விவாதமேடை

"காற்று மாசு, ஒலி மாசு இவற்றை உருவாக்கும் பட்டாசுப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

மறுப்பதற்கில்லை
 திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் பிரச்னை இல்லை. தீபாவளிப் பண்டிகை காலத்தில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த பிரச்னையைத் தீர்க்க, அரசாங்கம் பசுமைப் பட்டாசு தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதும் தவறில்லை. சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் சீனப் பட்டாசுக்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பண்டிகைக் காலத்தில் குழந்தைகளின் சந்தோஷம் இவற்றோடு சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 நகைப்புக்குரியது
 தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் குழந்தைகள் மகிழ்கின்றனர் என்பது மட்டுமல்ல, பட்டாசு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமும் உறுதியாகிறது. எனவே, பட்டாசுப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கூடாது. மேலும், பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டையும் நீக்க வேண்டும். நாள்தோறும் ரசாயன ஆலைகள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் இவற்றால் ஏற்படாத காற்று மாசும் ஒலி மாசும் ஒருநாள் வெடிக்கப்படும் பட்டாசால் ஏற்பட்டுவிடும் என்று கூறுவது நகைப்புக்குரியது.
 மகிழ்நன், கடலூர்.
 மாற்று வழி
 ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்பது ஏற்புடையதுதான். ஆனால், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்றுவழியை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். முதற்கட்டமாக பண்டிகை அல்லாத நேரங்களில், குறிப்பாக தேர்தல் வெற்றி, தலைவர்கள் வருகை ஆகியவற்றுக்கு பட்டாசு வெடிப்பதை அறவே தடை செய்ய வேண்டும். காற்று மாசு என்பது உலகளாவிய பிரச்னை. எனவே, காற்று மாசைத் தடுக்க உலக அளவில் பட்டாசை தடை விதிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 கேள்விக்குறி
 பட்டாசு பயன்பாட்டுக்கே முற்றாகத் தடை விதிப்பது என்பது, பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். ரசாயனங்கள் சேர்க்கப்படாத பசுமைப் பட்டாசுகளையும், மத்தாப்பு போன்றவற்றையும் பயன்படுத்துவதால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படாது. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை வரையறை செய்து அதைக் கண்காணித்தாலே போதும். முற்றாக தடை விதிக்கத் தேவையில்லை. சிறுவர்களைப் பொறுத்தவரை தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு இவை மூன்றும்தான். அப்படியிருக்க பட்டாசுக்கு தடை விதித்து சிறுவர்களின் கனவை சிதைத்துவிடலாகாது.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 தொடர்வது நல்லது
 ஒரு காலத்தில் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே பட்டாசு வெடிக்க ஆரம்பித்து தீபாவளி முடிந்தும் இரண்டு நாட்கள் பட்டாசு வெடிப்பார்கள். இப்போது தீபாவளி நாளில் மட்டும் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் பட்டாசு தயாரிக்கும் தொழில் நலிவடைந்து விடாமல் காப்பாற்றவும் மக்களிடையே நிலவும் பாரம்பரிய பழக்கத்தை மதிக்கும் வகையிலும் பட்டாசை முற்றிலுமாக தடை செய்யாமல் தற்போது உள்ள கட்டுப்பாடுகளின்படி தொடருவதே நல்லது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 மறந்துவிடக்கூடாது
 நாள்தோறும் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் காற்றுமாசை விட, அவற்றின் ஒலிப்பான் எழுப்பும் அதிக சத்தத்தால் ஏற்படும் ஒலிமாசை விட, ஆண்டுக்கு ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் அதிகமான காற்றுமாசோ ஒலிமாசோ ஏற்பட்டுவிடாது. தீபாவளியன்று குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் பட்டாசுகளை விரும்பி வெடிப்பார்கள். எனவே, மக்களுக்கு பண்டிகைக் கால மகிழ்வைத் தரக்கூடிய பட்டாசுக்கு தடை விதிக்கக்கூடாது. மேலும், பட்டாசுத் தயாரிப்புத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 ஏற்புடையதல்ல
 இக்கோரிக்கை ஏற்புடையதல்ல. தீபாவளி என்றாலே பெரியவர், சிறியவர் என எல்லோரும் விரும்புவது பட்டாசு வெடிப்பதைத்தான். புதிய ஆடைகளும் இனிப்புகளும் மற்ற பண்டிகை நாட்களில் கிடைத்து விடும். ஆனால் பட்டாசு வெடிக்கும் இன்பம் இந்த தீபாவளி பண்டிகையில் மட்டும்தான் கிடைக்கும். அனைத்து மதத்தினரும் விரும்பி பட்டாசு கொளுத்துவர். ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் அதிக அளவில் காற்றுமாசோ ஒலிமாசோ ஏற்பட்டுவிடாது. தென்மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஜீவாதாரமே பட்டாசுத் தொழில்தான். அவர்களுக்கு வருமானமே இல்லாமல் போய்விடும். எனவே, இக்கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது.
 உஷா முத்துராமன், மதுரை.
 விதிமுறைகள்
 பட்டாசு தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இப்படித் தடை விதிப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும். அப்படி ஒரு நிலை வர அரசாங்கமே காரணமாகிவிடக் கூடாது. ஆகவே அதிக அளவில் காற்றுமாசு ஏற்படுத்தாத வெடிப்பதற்கு அனுமதிக்கலாம். பட்டாசுத் தயாரிப்புக்கு கடுமையான விதிமுறைகள் தேவை. பட்டாசு வெடிப்பதற்கு விதிமுறைகள் தேவையில்லை. தீபாவளி பண்டிகை காலங்காலமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதனை மாற்றிவிட வேண்டாம்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 சரியாக வராது
 தீபாவளிக்குப் பட்டாசுகள் பலவிதங்களில் வருகின்றன. பழைய பெயரில் வெடிகள் இருந்தாலும் புதிய நூதனமான பட்டாசுகளே கடைகளில் மக்களை வெகுவாகக் கவர்ந்து இழுக்கின்றன. இதில் காற்று மாசு ஒலி மாசு என பார்த்து யாரும் வாங்குவதில்லை. மேலும் இப்பொழுது பட்டாசு வெடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. விலைவாசி ஏறி விட்டது. அதனால் காற்று ஒலி மாசு இவற்றை உருவாக்கும் பட்டாசுப் பயன்பாடுக்குத் தடை என்பதெல்லாம் சரியாக வராது. தீபாவளி என்பதே பட்டாசு வெடித்துக் கொண்டாடப்படும் பண்டிகைதான். அந்தக் கொண்டாட்டத்தைக் கெடுத்துவிடக் கூடாது.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 வேறு வழியில்லை
 பட்டாசுப் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது மிகவும் நியாயமானது. பல்வேறு மாசுகளால் இந்த பூமி நாளுக்கு நாள் தன்னுடைய இயல்பு நிலையை இழந்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. பண்டிகைகள், சடங்குகள் சம்பிரதாயங்கள், இறுதி சடங்கு என ஒவ்வொன்றுக்கும் பட்டாசு வெடிப்பது ஒரு கலாசாரமாகவே தமிழகத்தில் உருவெடுத்து விட்டது. இவற்றோடு மட்டும் முடிவதில்லை, தேர்தல் வெற்றியின்போதும், அரசியல் தலைவர்களின் வருகையின்போதும் மணிக்கணக்காக வெடிகளை வெடித்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது எதற்காக? இந்த அவலங்களைத் தடுக்க வேண்டுமானால், பட்டாசு பயன்பாட்டுக்கு தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
 மா. பழனி, தருமபுரி.
 ஆபத்து
 பட்டாசு வெடிக்கும்போது, அதில் கலந்துள்ள கந்தகம் காற்றில் கலந்து காற்றை மாசு படுத்துகிறது. காற்று மாசுபடுவதால் நாம் சுவாசிக்கும் காற்று மூச்சுத்திணறலை ஏற்படுத்தி நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதேபோன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் அதிக சத்தத்தின் விளைவால் ஒலி மாசு உண்டாகிறது. ஒலி மாசு காரணமாக நமது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகின்றன. எனவே மனித உயிரையே பறிக்கக்கூடிய ஆபத்தை உருவாக்கும் பட்டாசுப் பயன்பாட்டுக்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
 க. இளங்கோவன், மயிலாடுதுறை.
 உத்தரவாதம்
 நாளுக்குநாள் பெருகி வரும் எரிபொருள் வாகனங்கள், சரியான பராமரிப்பற்ற காலாவதியான வாகனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பைவிடவா வருடத்திற்கு ஒருநாள் பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக கொளுத்தப்படும் பட்டாசு அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது? மக்களின் ஒருநாள் மகிழ்ச்சிக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஆண்டு முழுவதும் உழைத்து உருவாக்கியவை பட்டாசுகள். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தரும் பட்டாசைப் பயன்படுத்தத் தடை விதிப்பது நியாயமற்றது. எனவே, பட்டாசுகளின் பயன்பாடுகளுக்குத் தடை விதிக்கக்கூடாது.
 கே. ராமநாதன், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT