விவாதமேடை

"அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 58-ஆகக் குறைக்க வேண்டும் என்கிற யோசனை ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

1st Sep 2021 04:25 AM

ADVERTISEMENT

ஏற்புடையதே
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 58-ஆகக் குறைக்க வேண்டும் என்கிற யோசனை ஏற்புடையதே. படிப்பை முடித்து பட்டம் பெற்று அரசு வேலைக்காக எத்தனையோ இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், அவ்வப்போது அரசுத்துறையில் காலியாகும் பணியிடங்களை உடனுக்குடன் அரசு நிரப்ப வேண்டும். அரசின் நிதிச்சிக்கலுக்கு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தீர்வாகாது.
கோ. லோகநாதன், திருப்பத்தூர்.
அரசின் கடமை
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது முன்பு 58-ஆகத்தான் இருந்தது. கடந்த அரசு அதை 60-ஆக மாற்றியமைத்தது. எனவே, மீண்டும் அதனை 58-ஆகக் குறைப்பதில் தவறு இல்லை. பட்டப்படிப்பு தேவைப்படாத சுகாதாரப் பணியாளர், கடைநிலை ஊழியர் போன்ற வேலைக்குக்கூட பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, அரசு ஊழியர் ஓய்வு வயதை 58-ஆகக் குறைக்க வேண்டியது அரசின் கடமை.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
சரியல்ல
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்குத் தரவேண்டிய பணிக்கொடைகளைத் தருவதற்கு அரசின் நிதிநிலை இடமளிக்கவில்லை என்பதால் அவர்கள் ஓய்வு பெறும் வயதை அரசு உயர்த்திக்கொண்டே போவது சரியல்ல. இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு அதிகாரி ஓய்வு பெறும்போது அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தில் இரண்டு இளைஞர்களுக்கு ஊதியம் வழங்க முடியும்.
மகிழ்நன், சென்னை.
அவசியம்
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை மிச்சப்படுத்தவே ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ஆகக் குறைக்க வேண்டியது அவசியம்.
ஆர். சம்யுக்தா, மதுரை.
வாக்குவங்கி
58 வயதில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பயன்களைக் கொடுக்க முடியாத நிலையில் அவர்களின் வாக்குவங்கியைக் கருதியே ஓய்வு வயதை 58-லிரு ந்து 59 என்றும் அடுத்து 60 என்றும் உயர்த்தியது. இது முற்றிலும் தவறாகும். ஓய்வு பெறும் வயதை 58 என நிர்ணயித்தது, பணி செய்பவரின் உடல் திறனைக் கருத்தில் கொண்டே. பணி ஓய்வு பெறும் இறுதியாண்டில் மனநிறைவோடு பணிசெய்வோர் மிகக்குறைவு.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
ஏமாற்றம்
கடந்த முறை ஆட்சியிலிருந்த அரசு, ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59-ஆக மாற்றி, பின் 60-ஆக மாற்றியது இளைஞர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியது. இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58-ஆக குறைப்பதுதான் சரியாக இருக்கும். புதியவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக ஓய்வு பெறும் வயதைக் குறைப்பதே நல்லது.
ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
கேள்விக்குறி
60 வயது ஓய்வு என்பது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு மிகப்பெரிய பாதிப்பையே ஏற்படுத்தும். மேலும் 58 வயதுக்கு மேல் அவர்களால் தங்கள் பணியினை சிரத்தையோடு செய்ய இயலுமா என்பதும் கேள்விக்குறியே. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், நோய்த்தொற்று காரணமாக ஆள் குறைப்பு என இருக்கும்போது 60 வயதில் ஓய்வு என்பது தேவையற்றது. 58 என்பதே சரியாகும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
குறைப்பதுதான் சரி
லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பைத் தேடிஅலைந்து கொண்டிருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் பணி காலத்தை 58-லிருந்து 60-ஆக மாற்றியது இளைஞர்களிடையே மிகப்பெரிய விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58-ஆக குறைப்பதுதான் சரியாக இருக்கும்.
மா. பழனி, தருமபுரி.
நல்ல வாய்ப்பு
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59-ஆகவும், பின்னர் 59-லிருந்து 60-ஆகவும் உயர்த்தியதின் மூலம் இரண்டு ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வாய்ப்பு, கூடுதல் ஓய்வு ஊதியம் பெற வாய்ப்பு இவை ஏற்பட்டுள்ளன. அரசுப்பணியில் தாமதமாக சேர்ந்தவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பு. ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58-ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அர்த்தம் இல்லை.
க. ரவீந்திரன், ஈரோடு.
நிதி இழப்பு
ஒருவருக்கு ஐம்பத்தெட்டு வயதுக்குமேல் ஆன நிலையில் பணியில் தொய்வு ஏற்படும்.ஆனால் அவர்களின் பணி மூப்பு காரணமாக அவர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டியுள்ளது. எனவே அரசுக்கு அதிக நிதி இழப்பு ஏற்படுகிறது. இளைஞர்கள் கல்வியை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நமது மாநிலத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக ஓய்வு வயதை 58-ஆகக் குறைக்க வேண்டும்.
கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
முன்னுரிமை
நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59-ஆக உயர்த்தி, பின்னர் அதை 60-ஆக மாற்றியமை த்தனர். ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணப்பயன்களை, அவர்கள் ஓய்வு பெறும் தேதியன்றே வழங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
க. இளங்கோவன், நன்னிலம்.
துரோகம்
லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில் ஓய்வு பெறும் வயதை 60-ஆக கடந்த அரசு உயர்த்தியது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். மேலும் 58 வயதில் ஓய்வு பெற்று ஓய்வூதியப் பலன்களைப் பெற்று தங்கள் மகன், மகள்களின் மேல்படிப்பு, திருமணத்திற்கு செலவு செய்யலாம் என எண்ணியிருக்கும் அரசு ஊழியர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறிவிடும்.
மு. நடராஜன், திருப்பூர்.
உச்சவரம்பு
ஒருவர் பணி ஓய்வினைப் பெற்று, பணி ஓய்வுப் பயன்கள் மூலம் தன் மக்களின் கல்வி, திருமணம் போன்ற முக்கிய வாழ்நாள் கடமைகளை முடித்திட அவர் 58 வயதில் ஓய்வு பெறுவதே சரியானது. அரசுப் பணியில் சேரக்காத்திருக்கும் வேலையில்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேலையில் சேர உச்சவரம்பு வயது விளிம்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும் இது அமையும்.
கே. ராமநாதன், மூன்றுமாவடி.
கொள்கை முடிவு
ஓய்வு பெறும் வயதை 58-ஆகக் குறைப்பதால் ஊழியர்களுக்கு ஏதாவது சாதகமோ, பாதகமோ இருக்கலாம். ஏற்கெனவே அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 55-ஆக இருந்தது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அரசு ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் ஓய்வு வயது 58-ஆக உயர்த்தப்பட்டது. ஓய்வு பெறும் வயதைக் கூட்டுவதும் குறைப்பதும் அவ்வப்போதுள்ள அரசின் கொள்கை முடிவாகும்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.
புரியாத புதிர்
அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது வருகிற பணத்தைக்கொண்டுதான் பிள்ளைகள் திருமணத்தை நடத்துவதும், வாங்கிய கடனை அடைப்பதும் நடுத்தர வர்க்கத்தினரின் வழக்கம். ஓய்வு பெறும் வயதை 58 ஆக்கிவிட்டு ஓய்வூதிய பணப்பயனை பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்பது நடுத்தர வர்க்கத்தை கண்டிப்பாக பாதிக்கும். அரசின் நிதிநிலை எப்போது சீராகும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
அடுத்த கட்டம்
பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்ன்றனர். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிப்பே போதும் என்கிற பணிகளுக்குக் கூட பட்டதாரிகள் விண்ணப்பிப்பதைப் பார்க்கிறபோது வேதனை ஏற்படுகிறது. வேலையை அடிப்படையாக வைத்தே ஓர் இளைஞனின் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். எனவே, ஓய்வு பெறும் வயதை 58-ஆகக் குறைக்க வேண்டும்.
சரவணராஜ், தேவகோட்டை.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT