விவாதமேடை

"மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானது என்று கூறப்படுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

17th Aug 2022 03:33 AM

ADVERTISEMENT

ஐயமில்லை
மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானது என்பதில் சற்றும் ஐயமில்லை. இம்மசோதா தனியாரை ஊக்குவிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகின்றன. இந்த சட்டத் திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் நிச்சயமாக ரத்து செய்யப்படும். இதுபோன்ற செயல்பாடுகள் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையைக் குலைப்பதற்குக் காரணமாகி விடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
கேள்விக்குறி
இம்மசோதா மின்விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி அளித்து அவர்கள் செயல்பட வழிக்கும். இதனால், தனியார் பலர் உரிமம் பெறுவர். ஆயினும் மின்சாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால் நாளடைவில் மின்வாரியம் என்பதே இல்லாத நிலை உருவாகும். தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் கேள்விக்குறியாகும். இதனால், விவசாயத்தொழில் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். மின்வாரியத்தில் ஆள்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும். மின் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும்.
கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
விருப்பம்
இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருவது உண்மைதான். அதற்குக் காரணம், தங்களது வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பம்தான். உண்மையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதே தேவையற்றது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவோர் நடுத்தரப் பிரிவு மக்கள்தான். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பதும் வெறும் ஊகம்தான். ஆனால், மின்சாரத்திற்கான கட்டணம் நியாயமாக நிர்ணயிக்கப்படும். இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும்.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
மக்கள் விரோதம்
இந்த மசோதாவால் பாதிக்கப்படக்கூடியவர்கள், அரசின் நலத்திட்ட உதவியின்படி நூறு யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெற்றுவரும் ஏழைகளும் விவசாயிகளும்தான். அவர்களுக்கு அது இனி கிட்டாமல் போகும். மேலும், நூறு யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும் நூறு யூனிட் இலவச மின்சாரத்தை இழப்பர். மின்சாரம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அதனைத் தனியாருக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம், கட்டணங்கள் உயரும் என்பது நிச்சயம். மத்திய அரசின் இந்த செயல்பாடு முழுக்க முழுக்க மக்கள் விரோத செயலாகும்.
பா. திருநாவுக்கரசு, சென்னை.
வேண்டாம்
மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவால் மாநில அரசுகளிடமிருக்கும் மின்சாரத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குச் சென்று சில தனியார்களுக்கு தாரை வார்க்கப்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. மாநில அரசுகள் உருவாக்கி வைத்துள்ள மின்சாரக் கட்டமைப்புகளை எந்தவித முதலீடோ, பொருட்செலவோ இன்றி தனியார் பயன்படுத்தும் நிலை வரலாம். மின்சார விலையை நிர்ணயிப்பவர் தனியாராக ஆகிவிடுவதால் அவர்களின் சட்டதிட்டங்களுக்கும் நிர்ணயிக்கும் விலைக்கும் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, வேண்டாம் இந்த சட்டத் திருத்த மசோதா.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
உத்தி
மத்திய அரசு மாநிலங்களின் பெரும்பான்மையான பங்கை தன் வசப்படுத்தும் உத்திதான் இது. பிறகு மாநிலங்கள் தங்களின் பங்கை மத்திய அரசை யாசித்து பெறவேண்டும் என்கிற நிலை உருவாகி விடும். இந்த திட்டத்தின் மூலம் மின்சார வசதியற்ற பின்தங்கிய பகுதிகள் அடங்கிய மாநிலங்கள் பயன் பெறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானதாக இருக்காது. ஆனால், இதுவரை, ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் நாங்கள் நன்மை செய்தோம் என்று இனி மாநில அரசுகளால் கூற முடியாது. எல்லாப் பெருமையும் மத்திய அரசுக்கே போய்விடும்.
ஆர். ஹரிகோபி, புதுதில்லி.
தேவையில்லை
மின்சார விநியோகத் துறையில் தனியார்களை அனுமதிக்கும் இச்சட்டத்தால் மின்சாரம் தடைபடாமல் கிடைக்கும். மின்துறையில் தற்போது பெருகியிருக்கும் லஞ்ச ஊழல்கள் நிச்சயம் குறையும். ஒருவேளை கட்டணம் சற்று அதிகரித்தாலும் தனியார்களிடையே போட்டி நிலவும் என்பதால் செயல்பாட்டில் வேகம் இருக்கும். ஆனாலும் இந்த விநியோக முறையை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே இருக்க வேண்டும். மேலும் பசுமை அம்மோனியா ஹைட்ரஜன் பயன்பாட்டிற்கு இந்த மசோதா வழிவகுப்பதால் வெளிநாட்டு பெட்ரோலியப் பொருட்களை நம்பி இருக்கத் தேவையில்லை!
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
நோக்கம்
மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை அனுமதிப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும். மேலும் ஒரே பகுதியில் மின்சாரம் வழங்க பல தனியார் நிறுவனங்களை இந்த மசோதா அனுமதிக்கிறது. மின்சார விநியோகத்தில் மத்திய அரசின் பங்கை இந்த மசோதா குறைக்கிறது. இதனால் மின்விநியோகத்திலும் மின்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும் தனியார் நிறுவனங்கள் தாமாக முடிவெடுக்க வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயரும் போது மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் மீது பழிபோட்டு தப்பிப்பது போல மின்கட்டணத்திலும் தப்பிக்க இம்மசோதாவால் வாய்ப்பு ஏற்படும். எனவே வேண்டாம் இந்த மசோதா.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
மிகவும் சரி
மத்தியஅரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழைகளுக்கும் விவசாயிக ளுக்கும் எதிரானது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது மிகவும் சரியே. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான மின்துறையில் மாநில அரசினைக் கலந்தாலோசிக்காமல் தனியாரை அனுமதிக்க முடிவு மேற்கொண்டது சரியான நடவடிக்கை அல்ல. ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் இலவச மின்சாரமும் மானியமும் வழங்கி இழப்பைச் சந்தித்துக்கொண்டிருப்பது மாநில அரசுகள்தானே! ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டிருப்பதே எதிர்ப்பில் உள்ள நியாயத்தை உணர்த்துகிறது!
அ. கருப்பையா, பொன்னமராவதி.
பாதிப்பு
மின்விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் நலன் குறித்து சிறிதும் அக்கறை இருக்காது. இப்போது தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் நூறு யூனிட் இலவச மின்சாரமும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகைகளெல்லாம் நிறுத்தப்படக்கூடும். ஒரு சில மாநிலங்களில் விவசாயிகளுக்கு மட்டமல்லாது அவர்களின் குடும்பங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் நிறுத்தப்பட்டு விடும். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பாதிப்பு அடைவார்கள்.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
ஏகபோக உரிமை
மின்சாரத்துறை மத்திய அரசின் வசம் சென்று விட்டால் மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்குகின்ற இலவச மின்சாரமும், பயனார்களுக்கு வழங்குகின்ற நூறு யூனிட் இலவச மின்சாரமும் முடிவுக்கு வந்துவிடும். மேலும், தனியார் துறையிடம் மின்சாரத்துறை சென்று விட்டால் அவர்களை நம்பியே நாம் இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். அவர்களுக்கு ஏகபோக உரிமை கிடைப்பதால், அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மின்சாரமும் வேண்டாதவர்களுக்கு மின்சாரத் தடையும் வழங்குவார்கள். எனவே மத்திய அரசினுடைய மின்சார சீர்திருத்த மசோதா தேவையற்றது. திரும்பப் பெற வேண்டியது.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
மறுபரிசீலனை
மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானது என்று கூறப்படுவது சரிதான். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை மக்களுக்கு எவ்வித பாதுகாப்போ, உத்தரவாதமோ இம்மசோதாவில் இடம் பெறவில்லை. மின்விநியோகத்துறையில் தனியாரை அனுமதிக்கும் விதமாகவே பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி உருவாக்கியுள்ள மின்சாரக் கட்டமைப்புகளை எவ்வித செலவின்றி தனியார்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதா குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுநம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT