விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்புக் கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதா?'  என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

8th Sep 2021 04:15 AM

ADVERTISEMENT

அரசின் கடமை
 ஆசிரியர் பணியில் சேர்வதற்கென்றே ஏராளமானோர் ஆசிரியப் பணி பயிற்சியை முடித்துவிட்டு பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பணி ஆணையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களை உடனை பணியமர்த்த வேண்டியது அரசின் கடமை. காலியாகும் ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இடைக்கால ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறையை அரசு கைவிட வேண்டும்.
 எம். ஜோசப் லாரன்ஸ்,
 சிக்கத்தம்பூர் பாளையம்.
 ஏற்புடையதல்ல
 அரசின் எந்தவொரு பணியில் சேருவதற்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு மட்டும் வயது வரம்பு கூடாது என்கிற கோரிக்கை ஏற்புடையதல்ல. வயது முதிர்ந்த நிலையில் ஆசிரியர் பணியில் சேருபவர்களால் ஊக்கத்தோடு பணியாற்ற இயலாது. அவர்களால் மாணவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாது. ஆசிரியர் பணிக்கு இளைஞர்களே பொருத்தமானவர்கள். எனவே, இக்கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியது.
 கே. விஸ்வநாதன், கோயமுத்தூர்.
 அளவுகோல்
 இன்றைய மாணவர் உலகம் ஒழுக்கமுள்ளதாக, நேர்மையானதாக அமைந்தால்தான் நாளைய சமுதாயம் சிறப்பாக இருக்கும். அதற்கு அவர்களை சிறப்பானவர்களாக உருவாக்கக்கூடிய ஆசிரியர்களே தேவை. எனவே, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை முக்கியமாகக் கருதாமல், தகுதியானவர்களையே தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். வெறும் ஆசிரியப் பணி பயிற்சி பெற்றவர் என்பது மட்டுமே அளவுகோல் ஆகாது.
 டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.
 சிக்கல்
 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆசிரியப் பணி வழங்கப்பட்டால், அவர்களால் நவீன கற்பித்தல் முறைகளை அறிந்துகொண்டு மாணவர்களுக்குப் புரியும்படி பாடங்களை நடத்த இயலாது. மேலும், மிகவும் தாமதமாக பணி நியமனம் பெறுவோர், குறைந்த ஆண்டுகளே பணியாற்ற முடியும் என்பதால் அவர்களால் புதிதாக பலவற்றைக் கற்றுக்கொண்டு, நவீன கற்பித்தல் முறைக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
 கலைப்பித்தன், சென்னை.
 தவிர்க்க முடியாது
 ஆசிரியப் பயிற்சி முடித்து பணிக்காக பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கும் பலருக்கும் வயது வரம்பு கடந்து விடுவது தவிர்க்க முடியாதது. ஆசிரியர் பணி வாய்ப்பு இல்லாமல் வயது வரம்பு தாண்டியும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பயிற்சி முடித்தவர்கள் விரக்தி அடைகின்றனர். எனவே, அரசு, அவர்களுக்கான வயது வரம்பைத் தளர்த்தி அவர்கள் ஆசிரியப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 முரண்பாடு
 ஆசிரியர் தகுதி தேர்வை எந்த வயதினரும் எழுதலாம் என்ற விதி உள்ள நிலையில் பணியில் சேர வயது வரம்பு நிர்ணயத்திருப்பது முரண்பாடு ஆகும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கானவர்கள் பணி நியமனத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே, இன்றைய கடுமையான வேலையின்மை சூழ்நிலையில் எந்த வயதிலும் பணிபுரிய தயாராக உள்ளார்கள். அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதே பிரச்னைக்கு ஏற்ற தீர்வாகும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 நிதர்சனம்
 ஆசிரியப் பணிக்கான கல்வித் தகுதி பி.எட் பட்டம் பெற்றிருப்பது ஆகும். அதில் ஒருவர் தேர்ச்சி பெற்றாலே ஆசிரியப் பணிக்கு அவர் தகுதியடைந்துவிடுகிறார் என்பதே நிதர்சனம். அதற்கும் மேலாக, தகுதித் தேர்வு என்று ஒன்று நடத்துவதையே ஏற்க முடியாது. அப்படியே பலர் அந்தத் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றாலும் அவர்களை வயது வரம்பைக் காரணம் காட்டி பணியில் சேர்க்க மறுப்பது அநீதியல்லாமல் வேறல்ல.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 நிரந்தரத் தீர்வு
 இக்கோரிக்கை ஏற்புடையதல்ல. இள வயதைக் கடந்த நிலையில் பணியில் சேர்ந்து என்ன செய்திட இயலும்? மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நீண்டகாலமாகக் காத்திருக்கும் போது அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் இதுவே நிரந்தர தீர்வாக இருக்கும். வயது வரம்பு கூடாது என்று கோரிக்கை வைப்பதே தவறு.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 தேக்க நிலை
 குறிப்பிட்ட ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு செய்யலாம். இவ்வாறு உள்ளவர்களுக்கு பணி வழங்கி விட்டு, அதற்கு பின்பு ஆசிரியர் பயிற்சியை முடிப்பவர்களுக்கு எப்போதும் போல பணி வழங்குவதை முறைபடுத்தலாம். சில ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்பாமல் இருப்பதே இந்த தேக்க நிலைக்குக் காரணம். ஆதலால் இக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யவேண்டி யது அவசியமாகும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 ஏமாற்றம்
 ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவது படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்த ஏமாற்றம் ஏற்படும். தேவையான கல்வித் தகுதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி, தகுந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வயதினரும் ஆசிரியப் பணியில் சேரலாம் என்ற நிலை வர வேண்டும். வயது வரம்பு தேவை என்று அரசு முடிவெடுக்கக் கூடாது.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 வரம்பு கூடாது
 பல்வேறு காரணங்களால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வை பலராலும் குறித்த காலத்தில் எழுதி, தேர்ச்சி பெற முடியவில்லை. ஆகவே ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை நீக்க வேண்டும். அரசு தேர்வு வாரியம் கூறுகின்ற நிபந்தனைகளை எந்த வயதில் நிறைவுசெய்து இருந்தாலும் அவர்களை அரசு ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும். வயது வரம்பு காரணமாக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படக்கூடாது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 சரியன்று
 ஆசிரியப் பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் உள்ளன. ஆசிரியப் பயிற்சி முடித்து ஏராளமானோர் பணிக்காகக் காத்திருக்கும் இன்றைய நிலையில் ஆசிரியர்ப் பணி நியமனத்துக்கு வயது வரம்புக் கட்டுப்பாடு விதிப்பது சரியன்று. ஆசிரியப் பயிற்சி பெறுவதற்கும் பணியில் சேர்வதற்கும் வயது வரம்புக் கட்டுப்பாடு தேவையில்லை. வேண்டுமானால் அரசு பயிற்சிக் கல்லூரிகளைத் தவிர பிற தனியார் பயிற்சிக் கல்லூரிகளை மூடி விடலாம்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 மிகவும் கடினம்
 ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் பணி பயிற்சி முடித்த ஏராளமானோர் காத்திருக்கும் இன்றைய சூழலில், ஆசிரியர் வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கு நடுத்தர வயதாகி விடுகிறது. பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்றுக் கொடுப்பதும், இன்றைய மாணவர்களின் மனநிலையறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவதும் இவர்களுக்கு மிகவும் கடினம். எனவே மற்ற பணிகளைப்போல் ஆசிரியர் பணிக்கும் வயது வரம்புக் கட்டுப்பாடு தேவையானதே.
 கே. ராமநாதன், மதுரை.
 தகுதிதான் முக்கியம்
 ஆசிரியர் பணியில் சேர தகுதிதான் முக்கியமே தவிர வயது முக்கியமில்லை. வயது வரம்பு கூடவே கூடாது. வயது வரம்பு இருந்தால் தகுதியுள்ளவர்களை இழக்கும் நிலை உருவாகும். குடும்பசூழல் காரணமாக சில தகுதியுள்ள மகளிர் பணியில் சேர முடியாமல் போக வாய்ப்பு இருக்கும். சூழல் சரியான பின் வேலைக்கு செல்ல வழி தேடலாம். அந்த நேரத்தில் வயது வரம்பு ஒரு தடையாக இருக்கக் கூடாது. மற்ற வேலையோடு ஆசிரிய வேலையை ஒப்பிடுதல் தவறு.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 கண்கூடு
 ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். எதிர்கால சந்ததிகளை நல்ல முறையில் உருவாக்க வேண்டிய பொறுப்பு மிக்க பணி ஆசிரியர் பணி. கற்பித்தல் திறன் என்பது எல்லா வயதிலும் ஒரே சீராக இருப்பதில்லை. இன்றைய மாணாக்கர்களைக் கட்டுப்படுத்த இளம் ஆசிரியர்களே சிரமப்படுகிறார்கள் என்பது கண்கூடு. எனவே, ஆசிரியப் பணிக்கு கல்வித்தகுதி இருப்பது போல் வயதுத்தகுதி இருப்பதும் அவசியம்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 வேறுபாடு
 கடந்த காலத்தில் வயது வரம்பின்றி பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது சிலர் வயது முதிர்ந்த நிலையில் பணியில் சேர்ந்தனர். அவர்கள் படித்த படிப்புக்கும் பள்ளிகளின் தற்போதைய பாடத்திட்டத்திற்கும் மிகுந்த வேறுபாடு காணப்பட்டது. அதனால் அவர்களால் திறம்பட பாடங்களைக் கற்பிக்க இயலவில்லை. தற்போது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. ஆகவே வயது வரம்பை நீக்கக் கூடாது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்சரம்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT