விவாதமேடை

"பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

முற்றிலும் சரி
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது அரசியல் தலையீட்டிற்கு வழிவகுக்கும் என்பது முற்றிலும் சரியே. மாநிலத்தில் ஆளும் கட்சி, தனது கட்சியில் பதவி கிடைக்காமல் இருக்கும் தலைவர்களுக்கும், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்குமே துணைவேந்தர் பதவியை வழங்கும். தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்த துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டி வரும். அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். புதிய ஆளுங்கட்சி தனது கட்சிக்கு விசுவாசமான ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்யும். இது முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே, துணைவேந்தர்களை மாநில ஆளுநர் நியமிப்பதே சரியாகும்.
டி.கே. கங்காராம், மதுரை.
சங்கடம்
இக்கருத்து முற்றிலும் தவறானது. மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களையே மத்திய அரசு துணைவேந்தர்களாக நியமனம் செய்கிறது. மாநில அரசு துணைவேந்தர்களை நியமனம் செய்தால் மாநில ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களையே நியமிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனாலும் மாநில அரசு நிர்வாகம் செய்யும் பல்கலைக்கழகத்தில் மாநில அரசு நியமிப்பவர் துணைவேந்தராக இருந்தால்தான் நிர்வாகம் எந்த முரண்பாடும் இல்லாமல் சீராக செயல்படும். கொள்கை அளவில் வேறுபட்ட இருவர் இணைந்து நிர்வாகம் செய்தால் சங்கடமான நிலைதான் ஏற்படும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
உயர்ந்த பதவி
நிச்சயம் அரசியல் தலையீட்டிற்கு வழிவகுக்கும். ஏற்கெனவே, வீட்டு வசதி வாரியம், சிறுபான்மை நல வாரியம் போன்றவற்றில் ஆளுங்கட்சி, தனக்கு வேண்டியவர்களையே நியமனம் செய்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது மிகவும் உயர்ந்த பதவி. இப்பதவியில் அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளுக்கு வேண்டியவர்களோ நியமிக்கப்படக் கூடாது. கல்வியாளர்களே நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல்கலைக்கழகத்தின் தரம் மேம்படும். அரசியல்வாதிகள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டால்
பல்கலைக்கழகத்தில் தரத்தை எதிர்பார்க்க முடியாது.
கே. விஸ்வநாதன், கோயமுத்தூர்.
நல்லதல்ல
இக்கருத்து சரியே. மாநில அரசு கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சி சார்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தந்து துணைவேந்தர்களை நியமிக்கும். அதுவே வழக்கமாகி கல்வியும் துணைவேந்தர் நியமனமும் விலை போகக்கூடிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படும். பல்கலைக்கழகங்களை நடத்த வேண்டிய துணைவேந்தர் நியமனத்திலேயே பணப்பரிமாற்றமும் முறைகேடுகளும் நடந்தால் கல்வி வழங்குவது என்பது நியாயமானதாக இருக்காது. மாநில அரசு தரும் பட்டியலில் இருந்தே துணைவேந்தர்களை ஆளுநர் தேர்ந்தெடுக்கிறார். அந்த முறையே தொடரலாம். கல்விக்கூடத்தில் கட்சி சார்ந்தவர்கள் பொறுப்பில் இருப்பது நல்லதல்ல.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
வெளிப்படை
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது அரசியல் தலையீட்டிற்கு வழி வகுக்கும் என்பதை ஏற்க இயலாது. மாநில அரசு நியமித்தால் அரசியல் தலையீடு இருக்கும் என்றால் மத்திய அரசு நியமிக்கும்போது அரசியல் தலையீடு இல்லையா? எந்த நியமனமாக இருந்தாலும் அதில் மத்திய அரசு அல்லது மாநில அரசின் தலையீடு மறைமுகமாகவாவது இருக்கும் என்பது வெளிப்படை. அப்படித் தலையீடு இருந்தாலும், தகுதி மிக்கவர்களை நியமனம் செய்தால் போதும். பல்கலைக்கழக துணைவேந்தர்களாக தகுதி கொண்டவர்களை நியமித்து பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
மா. பழனி, தருமபுரி.
தவறில்லை
தற்போது மாநில அரசு ஒரு தேர்வுக்குழு அமைத்து அதன் பரிந்துரையில்தான் துணைவேந்தர்களை நியமனம் செய்து வருகிறது. இதில் அரசியல் எங்கு வந்தது? வேந்தர்களாகிய ஆளுநர்களும் மத்திய அரசின் கருத்துக்கு ஆதரவாக மாநில அரசுடன் முரண்பட்டே செயல்படுகிறார்கள். இது மட்டும் அரசியல் இல்லையா? உச்சநீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில் 'கொலீஜியத்'தின் பரிந்துரையை மத்திய அரசு மதித்துச் செயல்படுகிறதா? மாற்று மாநில அரசுகளின்மீது தன் அதிகாரத்தைப் பயன் படுத்தவே மத்திய அரசு நினைக்கிறது. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதில் தவறில்லை.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
வாய்ப்பு இல்லை
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது அரசியல் தலையீட்டுக்கு வழி வகுக்கும் என்கிற கருத்து தவறானது. துணைவேந்தர்களை நியமிக்கும்பொழுது அவர்களுடைய கல்வித் தகுதி, அனுபவம், பிற தகுதிகள் இவற்றைப் பரிசீலித்தே மாநில அரசு முடிவெடுக்கும். மேலும் பணிமூப்பு அடிப்படையிலும் துணைவேந்தராக நியமனம் பெற முடியும். இதில் அரசியல் தலையீட்டுக்கு வாய்ப்பே இல்லை. மாநில அரசு துணைவேந்தர்களை நியமனம் செய்தால் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதி உதவிகளை மாநில அரசு உடனுக்குடன் வழங்கும். மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பது வரவேற்கத்தக்கது.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
முறைகேடுகள்
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது நிச்சயம் அரசியல் தலையீட்டிற்கு வழிவகுக்கும். பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு துணைவேந்தர்களுக்கு உள்ளது. அப்படிப்பட்ட துணைவேந்தர் நியமனம் நேர்மையாக, நம்பகத்தன்மையோடு நடைபெற வேண்டும். இதை மாநில அரசு மேற்கொள்ள முனைவது பல்கலைக்கழகங்களின் கல்விசார் செயல்பாடுகளில் தடங்கலை உருவாக்கும். பணியாளர் நியமனத்தில் தொடங்கும் முறைகேடுகள், பல்கலைக்கழக செயல்பாடுகளில் ஆளுங்கட்சி தலையிடும் நிலைவரை தொடரும். எனவே மாநில அரசின் இந்த முடிவு ஏற்கத்தக்கதல்ல.
கே. ராமநாதன், மதுரை.
அங்கீகாரம்
இக்கருத்து சரியே. தற்போது நடைமுறையில் உள்ள ஆளுநர் நியமனத்திலும் அரசியல் தலையீடு இல்லாமல் இல்லை. ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே, மத்திய அரசின் ஆதரவு பெற்றவர்கள் அல்லது மத்திய ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற நபர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். அப்படித்தான் நடந்து வருகிறது. இதனால் உண்மையான திறமைசாலிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. பணியாளர் தேர்வாணையம் போல துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஒரு அமைப்பு இருந்தால் நேர்மையாக நியமனம் சாத்தியமாகும்.
தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
சுணக்கம்
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க எடுக்கும் முயற்சியே அரசியல் தலையீடுதான். மாநில அரசே துணைவேந்தர்களை நியமித்தால் அது வாரியத்தலைவர்களை நியமிப்பதற்கு ஒப்பான நடைமுறையாகவே அமையும். என்னதான் தகுதியின் அடிப்படையில்தான் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நிச்சயமாக அது கல்வியின் தரம் சீர்கெட்டு போவதற்கே வழிவகுக்கும். மேலும், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது துணைவேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அது பல்கலைக்கழக நிர்வாகத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தும். பல்கலைக்கழகம் அரசியல் களமாக மாறும்.
சி. இரத்தினசாமி, திருப்பூர்.
வரவேற்கத்தக்கது
இக்கருத்து தவறானது. எந்த ஒரு மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை என்றால் நாம் அதுகுறித்து யோசிக்கலாம். ஒரு சில மாநிலங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்திருக்கும்போது தமிழகம் மட்டும் ஏன் கூடாது? அரசு நியமித்த மாநிலங்களில் அரசு தலையீடு இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் நிலை வந்தால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு தகுதியுள்ளவர்களையே நியமிப்பார்கள் என்பதே உண்மை. இது வரவேற்கத்தக்கதே.
என்.வி. சீனிவாசன், சென்னை.
தலையீடு இருக்காது
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுவது தவறு. இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இந்த உரிமையை வழங்குவது சரியானதே. ஆளுநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் கையில் மாநில நியமன அதிகாரம் இருப்பது சரியல்ல. பல மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில அரசுக்கே இருக்கிறது. மாநில அரசு ஒரு தேர்வுக் குழுவை அமைத்து அக்குழுவின் பரிந்துரையின்படி துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசியல் தலையீடு இருக்காது.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.






 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT