விவாதமேடை

"மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிடுவது சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

24th Aug 2022 03:49 AM

ADVERTISEMENT

மறுபரிசீலனை
ஏற்கெனவே மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் முன்புபோல் அதிக சேர்க்கை இல்லாததால் பெரும்பாலான கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. அரசு அனுமதித்தால் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளவே அக்கல்லூரிகள் விரும்புகின்றன. இந்த நிலையில் பொறியியல், மருத்துவம் இணைந்து ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதல்நிலை பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். அக்கல்லூரிகளின் இருக்கைகளை அதிகரிக்க அரசு அனுமதிக்கலாம்.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
தடைக்கல்
ஒரே நுழைவுத் தேர்வுக்கு மத்திய அரசு திட்டமிடுவது சரியல்ல. ஏற்கெனவே தமிழக அரசு, மருத்துவத்திற்கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகிறது. ஊரகப்புற மாணவர்கள் நன்கு படித்து போதிய மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் பயில்வதற்கு இந்த நுழைவுத் தேர்வு ஒரு தடைக்கல்லாக உள்ளது. இந்த நிலையில் மருத்துவம், பொறியியல் இணைந்த ஒரே நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு திட்டமிடுவது தவிர்க்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுகளே கூடாது என்பதே மக்களின் கருத்து ஆகும்.
பா. திருநாவுக்கரசு, சென்னை.
சரிப்பட்டு வராது
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு முறை கூடாது. மருத்துவப் படிப்பில் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் பொறியியல் படிப்பில் கணிதமும், பெளதீகமும் முக்கியத்துவம் பெறுகின்றன; கூடவே கணினி அறிவும் தேவைப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருப்பதால், மருத்துவம், பொறியியல் இணைந்த ஒரே நுழைவுத் தேர்வு என்பது சரிப்பட்டு வராது. மருத்துவத்திற்குத் தனியாகவும், பொறியியலுக்குத் தனியாகவும் நுழைவுத் தேர்வு நடத்துவதே சிறப்பான நடைமுறை. அதனையே மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.
கலைப்பித்தன், கடலூர்.
தேவையற்றது
மத்திய அரசு திட்டமிடுவது சரியல்ல. நுழைவுத் தேர்வே தேவையற்றது என பொதுமக்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கருதுகின்றனர். மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்க்கலாம். பள்ளி இறுதி வகுப்பை முடித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக தனியாக ஓர் ஆண்டு தனியார் பயிற்சி மையங்களில் அதிக பணம் செலவிட்டுப் பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏழை, எளிய குடும்பத்து மாணவர்கள் என்ன செய்வார்கள்? எனவே, நுழைவுத் தேர்வைத் தவிர்க்கலாம்.
மா. பழனி, தருமபுரி.
சரியான முடிவு
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு எனும் மத்திய அரசின் முடிவு சரியானதே. நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஜேஇஇ தேர்வுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. க்யூட் பொது நுழைவுத் தேர்வில் இந்த பாடங்களையும் சேர்த்து 63 பாடங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, க்யூட் தகுதித் தேர்வின் மூலம், விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு, இளநிலை மருத்துவம், பொறியியல், பொதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வி.சி. கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.
எளிது
மத்திய அரசு திட்டமிடுவது சரியே. இப்போது மாணவர்கள் ஜேஇஇ, க்யூட், நீட் ஆகிய தேர்வுகளுக்காக தனித்தனியே நுழைவுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு தவிர, மற்ற இரண்டு தேர்வுகளுக்கும் இயற்பியல், வேதியியல், கணிதம் பொது. நீட் தேர்வுக்கு மட்டும் கணிதத்திற்கு பதிலாக உயிரியல். இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களை அனைத்திற்குமே பொதுவானதாக எடுத்துக்கொண்டு, ஜேஇஇக்கு கணித மதிப்பெண்ணையும், நீட் தேர்விற்கு உயிரியல் மதிப்பெண்ணையும் இணைத்து பட்டியல் வெளியிடலாம். இரு தேர்வுகளையும் எழுத விரும்புவர்களுக்கு இது எளிதாக அமையும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
திருப்புமுனை
மாணவர்களின் ஆற்றலை சோதித்தறிய பிளஸ் 2 தேர்வே போதும். பிளஸ் 2 என்பது மாணவர்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை மையமாகும். படித்துத் தேர்வெழுதிப் மதிப்பெண் பெற்ற மாணவர்களை, நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக மீண்டும் படி படி என நிர்ப்பந்திப்பது அவர்களை சோர்வடையச் செய்யும். பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்படிச் செய்தால் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு பிளஸ் 2 மதிப்பெண்ணே போதும். பல்வேறு நுழைவுத்தேர்வுகளால் ஏற்படும் குழப்பங்களும் தீரும். இளையோரின் கற்றலும் வருங்காலமும் மகிழ்வுடையதாகவும் ஆகும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
குழப்பம்
மருத்துவமும் பொறியியலும் முற்றிலும் மாறுபட்ட இரு துறைகள். இரண்டுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது குழப்பத்தையே ஏற்படுத்தும். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருந்து ஒரே தேர்வு நடத்தினால் ஏற்றுக் கொள்ளலாம். இந்த தேர்வுகள், மத்திய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும். மற்ற மாணவர்களுக்கு பாதகமே. பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பாடத்திட்டத்தில் இருந்து வைக்கும் தேர்வு மட்டுமே சரியான தேர்வாக இருக்கும். மற்ற தேர்வுகள் எல்லாம் தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க வழிகோலுபவை.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
சுமை குறையும்
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஒரேநுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிடுவது வரவேற்புக்குரியது. க்யூட் தகுதித் தேர்வின் விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு, இளநிலை மருத்துவம், பொறியியல், பொதுநிலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். இது விண்ணப்பதாரர்களின் சுமையைக் குறைப்பதோடு, தேவையற்ற அலைச்சலையும் தவிர்க்கும். தேர்வுக்கு தயாராவதற்கு மாணவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். கல்லூரி சேர்க்கைக்கான பல நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களின் சுமை குறையும் என்பது திண்ணம். ஆகவே இம்முடிவை வரவேற்போம்.
ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.
மன உளைச்சல்
மத்திய அரசு திட்டமிடுவது சரியானதே. நீட் தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களிலிருந்தும், ஜேஇஇ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களிலிருந்தும், க்யூட் தேர்வில் இவை அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரே பாடத்தை பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கு படிக்க வேண்டியிருப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், தேர்வு தேதி, தேர்வு மையங்களிலும் குழப்பம் ஏற்படுகிறது. மூன்று நுழைவுத் தேர்வுகளுக்கு மாற்றாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வினை நடத்தி அதில் தேர்ச்சி பெறுவோர் விரும்பிய படிப்பில் சேரலாம்.
அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.
ஏற்றத்தாழ்வு
மத்திய அரசின் முடிவு ஏற்புடையதல்ல. ஏற்கெனவே மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன. அதற்குக் காரணம், நீட் தேர்வுக்கான வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தேர்தெடுக்கப்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வு ஒரு பக்கம். மற்றொரு பக்கம், தேர்வு நடைபெறும் மையங்களில் கடும் கட்டுப்பாடு நிலவுகிறது. தமிழ்நாட்டில் பல மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். நிலைமை இப்படி இருக்கையில் பொறியியல் படிப்புக்கும் சேர்த்து நுழைவுத் தேர்வு வைத்தால், அது கடுமையான விளைவை மாணவர்களின் உயர்கல்வியில் ஏற்படுத்தும்.
ம. தூயவன், புதுப்படையூர்.
பயன்
தற்போது நடத்தப்படும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ தேர்வு, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு, மத்தியப் பல்கலைக்கழகத்திற்கான க்யூட் தேர்வு ஆகியவற்றை முறைப்படுத்தி அமைக்கப்பட்டதே இந்த ஒரே நுழைவுத் தேர்வு திட்டம். விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு முறை தேர்வு எழுதினால் போதும். அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தாங்கள் விரும்பும் துறைசார் படிப்பினைத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஒரே நுழைவுத் தேர்வுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, இந்த ஒரே நுழைவுத் தேர்வு முறை வரவேற்கத்தக்கதே
கே. ராமநாதன், மதுரை.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT