விவாதமேடை

"அரசு அலுவலகங்களில் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை என்கிற மத்திய அரசின் திட்டம் ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

6th Oct 2021 04:28 AM

ADVERTISEMENT

 நிர்பந்தம்
 கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரும்பாலான அரசு ஊழியர்கள் முழுமையாக பணியாற்றவில்லை. நோய்த்தொற்று குறைந்து வரும் இவ்வேளையில், பணிசெய்யாத நாள்களுக்கும் சேர்த்துப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஊழியர்களுக்கு உள்ளது. மேலும், சாம்மானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரம் சீர்குலைந்திருக்கும் நிலையில் அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் மூன்று நாட்கள் விடுமுறை என்பது அரசு நிர்வாகத்தில் கூடுதல் தொய்வையே ஏற்படுத்தும்.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 இன்னல்கள்
 தற்போது உள்ள இரண்டு நாள் விடுமுறையே அரசு பொது விடுமுறையோடு சேர்ந்து பல நாள்கள் தொடர் விடுமுறையாக மாறி விடுவதால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. அரசு அலுவலகங்களோடு பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் நாள்களைக் குறைப்பதால் அரசின் செயல்பாடுகள் மக்களை சென்றடைய தாமதம் ஏற்படும். அரசு அலுவலகங்கள் பொதுமக்களுக்காகவே என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 பின்னடைவு
 வாரத்திற்கு நான்கு நாள் வேலை, மூன்று நாள் விடுமுறை என்பது நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். அரசுத் துறைகளில் தனியார் துறை போன்று அர்ப்பணிப்பு உணர்வோடும் வேகமாகவும் பணிகள் நடைபெறாது. இந்த நிலையில் மூன்று நாள் விடுமுறை என்பது அரசு ஊழியர்களை சோம்பேறியாக்கி விடும். வளர்ச்சியை நோக்கி நாம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் மூன்று நாள் விடுமுறை கூடாது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 சலிப்பு
 இத்திட்டம் ஏற்புடையது இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் இருந்து வேலை செய்து பழகிவிட்டதால் பணியாளர்களுக்கு விடுமுறை என்றாலே வெறுப்பு வந்து விட்டது. இந்த நிலையில் வாரத்தில் நான்கு நாள்கள்தான் வேலை, மூன்று நாள்கள் விடுமுறை என்பது ஒருவித சலிப்பினை உண்டாக்கும். ஊழியர்கள், தங்களுக்குத் தேவைப்படும்போது எடுத்து கொள்ள எத்தனையோ வகையான விடுப்புகள் இருக்கின்றன.
 உஷா முத்துராமன், மதுரை.
 பாதிப்பு
 இத்திட்டம் தவறானது. தற்போது இருக்கிற வார விடுமுறைகள், பண்டிகை விடுமுறைகளை நீக்கிப் பார்த்தால் ஆண்டுக்கு பாதி நாள்கள் கூட வேலை நாள்கள் இருக்காது. இது தவிர, அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு என ஏராளமான விடுப்புகள் உள்ளன. இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்தால் மத்திய அரசு தனக்கே பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் என்பதே உண்மை.
 உ. இராஜமாணிக்கம், கடலூர்.
 ஏற்புடையதல்ல
 இத்திட்டம் நிச்சயமாக ஏற்புடையதல்ல. மக்கள்தொகை மிகுந்த நமது நாட்டில் மக்கள்பணி செய்ய அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களே உள்ளனர். இந்த நிலையில் அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாள்கள் விடுமுறை என்றால் அதனால் பாதிக்கப்படுவோர் பொதுமக்களே. மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று காத்திருப்பது அதிகரித்துவிடும். இது மக்களை பாதிக்கும் திட்டம். இதனைக் கைவிடுவதே நல்லது.
 மு. மாரியப்பன், திருச்சி.
 நிதர்சனம்
 அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை, வாரத்தில் ஐந்து நாள் வேலை இரண்டு நாள் விடுமுறை என்பதுதான் சரியானதாக இருக்கும். மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தினால், அன்றாட அலுவல்கள் பாதிக்கும் என்பதோடு, பொதுமக்களும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதே நிதர்சனம். மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து இப்போதுள்ள நடைமுûறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.
 ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.
 காத்திருப்பு
 இத்திட்டப்படி நான்கு நாள்தான் வேலைநாள் என்றானால், மக்கள் அரசு அலுவலகத்தில் நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டிய நிலைதான் உருவாகும். மேலும் வருவாய்த்துறை மூலமாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நலத்திட்ட உதவி கள் தற்போது காலதாமதமாகக் கிடைத்துவரும் நிலையில் இத்திட்டம் மேலும் அதிக காலதாமதத்தை ஏற்படுத்தும். தாமதம் ஏற்படும்போது லஞ்சமும் ஊழலும் உருவாவதைத் தவிர்க்க முடியாது.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 மறுபரிசீலனை
 ஒரு வருடத்தில் உள்ள 52 வாரத்தில், ஒரு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை நாள் என்றால் ஒரு ஆண்டில் மொத்தம் உள்ள 365 நாளில் 208 நாள் மட்டுமே வேலை நாளாக இருக்கும். அதிலும் சுமார் 30 நாட்கள் விடுமுறை நாளாக இருக்கும். ஆக ஒரு வருடத்தில் 175 நாள் மட்டுமே வேலை நாளாக அமையும். இது ஒரு வருடத்தில் உள்ள மொத்த நாள்களில் பாதி அளவைவிடக் குறைவாகும். எனவே மத்திய அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 மு. நடராஜன், திருப்பூர்.
 பலன் இல்லை
 சில நாடுகளில் குறிப்பிட்ட சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன. மக்கள் இணையம் மூலமே அனைத்து சேவைகளையும் பெறுகின்றனர். ஆனால் நம் நாட்டில் எல்லா மக்களையும் இன்னும் தொழில்நுட்பம் சென்றடையவில்லை. எனவே அரசு அலுவலகத்தையே நாட வேண்டிய நிலை உள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும் இணையம் மூலம் கிடைக்கும்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 கண்கூடு
 அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை செய்யும்போதே பணிகள் மந்தகதியிலும், ஆமைவேகத்திலும் நடைபெற்று வருவது கண்கூடு. பணி நாள்களைக் குறைப்பதால் பணிகளை முடிப்பதில் மேலும் தாமதம் ஏற்படும். ஊழியர்களுக்கு தினசரி பணி நேரம் கூடுவதால் அவர்களுக்கு அது உடல் சோர்வையும், மனச்சோர்வையும் தரும். இதனால் அவர்களின் செயல்திறன் நிச்சயம் பாதிப்படையும்.
 கே. ராமநாதன், மதுரை.
 சரியல்ல
 தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் ஒருநாள்தான் விடுமுறை என்றிருக்க அரசு ஊழியர்களுக்கு இரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை மூன்று நாள்களாக மாற்ற நினைப்பது சரியல்ல. மத்திய அரசு அலுவலகத்தை சார்ந்து இயங்கும் தனியார் நிறுவனங்களின் வேலை தடைபட வாய்ப்பு உருவாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் வாரத்தில் இரண்டு நாள் விடுப்பு என்பதே தொடர வேண்டும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 விபரீத முடிவு
 அரசு அலுவலகங்களில் எவ்வளவு "வேகமாக' பணிகள் நடைபெறும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை என்பது நடைமுறைக்கு வந்தால், பணியாளர்களின் வேகம் மேலும் குறைத்து விடும். அவர்களுக்கு அது சோம்பேறித்தனத்தைத் தந்துவிடும். அந்த மூன்று நாட்களில் என்னென்ன வேலைகள் உள்ளன என்பதே அவர்களுக்கு மறந்துவிடும். அரசு இத்தகைய விபரீத முடிவை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதே நல்லது.
 சீனி. செந்தில்குமார், தேனி.
 பணி நேரம்
 ஊழியர்களின் பணி நேரத்தை உயர்த்தி பன்னிரண்டு மணி நேரமாக்கலாம். ஆனால், நம் நாட்டு இயற்கைச் சூழலாலும், இன்றுள்ள குடும்பஅமைப்பு முறையாலும் உடலும் உள்ளமும் அவ்வளவு நேரம் பணி செய்ய இடம் தராது. ஒரு நாளைக்கு ஐந்துமணி நேரம் வேலை என்றால் வாரத்தில் ஒருநாள் விடுமுறையும், எட்டு மணி நேர வேலை என்றால் இரண்டு நாள் விடுமுறையும் அளித்தால் போதுமானது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 பாதி நாள்கள்
 வளர்ந்த நாடுகளில் வேண்டுமானால் இந்தத் திட்டம் சாத்தியப்படலாம். வளர்ந்து வரும் நம் நாட்டுக்கு இந்தத் திட்டம் ஏற்புடையதல்ல. இப்போதே, மக்கள் தங்களுடைய சேவையைப் பெற அரசு அலுவலகங்களுக்குப் பலமுறை அலைய வேண்டி இருக்கிறது. வார விடுமுறை, பண்டிகைக் கால விடுமுறை இரண்டையும் சேர்த்தால் மாதத்தில் பாதி நாள்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்க கூடிய சூழல் ஏற்படும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 திண்டாட்டம்
 இந்தத் திட்டம் ஏற்புடையதல்ல. அரசு விடுமுறைகள், பண்டிகை விடுமுறைகள் சேர்ந்துகொண்டால் ஆண்டுக்கு பாதிநாள் விடுமுறைதான். இது ஊழியர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக இருக்கலாம், மக்களுக்கு திண்டாட்டம்தான். மனித வளம் நிறைந்த நம் நாட்டில், இது போன்ற திட்டங்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கவே செய்யும். நமது நாட்டுக்கு அவசியமில்லாத திட்டம் இது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT