விவாதமேடை

"தனியார் பள்ளிகளுக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

13th Oct 2021 02:41 AM

ADVERTISEMENT

கூடாது
 தனியார் பள்ளிகளுக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படக் கூடாது. அவ்வப்போது ஆய்வு செய்து அரசின் விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணித்து அதற்கேற்ப இடைக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டு வரும் தற்போதைய நடைமுறையே சரியானது. நிரந்தர அங்கீகாரம் வழங்கத் தேவையில்லை.
 மா. பழனி, தருமபுரி.
 கண்துடைப்பு
 சில பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு என்றே கண்துடைப்பாக சில வசதிகளை நிறைவேற்றி விட்டதாக போக்கு காட்டிவிட்டு அங்கீகாரம் பெற்ற பிறகு அந்த வசதிகளைத் தொடர்வதில்லை. இதுபோன்ற பள்ளிகளின் செயலைக் கட்டுப்படுத்தவே ஆண்டுதோறும் அங்கீகாரம் என்ற முறை நிலவுகிறது. தனியார் பள்ளிகளை கண்காணிக்க அங்கீகாரம் மட்டுமே தீர்வு என்று அரசு கருதாமல் திடீர் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 பயன்தரும்
 பெரும்பாலான தனியார் பள்ளிகள் லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளை என்ற பெயரில் அனுமதி பெற்று குடும்ப உறுப்பினர்களை அறக்கட்டளை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்றன. அரசு வகுக்கும் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதற்கும், கட்டணக் கொள்ளையை ஓரளவுக்காவது தடுப்பதற்கும் இந்த இடைக்கால அங்கீகாரம் எனும் நடைமுறை பயன்தரும்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 அரசின் சலுகைகள்
 பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும்போது அப்பள்ளிக்கு இடைக்கால அங்கீகாரம் உள்ளது என்று தெரிந்தால்தான் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்க மாட்டார்கள். அரசின் சலுகைகளை அனுபவிக்கும் மக்கள், தங்கள் பிள்ளைகளையும் அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்று எண்ண வேண்டும் என்றால் தனியார் பள்ளிகளுக்கு இடைக்கால அங்கீகாரம் கொடுக்கப்படுவதே சிறந்தது.
 உஷா முத்துராமன், மதுரை.
 அளவுகோல்
 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டால், அவை கட்டமைப்பு வசதிகளை செய்யாமல் இருக்க வாய்ப்பு உண்டு. முழு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அரசு நிரந்தர அங்கீகாரம் கொடுப்பதில் தவறு இல்லை. இடைக்கால அங்கீகாரமா, நிரந்தர அங்கீகாரமா என்பது அந்தந்தப் பள்ளிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை அளவுகோலாகக் கொண்டு முடிவு செய்வதே சிறந்தது.
 ப. நரசிம்மன், தருமபுரி.
 நிபந்தனைகள்
 தனியார் பள்ளிகள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துதல், வரவு - செலவு தணிக்கை அறிக்கையை ஆண்டு தோறும் அரசுக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நிரந்தர அங்கீகாரம் வழங்கி விட்டால் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை தனியார் பள்ளிகள் செயல்படுத்துவதை அரசால் கண்காணிக்க இயலாது. தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்.
 ஆர்.எஸ். மனோகரன், முடிச்சூர்.
 தவிர்க்க முடியாதது
 தனியார் பள்ளிகள் நிரந்தர அங்கீகாரம் கோருவதில் தவறில்லை. அப்படி நிரந்தர அங்கீகாரம் வழங்குமுன் தனியார் பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலுக்கான அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை நேர்மையாக ஆய்வு செய்து, அவை சரியாக இருந்தால் மட்டுமே நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் அங்கீகாரம் என்கிற நடைமுறையில் கையூட்டு நிலவுவது தவிர்க்க முடியாதது.
 கலைப்பித்தன், சென்னை.
 வரைமுறை தேவை
 தனியார் பள்ளிகளுக்கு நிரந்த அங்கீகாரம் வழங்கப்பட்டால் பள்ளிகளின் கட்டமைப்புகளை சீர்படுத்துவதில் பள்ளி உரிமையாளர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள். கல்விக் கட்டணம். ஆய்வுக்கூட கட்டணம் இவற்றை வரைமுறை இல்லாமல் பன்மடங்கு உயர்த்தி விடுவார்கள். கல்விக் கட்டண விஷயத்தில் ஒரு வரைமுறை இருக்க வேண்டுமானால் தனியார் பள்ளிகளுக்கு இடைக்கால அங்கீகாரம் என்கிற நடைமுறையே தொடர வேண்டும்.
 ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.
 நல்லது
 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதே நல்லது. அரசின் கல்வித்துறை அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தரமான அங்கீகாரம் வழங்கலாம். அப்படி செயல்படாத பள்ளிகள் இடைக்கால அங்கீகாரத்துடன் தொடரலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் அப்பள்ளிகளும் தங்கள் தரத்தை மேம்படுத்தி நிரந்தர அங்கீகாரம் பெறலாம்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 நியாயமன்று
 தனியார் பள்ளிகள் தொடர்ந்து இயங்க ஒவ்வோர் ஆண்டும் அரசிடம் அங்கீகாரம் பெற அலைக்கழிக்கப்படுவது நியாயமன்று. தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தில் இடைக்கால அங்கீகாரம் என்ற அம்சம் இல்லாத நிலையில், அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதே சரியான நடைமுறையாக அமையும்.
 கே. ராமநாதன், மதுரை.
 கட்டுப்பாடுகள்
 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசு, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, இடைக்கால அங்கீகாரம் வழங்குவதற்கும் சில புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் புற்றீசல் போல தனியார் பள்ளிகள் பெருகுவதைத் தடுக்க முடியும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கண்காணிப்பு
 தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஏதாவது விதிகளை பின்பற்றி நடக்கிறார்கள் என்றால் அது அரசாங்கத்தின் கண்காணிப்பினால் மட்டுமே நடக்கும். இதில், நிரந்தர அனுமதி என்பது அவர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கிவிடும். பல்வேறு முறைகேடுகள் அரங்கேறும். நோய்த்தொற்றுக்குப் பிந்தைய நிலையில் அரசின் கண்காணிப்பு அவசியம் இருப்பதால் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் தேவையற்றது.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 ஆய்வு
 தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள், அங்கு பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு, கழிவறை பராமரிப்பு, சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றை அரசு அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்த பின்னரே அப்பள்ளிகளுக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையே தொடரவேண்டும். அப்போதுதான் ஆண்டுக்கொரு முறை அங்கீகாரம் வழங்கும்போது அதிகாரிகள் ஆய்வு செய்யும் நடைமுறை தொடரும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 மாற்றக்கூடாது
 தனியார் பள்ளிகளுக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்க, அங்கு வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்றவை தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றனவா, கட்டடங்கள் உறுதியாக உள்ளனவா போன்றவற்றை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். எல்லாம் சரியாக இருந்தால்தான் இடைக்கால அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த முறை மாற்றப்பட்டால் பள்ளிகளை ஆய்வு செய்வதும் நின்று விடும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 கண்காணிப்பு இல்லை
 தனியார் பள்ளிகள் எல்லா விதிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடித்து அதன்பின் அங்கீகாரம் பெறுவதில்லை. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திவிடுவதாக உறுதியளித்து இடைக்கால அங்கீகாரம் பெற்று விடுகின்றன. அரசு தரப்பில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதில்லை. நிரந்தர அங்கீகாரம் வழங்குவதுதான் இதற்கான நல்ல தீர்வு.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 அடையாளம்
 இடைக்கால அங்கீகாரம் வழங்கும் முறை இருந்தால்தான் தனியார் பள்ளிகள் கட்டுப்பாட்டுடன் இயங்கும். அரசின் அங்கீகாரம் என்பது மாணவர்கள் நலனில் தனியார் பள்ளிகள் எவ்வளவு தூரம் அக்கறை எடுத்துக் கொள்கின்றன என்பதற்கான அடையாளம் ஆகும். இது இடைக்கால அங்கீகாரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகள் சர்வாதிகாரமாக இயங்க முடியாத நிலை இருக்கும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT