விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "அரசு ஊழியர்களின் பணி அழுத்தத்தை குறைக்க பணியிடங்களில் 5 நிமிட யோகா இடைவேளையை உருவாக்கியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

15th Sep 2021 04:28 AM

ADVERTISEMENT

தேவையற்றது

அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ஈடுபாட்டுடன் செய்தாலே அவர்களின் மன அழுத்தம் நீங்கிவிடும். பணி நேரத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் அதனைப் போக்க பல வழிகள் உள்ளன. ஒரு சிலருக்கு தேநீர், சிலருக்கு பாடல்கள், சிலருக்கு நண்பர்களுடனான சிறு உரையாடல் இப்படி பல வழிகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஊழியர்களின் மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சியை உருவாக்குவது தேவையற்றது. 

கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.

 

ADVERTISEMENT

சரியான முடிவு

இது மிகவும் சரியான முடிவு. பணிபுரியும் இடத்தில் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா பயிற்சி பெரிதும் உதவும். அரசு அலுவலகங்களில் தேநீர் இடைவேளைக்கு மாற்றாக இனி யோகா இடைவேளையை உருவாக்கலாம். யோகா பயிற்சி செய்வது ஊழியர்களின்  உடல் நலனுக்கும் மிகவும் நல்லது. அவர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் நிறுவனத்தின் உற்பத்தி திறனும் கூடும்.                               

ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.


பயன் கிட்டாது

ஏற்கெனவே அரசு ஊழியர்கள் பணியிடத்தில் பல்வேறு இடைவேளைகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். இவற்றோடு யோகா பயிற்சிக்கென ஐந்து நிமிட இடைவேளையை அரசே அறிவித்திருப்பது தேவையற்றது. அலுவலகப்பணி தொடங்குமுன் ஐந்து நிமிடங்கள் யோகா பயிற்சியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தலாம். அலுவலகப் பணி நேரத்தில் யோகா பயிற்சிக்காக இடைவேளை விடுவதால் பயன் எதுவும் கிட்டாது. 

அ. சம்பத், சின்னசேலம். 


இடையூறு


அரசு பணியார்களுக்கு யோகா பயிற்சிக்கென இடைவேளை தருவது அவர்களின் பணிக்கு இடையூறாகத்தான் அமையும். அலுவலகப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள முடியும். யோகா பயிற்சி தேவையில்லை. மக்களின் மன அழுத்தத்தை குறைப்பதே அரசு பணியாளர்களின் முதல் கடமை. அலுவலக நேரம் முடிந்த பின்னர் யோகா பயிற்சி செய்யலாம்.

க. ரவீந்திரன், ஈரோடு. 


நிர்பந்தம்


அரசுத் துறையில் காலியாகும் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசு அலுவலகங்கள் பலவற்றில் போதிய அளவில் ஊழியர்கள் பணியில் இல்லாத நிலையே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் குறைந்த அளவு ஊழியர்கள் இடைவேளை இல்லாமல் பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அப்படியே சிறு இடைவேளை கிடைத்தாலும் அவர்கள் தேநீர் சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறுவதற்குத்தான் விரும்புவார்களே தவிர யோகா பயிற்சியில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்கள்.

கா. திருமுருகன், வள்ளியூர்.


அடிப்படைகள்


அலைபாயும் மனதை அடக்கி ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட, யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை அடிப்படைகளாகும். யோகா பயிற்சியை  ஐந்து நிமிடத்தில் செய்து முடித்து விடுவது சாத்தியமல்ல. குறைந்தபட்சம் முப்பது நிமிடமாவது யோகா பயிற்சி செய்தால்தான் அதனால் பலன் கிட்டும். அலுவலகங்களில், குறிப்பாக அரசு அலுவலகங்களில் அமைதியான முறையில் யோகா செய்வதென்பது நடக்காத காரியம்.

குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.   

 

வரப்பிரசாதம்


அரசு ஊழியர்கள், குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து அன்றைய பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டால், அவர்களுக்குப் பணிச்சுமை கூடி, மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் தாமதமாக வருவதால், வந்தவுடனேயே பணிச்சுமையை எண்ணி மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட ஊழியர்களுக்கு யோகா பயிற்சி என்பது ஒரு வரப்பிரசாதமாகும். அவர்கள் ஐந்து நிமிட யோகா பயிற்சி செய்வது நல்லது. 

பா. செல்வராஜ், பெரியகுளம்.   


மன அழுத்தம் குறையாது


அரசு அலுவலகங்களில் ஊழியர்களில் பலரும் அடிக்கடி தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து சென்று விடுவதை நாம் நாள்தோறும் பார்க்கிறோம். இதனால் அவசரப் பணிக்காக அங்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். அரசு ஊழியர்களுக்குப் பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், ஐந்து நிமிடம் யோகா பயிற்சி செய்வதால் அவர்களின் மன அழுத்தம் குறைந்துவிடாது.  

மா. பழனி, தருமபுரி.   


ஒவ்வாமை


பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் இடையே அரசு ஊழியர்கள் என்றாலே ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐந்து நிமிடம் யோகா பயிற்சி  செய்தால், அவர்களின் பணி அழுத்தம் குறையும். அதனால் அரசு அலுவலகங்களில் பணி சிறப்பாக நடக்கும். காலப்போக்கில் லஞ்சம், ஊழல் போன்றவை இல்லாத நிலையும் உருவாகும்.

ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.  


சச்சரவு


பணியிடங்களில் ஐந்து நிமிட யோகா இடைவேளையை உருவாக்கியிருப்பது சரியில்லை. அலுவலக நேரத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதை எல்லாரும் விரும்ப மாட்டார்கள். அதனை விரும்புகிற சிலர் மட்டுமே அந்த ஐந்து நிமிடம் யோகா பயிற்சியில் ஈடுபடுவர். மற்றவர்கள் யோகா பயிற்சியிலும் ஈடுபட மாட்டார்கள்; அலுவலகப் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். இதனால் அலுவலகத்தில் சச்சரவுதான் உருவாகும்.

உஷா முத்துராமன், மதுரை.


ஐயமில்லை


அரசின் பல துறைகளிலும் பணியாற்றுவோருக்கு, குறிப்பாக காவல்துறையினர், மருத்துவர் போன்றவர்களுக்கு எப்போதுமே பணிச்சுமை அதிகமாகவே உள்ளது. அதனால், அவர்கள் பொதுமக்களுடன் இன்முகத்தோடு உரையாட இயலாமல் எரிச்சல் அடைகிறார்கள். இந்த நிலையை யோகா பயிற்சி நிச்சயம் மாற்றும். யோகா பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து ஊழியர்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. 

பா. சிதம்பரநாதன், கருவேலங்குளம்.     

 

வர்த்தகம்


துரித உணவு போல், அரசு துரித யோகா அளிக்க முடிவெடுத்துள்ளது போலிருக்கிறது. இன்றைய நிலையில் யோகா, தியானம் எல்லாம் வர்த்தகமாக மாறிவிட்டன. அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டுமானால், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் ஊழியர்கள் நியமனம் செய்ய வேண்டும். இவைதான் சரியான நடவடிக்கைகள் ஆகும்.    

பி.கே. ஜீவன், கும்பகோணம்.


சுறுசுறுப்பு


இந்த முடிவு மிகவும் சரியானதே. இந்த யோகா பயிற்சியை தினந்தோறும் காலையில் அலுவலகப் பணி தொடங்கு முன் செய்யச்சொல்லலாம். ஜப்பான் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், காலையில் பணியைத் தொடங்கு முன் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்கிக் கொள்வர். அதுபோல் நம் நாட்டில் யோகா பயிற்சியை முடித்து அன்றாடப் பணியை அரசு ஊழியர்கள் தொடங்கலாம்.

கே. விஸ்வநாதன், கோயமுத்தூர்.


நிதர்சனம்


அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. அதனால், பணிச்சுமை அதிகரித்து ஊழியர்கள் மன அழுத்தம் அடைகின்றனர் என்பது நிதர்சனம். இந்தியாவில் தோன்றிய யோகாவை உலகமே ஏற்று அதன் பயன்களைப் பெற்றுவருவது கண்கூடு. அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணியிடத்தில் யோகா பயிற்சி மேற்கொள்ள இடைவெளியை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.  

அ. கருப்பையா, பொன்னமராவதி.


வரவேற்கத்தக்கது


இன்றைக்கு தனியார் நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களின் பணி அழுத்தத்தைக் குறைக்க அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டன. யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஏற்படும். தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் நிலையிலுள்ள அரசு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஐந்து நிமிடம் யோகா இடைவேளை அளிக்க முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

கே. ராமநாதன், மதுரை.

 

மாற்றம் வராது


யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை காலையிலோ மாலையிலோ செய்வதுதான் முறையானது என பயிற்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், பரபரப்பான அலுவலக பணிச் சூழலில் ஐந்து நிமிடம் மட்டுமே யோகா செய்வதால் ஊழியர்களிடம் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. நடைமுறையில் எது பலனளிக்கும் என்பதை அறிந்து அரசு அதை முறையாக அமல்படுத்தினால்தான் ஊழியர்கள் பயனடைவார்கள்.  

சுரேஷ் சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT