விவாதமேடை

"அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

குழப்பம்
 அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு பிறரை எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஓய்வூதியம் அவசியம். புதிய ஓய்வூதியத் திட்டம் குழப்பம் நிறைந்ததாக உள்ளது. அரசு ஊழியர்கள் கௌரவமாக வாழ்வதற்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 கைவிடக்கூடாது
 பல ஆண்டுகள் அரசுக்கு ஊழியம் செய்த ஒருவரை அரசு அப்படியே கைவிட்டுவிடக்கூடாது. இதற்கு ஒரு மாற்றாக ஒருவர் ஓய்வு பெறும்போது கடைசியாக வாங்கிய மாத ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிலையான ஓய்வூதியமாகத் தரலாம். இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை கட்டுப்படுத்துவதோடு, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரு பொருளாதார பாதுகாப்பையும் உறுதிப்
 படுத்தும்.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 புதிய திட்டம்
 புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அரசுக்கு பெரும் நிதிச்சுமை என அரசு கருதினால் அவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கக்கூடிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இணையாகத்தான் அமைய வேண்டும் என்பதில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 ஏற்புடையதன்று
 இக்கருத்து ஏற்புடையதன்று. அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டமே வேண்டும் என்பதால் அரசுக்கு அதிக பணச்சுமை ஏற்படுகிறது. அரசின் வருவாயில் பெரும் பகுதி இதற்கே செலவிடப்படுகிறது. இதனால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த இயலாமல் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. குறிப்பிட்ட சதவீதமே இருக்கும் அரசு ஊழியர்களுக்காக, மக்கள் வரிப்பணம் மொத்தத்தையும் செலவிடுவது என்பது ஏற்க இயலாதது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 வளர்ச்சிக்கு தடை
 பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் துணிந்து எடுக்கப்பட்ட முடிவை அரசியல் லாப நோக்கில் மீண்டும் கொண்டு வருவது தமிழக வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கும். மக்களை பாதிக்காத வண்ணம் வருவாயை பெருக்குவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். தங்கள் வேலையை தக்க வைக்க தனியார் துறை ஊழியர்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது அரசு இதுபோன்ற விசயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 தலையாய கடமை
 பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது இன்றைய அரசின் தலையாய கடமையாகும்.
 அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
 பெரும் உதவி
 அரசுப் பணியில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒன்றே முதுமைப்பருவத்தில் வாழ்க்கையை சிரமமின்றி நடத்தி செல்வதற்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் தொகை மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
 மு. நடராஜன், திருப்பூர்.
 நிதிச்சுமை
 ஓய்வூதியர் ஒருவர் சராசரியாக 20 ஆண்டுகள் ஓய்வூதியம் பெறுவார். அவர் இறந்த பிறகும் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் தொடரும். ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான மத்திய - மாநில அரசு பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதனால் மாதாமாதம் அரசின் ஓய்வூதிய நிதிச்சுமை கூடிக் கொண்டே போகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் அரசு நிதிச்சுமையில் மூழ்கிவிடும்.
 வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
 பாதுகாப்பு
 அரசு ஊழியர்கள் அரசுப்பணி புரிந்து ஓய்வு பெற்றபின் அவர்களின் வாழ்க்கையை நடத்த உதவுவது, இந்த சொற்ப ஓய்வூதியம்தான். புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு தொகையை மொத்தமாக அளித்து தன் கடமையை முடித்துக் கொள்கின்றது. இளமையை முழுமையாக அரசுப்பணியில் தொலைத்தவருக்கு ஓய்வூதியம்தான் முதுமையில் பாதுகாப்பைத் தரும். பழைய ஓய்வூதியம்தான் அந்தப் பாதுகாப்பைத் தரும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 வாய்ப்பு
 தற்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே ஓய்வூதியமாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த ஒட்டுமொத்த தொகையினை வாரிசுகள் பறித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் பழைய ஒய்வூதியம் என்பது சாகும்வரை அந்த அரசு ஊழியருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.
 ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
 தெளிவு இல்லை
 புதிய ஓய்வூதியத் திட்டம் தொடங்கி சுமார் இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்றுவரை தெளிவான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம், எவ்வளவு குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றில் தெளிவான முடிவுகள் இல்லை. எனவே பழைய ஓய்வூதியத் திட்டம்தான் பணியாளர்கள் வாழ்வில் பாதுகாப்பை வழங்கும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 முரண்பாடு
 ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் பணியிலிருந்தவருக்கும், பின்னால் பணியில் சேர்பவருக்குமிடையே ஓய்வூதிய முரண்பாடு என்பது நியாயமற்றது. அதோடு புதிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தை முதலீடு, அதிகபட்ச பங்குத்தொகை, ஓய்வூதியத்தை மொத்தமாகப் பெறுதல் போன்ற அம்சங்கள் ஓய்வூதியம் பெறுவோருக்கு சாதகமின்றிப் போகலாம். எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே சரியானதாகும்.
 கே. ராமநாதன், மதுரை.
 சந்தேகமே
 அரசு ஊழியர்களுக்குபழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லது. ஆனால் அரசு இதைச் செய்யுமா என்பது சந்தேகமே. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 2003-க்குப்பிறகு பணியேற்று ஓய்வு பெற்றவர்களுக்கும் பணிக்கொடை மற்றும் தொகுப்பூதியத்துடன் வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் பின்னர் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை வழங்க நேரும். இன்றைய நிதிநெருக்கடி இதற்கு இடம் தருமா?
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அவசியம்
 நுகர்வு கலாசாரம், முதியோர் இல்லங்கள் ஆகியவை அதிகரித்துள்ள இக்காலத்தில் நிரந்தரமான ஓய்வூதியம் மிகவும் அவசியமாகும். வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவையை வழங்கிய ஒரு பிரிவினருக்கு அவர்களது முதுமைக் காலத்தில் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆங்கிலேயர்கள் காலம் முதல் தொடர்ந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 ம. கதிரேசன், மதுரை.
 மதிப்பு இருக்காது
 அரசுப்பணியில் ஏறத்தாழ 30ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு முதுமைக்காலத்தை வறுமையின்றிக் கழிக்கவும் கெளரவமாக வாழவும் பழைய ஓய்வூதித் திட்டமே வழிகோலும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியம் கிட்டாவிடில் அவர்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு இருக்காது. அரசு ஊழியருக்கு கடைசி காலத்தில் கைகொடுப்பது பழைய ஓய்வூதியத் திட்டமே.
 உ. இராஜமாணிக்கம், ஜோதி நகர்.
 நாட்டுக்கு நல்லது
 பழைய நடைமுறையால் அரசின் வருவாயில் பெரும்பகுதியை ஓய்வூதியத்திற்கே செலவிட வேண்டிய நிலை இருந்தது. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே குடிமக்கள் மீது அதிக வரிச்சுமையை ஏற்றிவிட்டது அரசு. இதற்கு மேலும் ஏற்ற முடியாது. இதனை அரசு ஊழியர்கள் புரிந்துகொண்டு புதிய ஓய்வூதிய முறையை ஏற்றுக்கொள்வதுதான் நாட்டுக்கு நல்லது.
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT