விவாதமேடை

"பொது இடங்களில், நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

20th Oct 2021 03:41 AM

ADVERTISEMENT

"பொது இடங்களில், நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
 நெறிமுறைகள்
 பொது இடங்களில், நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்கிற கருத்து சரியானதே. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தாத இடங்களில் தலைவர்களின் சிலைகளை நிறுவலாம். சிலைகள் வைப்பதற்கு அரசு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். அதனை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றினால் எதிர்காலத்தில் சிக்கல்கள் உருவாகாது. தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட வேண்டியவை. அவர்களின் சிலைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
 மா.பழனி, தருமபுரி.
 மாற்றம் தேவை
 பொது இடங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டியதில்லை. அப்படி அகற்றுவதன் மூலம் அரசு அந்தத் தலைவர்களுக்கு அவமரியாதை செய்வதாக புகார் எழக்கூடும். மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களுக்கு மட்டுமே சிலைகள் நிறுவப்படுகின்றன. இனி புதிதாக சிலைகள் நிறுவும்போது அவற்றை நெடுஞ்சாலைகளிலோ பொது இடங்களிலோ நிறுவ அனுமதிக்கக் கூடாது. ஒருவருக்கு சிலை வைப்பதால்தான் அவர் சிறப்பு அடைகிறார் என்ற மனநிலையும் மாற வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 அடையாளம்
 நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட வேண்டும். தேசத்திற்காகவே வாழ்ந்த தலைவர்களை குறிப்பிட்ட ஜாதியின் தலைவர்கள் என்று முத்திரை குத்துவது வேதனைக்குரியது.சிறுவர்கள் பூங்கா போல சிலைகள் பூங்கா ஒன்றை அமைத்து, அங்கு தலைவர்களின் சிலைகளை வைக்க வேண்டும். தலைவர்களின் சிலைகள் தியாகத்தின் அடையாளங்களாகும். அவை வன்முறைக்கு வித்திடும் இடமாக மாறிவிடக்கூடாது.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 அபாயம்
 சாலைகளை ஆக்கிரமித்து தலைவர்களின் சிலைகளை நிறுவுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலை விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நாள்களில் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சிலை சேதப்படுத்தப்பட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகின்றது. இதனால் பாதிக்கப்படுவதும் பொதுமக்களே. எனவே பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட வேண்டும்.
 செய்யது முகம்மது, மேலப்பாளையம்.
 வாடிக்கை
 தலைவர்களுக்கு சிலைகள் நிறுவுவது குறித்து தெளிவான விதிமுறை எதுவும் இல்லை. இதனால் ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் சிலைகளை நிறுவுகிறார்கள். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள். இதனால்தான் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இடங்களில் சிலைகள் வைக்கப்படுகின்றன. தேர்தல் முடிந்து ஆட்சி மாறும்போது தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. தலைவர்களின் சிலைகளை அவர்கள் சார்ந்த கட்சி அலுவலகங்களில் வைப்பதே சரி. பொது இடங்களில் கூடாது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 இடையூறு
 பொது இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் பெரும் இடையூறாக உள்ளன. தங்கள் தலைவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செலுத்தும் கட்சிகள் அவர்கள் சிலைகளைத் தங்களது கட்சி அலுவலகங்களில் வைத்துக் கொள்ளலாமே. அப்படி இல்லையென்றால் தலைவர்களின் சிலைகளை ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் வைத்துப் பராமரிக்கலாம். பொது இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் சிலைகள் வேண்டாம்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 சிறப்பு
 பொது இடங்களில், நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்கிற கருத்து மிக மிகச் சரியே. அங்கெல்லாம் சிலை நிறுவப்பட்டுள்ள தலைவர்களுக்கு பிறந்தநாள், நினைவுநாள் போன்றவை வரும்போது, அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதாக அரசியல் கட்சியினர் வரும் நேரம் அந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எந்த ஒரு தலைவரின் சிலையும் அவர் சார்ந்த கட்சியின் அலுவலக வளாகத்தில் அமைக்கப்படுவதே சிறப்பு. பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவதே சரி.
 உஷா முத்துராமன், மதுரை.
 வரலாற்று ஆவணம்
 தமிழகத்தில் சிற்றூர் முதல் பெருநகரம் வரை ஆக்கிரமிப்பால் நிரம்பி உள்ளது. இவற்றின் மீதெல்லாம் நெடுஞ்சாலைத்துறை கவனம் செலுத்தினால் போதும். நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் சிலைகள் என்பவை ஒரு வரலாற்றுக் குறியீடு. வரும் தலைமுறையினர் அந்தத் தலைவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொள்ள வைக்கக்கூடிய ஒரு வரலாற்று ஆவணம். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஒரு சில சிலைகளை மாற்று இடங்களில் வைக்கச் சொல்லி ஆலோசனை கூறலாமே தவிர, தலைவர்களுக்கு சிலைகளே வேண்டாம் என்பதை ஏற்க முடியாது.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 கடமை
 பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட கூடாது. அவை பொதுமக்களுக்கும், வருங்காலத் தலைமுறையினருக்கும் அந்தத் தலைவர்களின் சாதனைகளை நினைவூட்டுபவை. அந்தத் தலைவர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் அவை உதவும். நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் சிலைகள் வெறும் சிலைகள் அல்ல. அவை வரலாற்றுச் சின்னங்களாகும். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
 இ. மோகன்ராம், சென்னை.
 ஏற்புடையதல்ல
 பொது இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதல்ல. பல ஆண்டுகளாக இருக்கும் சிலைகளை தற்போது அகற்றுவது ஜாதி, மதப் பூசல்களுக்கே வழிவகுக்கும். குறிப்பிட்ட சில பிரிவினரிடையே மோதல்கள் நிகழும். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்நாள் முழுதும் பாடுபட்ட தலைவர்களுக்கு ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது கூடாது. இனி புதிதாக சிலை நிறுவுவதற்கு அரசே தடை விதிக்கலாம். இருப்பவற்றை அகற்றுவது கூடாது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 மரியாதை
 நாட்டு மக்களுக்கு தொண்டு செய்த தலைவர்களுக்கு சிலைகள் வைப்பதை விட, அவர்களின் கொள்கைகளைக் கடைப்பிடித்து நடப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். அவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை நாமும் தொடர்ந்து செய்தாலே போதும். மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைத்து, அந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள்களில் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது அவர்களின் வழியை பின்பற்றுவதாகாது. ஆதலால் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவதே நல்லது.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 கண்கூடு
 தலைவர்களின் சிலைகள் கட்சி அடிப்படையில் பார்க்கப்படுவதால் கலவரங்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது. பல இடங்களில் நிறுவப்பட்டுள்ள சிலைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதும் கண்கூடு. சரியான பரமாரிப்பின்மை, சேதப்படுத்துதல், அவமரியாதை செய்தல் போன்ற செயல்களால் அந்தத் தலைவர்களின் புகழுக்கு இழுக்கு ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்ப்பதற்காகவாவது பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டியது கட்டாயம்.
 கே. ராமநாதன், மதுரை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT