விவாதமேடை

"தற்கொலை செய்துகொள்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பது தவறு என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

22nd Sep 2021 03:54 AM

ADVERTISEMENT

 ஏற்புடையதல்ல
 தற்கொலை செய்துகொள்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பது தவறு என்பது சரியான கருத்து. இந்த உலகில் வாழ்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உழைப்பு மட்டுமே ஒருவரை உயர்த்தும் என்பதை உணர்ந்து விட்டால் தற்கொலை முடிவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் எடுத்துவிடும் தற்கொலை முடிவு அவருடைய குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துவிடும் என்பது உண்மைதான். அதற்காக தற்கொலை செய்து கொள்ளும் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதல்ல.
 மா. பழனி, தருமபுரி.
 கோழைத்தனம்
 ஒருவரின் தற்கொலைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும், அதற்காக மக்கள் வரிப்பணத்தை நிவாரணமாக வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகும். வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள பயந்து தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம். அதற்கு அரசு நிவாரணத் தொகை வழங்கலாமா? ஏற்கெனவே, ஏராளமான இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்கிவிட்டது அரசு. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்துக்கும் பணத்தை செலவிடுவது தவறு. தேர்வுக்கு பயந்து தற்கொலை முடிவை எடுக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
 கலைப்பித்தன், சென்னை.
 முதல் காரணம்
 அண்மைக்காலமாக மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது. இது வெறுக்கத்தக்க செயல். மருத்துவப் படிப்பு தவிர வேறு படிப்புகளே இல்லையா? அவற்றில் படித்து முன்னேறலாமே. தாழ்வு மனப்பான்மையே தற்கொலை முடிவுக்கு முதல் காரணமாகும். மகாகவி பாரதியார் "தோல்வியில் கலங்கேல்' என்று கூறியிருப்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். நிவாரணத்தொகை தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்தினருக்கு பயன்படும் என்று அரசு கருதலாம். ஆனால், அது தற்கொலையை ஊக்கப்படுத்தும் செயலாகத்தான் அமையும்.
 பா. இராமகிருஷ்ணன், சிந்துபூந்துறை.
 ஊக்குவிப்பு
 ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட காரணங்களுக்காக எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு நிவாரண நிதி வழங்குகிறதா? இல்லையே. நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொள்வோரின் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை எதற்கு? இது "நீட்'டை வைத்து அரசியல்வாதிகள் ஆடும் விளையாட்டே. நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சியளிப்பதை விட்டுவிட்டு, நீட் ரத்து ஆகும் என்று தவறான தகவலைப் பரப்பினார்கள். நீட் தேர்வு உறுதியானதும் கோழை மாணவர்கள் தற்கொலை முடிவை எடுத்தார்கள். உடனே அரசு நிதி வழங்குகிறது. இது தற்கொலையை ஊக்குவிப்பதல்லாமல் வேறென்ன? தற்கொலைகள் கூடாது எனும் நிலை வரவேண்டுமானால் அரசு நிவாரணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
 கே. வேலுச்சாமி, தாராபுரம்.
 தவறான நடைமுறை
 இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை வழங்குவது ஏற்புடையது. ஆனால், தற்கொலை செய்துகொள்வோரின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பது ஏற்க இயலாதது மட்டுமல்ல தவிர்க்கப்பட வேண்டியதுமாகும். இதனால் தற்கொலைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களின் மீது அரசியல் தலைவர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், அவர்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்தோ கட்சி நிதியிலிருந்தோ நிவாரணத் தொகையை வழங்கலாம். அரசுப் பணத்தை வழங்குவது தவறான நடைமுறையை உருவாக்குவதாகும்.
 எம். ஜோசப் லாரன்ஸ், சிக்கத்தம்பூர்பாளையம்.
 குற்றம்
 ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உளவியல் காரணங்களும் சமூகக் காரணங்களும் இருக்கக்கூடும். ஒருவரைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுதல் சட்டப்படி குற்றமாகும். சமூக காரணிகளால் நிகழும் தற்கொலைகளுக்கு அரசு தானே வலிய வந்து பொறுப்பேற்று நிவாரணம் அளிப்பது வழக்கமாகிவிட்டது. இச்செயல் ஏற்கத்தக்கதல்ல. இதற்குக் காரணம் மக்கள் மீது உள்ள அக்கறை என்று கூற முடியாது. இதற்கு அரசியல் உள்நோக்கம் உண்டு. மற்றொரு கோணத்தில் இது தற்கொலையை ஊக்குவிக்கும் செயலாகவும் கருதலாம். ஆதலின் அரசு சார்பாக நிவாரணத்தொகை அளிப்பதும் குற்றம்தான். அது தவிர்க்கப்பட வேண்டியதே.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 கருணை நோக்கு
 பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் ஒரு பிரச்னையால் தானும் பாதிக்கப்பட்டு மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு ஒருவர் தள்ளப்படும்போது அதனைக் கருணையோடு நோக்குவதில் தவறில்லை. ஒருவர் தனது குடும்ப பிரச்னையால் சொந்த விஷயங்களுக்காக தற்கொலை முடிவை மேற்கொண்டால் யாரும் அவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதில்லை. ஒரு பொது பிரச்னையை முன்வைத்து ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும்போது அவரை நம்பியிருந்த குடும்பத்திற்கு ஒரு சிறு ஆறுதலாக அரசு நிவாரணம் அளிப்பதில் தவறில்லை. இதனை விமர்சனம் செய்து கொண்டிருக்காமல் கருணையோடு அணுக வேண்டும்.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 உலக மகா தவறு
 ஒருவர் கோழைத்தனமாகத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டிக்காமல், அரசே அவர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அளித்து, அந்த கோழைத்தனத்தை ஊக்குவிக்கலாமா? வாழ்வில் சின்னச் சின்ன சவால்களைக் கூட சந்திக்கத் திராணியில்லாமல் கோழைத்தனமாக தன் வாழ்வையே முடித்துக்கொள்வது சரியா? அந்த செயலுக்கு அரசு நிவாரணத் தொகை அளிப்பது உலக மகா தவறு. இயற்கைச் சீற்றத்தால் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ,தேசம் காக்கும் பணியில் உயிரிழந்தவர்களுக்கும் , சமூகப் பிரச்னைகளுக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்குவது நியாயம். மற்றபடி தற்கொலை செய்து கொண்ட நபர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும், நிவாரணத் தொகையும் அளிப்பது தேவையற்றது. தற்கொலைகளுக்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
 உதயம் ராம், சென்னை.
 நியாயமற்றது
 மாணவர்கள் தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வு முடிவுகளைப் பார்த்தும் தற்கொலை செய்து கொள்வதை எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுக்க முடியவில்லையே. இவற்றையெல்லாம் நோக்கும்போது பயம் காரணமாகவும், தன்னம்பிக்கை இன்மையாலும்தான் பல தற்கொலைகள் நிகழ்வதாகக் கருதவேண்டியுள்ளது. இவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத்தொகை வழங்குவதால் அந்த இழப்பை ஈடு செய்யமுடியாது. அரசு நிவாரணம் வழங்குவது அரசியல் காரணத்தால்தானே தவிர வேறில்லை. இது மறைமுகமாக தற்கொலையை ஊக்கப்படுத்துவதாகவே அமையும். எனவே அரசு அவர்கள் குடும்பத்தினருக்கு வேறு வகையில் உதவி செய்யலாம். நிவாரணத் தொகை வழங்குவது முற்றிலும் நியாயமற்றது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கடமை
 மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு குறித்த பயமும், தேர்வு முடிவு குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில் மாணவர்கள் பலர் மனவுறுதி இழந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிடுகின்றனர். அப்படி தற்கொலை செய்துகொள்பவர்களின் குடும்பத்தாருக்கு அரசு நிவாரணம் வழங்குவது என்பது தற்கொலையை மேலும் ஊக்குவிப்பதாகவே அமையும். தேர்வு பயத்தினைப் போக்க வளமான எதிர்காலத்தை மனதில் பதிக்கும் வகையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மனதைரியத்தையும் மாணவரிடையே ஏற்படுத்த வேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமையாகும். குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அளிப்பதால் இழந்த உயிர் திரும்பி வராது. தற்கொலைக்கு சன்மானம் அளிப்பது போன்ற அரசின் இந்தச் செயல் முற்றிலும் தவறானது!
 கே. ராமநாதன், மதுரை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT