எண்ணை இணைப்பதற்கும் அலுவலர்கள் வீடுதோறும் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மின் அலுவலகத்தில் போய் கால் கடுக்க பொதுமக்களை வரிசையில் காக்க வைப்பது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. மக்களை சிரமப்படுத்தும் எந்த முடிவும் ஆளும் அரசின் மீது கோபத்தையே ஏற்படுத்தும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 நியாயமானதே
 மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை நியாயமானதே. அரசின் இந்த இணைப்பு அறிவிப்பு, மக்களை அலைக்கழிக்கும் அறிவிப்பாகவே உள்ளது. இந்த இணைப்பில் பல பிரச்னைகள் இதில் உள்ளன. உதாரணமாக, மின் இணைப்பு பெற்றவரின் ஆதார் எண்ணுடன் செல்போன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; மின் இணைப்பு பெற்றவர் மரணமடைந்திருந்தால், இப்போது அந்த மின் இணைப்பைப் பயன்படுத்துபவர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றித முதலியவற்றைக் கொடுத்து பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும். எனவே அரசு, நடைமுறைகளை எளிதாக்கியபின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோருவது நல்லது.
 நா. ஜெயராமன், பரமக்குடி.
 காலத்தின் கட்டாயம்
 மத்திய அரசின் மானியத் திட்டங்கள் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படுவதால் முறைகேடுகள் களையப்பட்டிருப்பது கண்கூடு. அதனால்தான் மாநில அரசும் இம்முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதனால் மானியங்கள் வழங்கும் முறையில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும். தொழில்நுட்பம் வாழ்வை எளிமைப்படுத்துவதற்காகவே உள்ளது. ஆதார் எண் இணைப்பின் மூலம் பல முறைகேடுகள் களையப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நிர்வாகத்திலும் ஊழல்கள் குறைய வாய்ப்புகள் அதிகம். எனவே மின் இணைப்பு எண் - ஆதார் எண் இணைப்பு காலத்தின் கட்டாயம்.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT