விவாதமேடை

"பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு காண, பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெண்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யலாமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

பலனளிக்காது
 பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வு காண, பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெண்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்வது பலனளிக்காது. அது மட்டுமல்ல, இது நடைமுறை சாத்தியமற்றதும் ஆகும். மேலும் இத்தகைய நடவடிக்கைகள் பாலின வேறுபாட்டிற்கும் வழிவகுக்கும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மாணவ மாணவிகளிடம் அவ்வப்போது ஆசிரியர்களின் நடத்தை குறித்து பள்ளி நிர்வாகம் கருத்து கேட்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமே இத்தகு கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
 வ. ரகுநாத், மதுரை.
 கொடிய செயல்
 இந்த யோசனை சரியானதல்ல. ஏனெனில் பெண்கள் ஆண்கள் நிறைந்த சமுதாயத்தில்தான் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டி உள்ளது. பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் பெற்றோருக்கு சமமானவர்கள். ஆண்கள், பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமே தவிர அவர்களை ஒதுக்கி வைத்து தனியே வளர்ப்பது பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்க்காது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்குக் கோருவதன் மூலமே பாலியல் வன்முறை என்னும் கொடிய செயலை இல்லாமல் ஆக்க முடியும்.
 செ . ஜீவிதா, விரிஞ்சிபுரம்.
 பின்னடைவு
 பாலியல் வன்கொடுமை என்பது எங்கும் காணப்படும் சமுதாய சீர்கேடு. அது உளவியல் மற்றும் உணர்வு தொடர்பானது. மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுவார்கள். பெற்றோருக்கு அடுத்து மதிக்கப்படும் ஆசிரியர்களை பாலின அடிப்படையில் வேறுபடுத்துவது பிற்போக்கானது. ஒரு காலத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து கல்வி பயில்வதற்கு அஞ்சிய நிலை இருந்தது. அது இப்போது மாறிவிட்டது. பாலின சமத்துவத்தோடு கல்வி கற்கும் பக்குவத்தை நாம் அடைந்து விட்டோம். இப்போது ஆசிரியர்களிடம் பாலின வேறுபாட்டை முன்னெடுப்பது பின்னடைவையே ஏற்படுத்தும். இது கைவிட வேண்டிய யோசனை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 சாத்தியமல்ல
 இது நிரந்தரத் தீர்வாக அமையாது. ஆண்-பெண் சேர்ந்து பயில்கின்ற கல்விக்கூடங்களில் இருபாலருமே நட்புடன் பழகுவது கண்கூடு. அப்படியிருக்க சில ஆசிரியர்கள் முறைதவறி நடந்துகொள்ளக் காரணம் அவர்களுடைய தனிப்பட்ட மன உணர்ச்சிதானே தவிர வேறு அல்ல. இது போன்ற உணர்ச்சி தூண்டுதலுக்கு அடிமையாகிப் போன ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மனநல சிகிச்சை அளிப்பது அவசியம். எல்லா இடங்களிலும் பெண்களைப் பாதுகாக்க பெண்களையே நியமிப்பது சாத்தியமல்ல. சில ஆசிரியர்களின் வக்கிர எண்ணத்தை மாற்றுவதற்கு வழிகாண வேண்டும். அதுவே பாலியல் வன்கொடுமைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 பாதுகாப்பு
 இந்த யோசனை வரவேற்கத்தக்கது. பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெண்களே ஆசிரியர்களாக இருப்பதே, மாணவிகளுக்குப் பாதுகாப்பு. பாலியல் தொந்தரவுகள் குறித்த அச்சம் இல்லாமல் மாணவிகள் கல்வியில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். மாணவிகளின் பெற்றோர்களும் கவலையின்றி நிம்மதியாக இருக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு, பெண்கள் பள்ளிகளை நடத்தி வந்தது. தனியார் பள்ளிகள் உரு வான நிலையில்தான் பாலியல் வன்கொடுமைகள் மிகுதியாக ஏற்பட்டு வருகின்றன. எனவே பாலியல் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, பெண்களுக்கென தனியாக பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 தவறான யோசனை
 இது மிகவும் தவறான யோசனையாகும். ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக ஒட்டுமொத்த ஆண் இனத்தையே தவறாக சித்திரிப்பது சரியல்ல. பாலியல் வன்கொடுமைகளுக்கு தனி நபர்களின் வக்கிர சிந்தனையே காரணமாகும். இது தவிர, சமூக ரீதியான பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காட்சி ஊடகங்களும், இணையமும் காரணங்களாகும். ஆசிரியர்கள் தங்களுடைய கடமையை செய்வதில் உள்ள பிரச்னைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். வக்கிரபுத்தி ஆண்-பெண் இருபாலரிடமும் உண்டு. சில நிகழ்வுகளில் சூழ்நிலைகளும் காரணமாக அமைவது உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக சமுதாயத்தில் நிகழும் கொடுமைகள் முக்கியக் காரணம்.
 எஸ். காசி விஸ்வநாதன், திருநெல்வேலி.
 முடிவுக்கு வராது
 நல்ல ஆலோசனைதான். ஆனால் இதனால் மட்டுமே பாலியல் வன்கொடுமை முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ஏனெனில் தம் சொந்த ஆதாயம் கருதி சில கல்வி நிறுவனங்களில் பெண்களே வன்கொடுமைக்குத் துணைபோவதை ஊடகங்கள் வழியே அறியமுடிகிறது. தவிர, கல்வி நிறுவனங்களின் தாளாளர், அங்கு பணியாற்றும் அலுவலக ஊழியர் ஆகியோர் பெரும்பாலும் ஆண்கள்தாமே. அவர்களையெல்லாம் நீக்கிவிட்டு எல்லா இடங்களிலும் பெண்களை நியமிக்க முடியுமா? கல்வி பயிலும் மாணவிகளுக்கு, தாம் பாதிக்கப்பட்டால் புகார் அளிப்பதற்கான மன உறுதியை கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.
 வளவ. துரையன், கடலூர்.
 எச்சரிக்கை
 இது சரியான யோசனையில்லை. பெண்கள் மட்டுமே பயிலும் கல்வி நிறுவனத்தில் பயின்ற பெண்கள் படிப்பு முடித்து வெளியே வந்தபின், ஆண்களோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, கல்விக்கூடங்களில் பயிலும் மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்கள்தான் தேவை என்பதில்லை. பெண் குழந்தைகளின் பெற்றோர் அவர்களின் பாதுகாப்பு குறித்து சிறு வயதிலேயே அறிவுறுத்த வேண்டும். மாணவிகள் எச்சரிக்கையுடனும் துணிவுடனும் இருந்தாலே பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்த்து விடலாம். பெண்களுக்கு ஆசிரியர்களாக பெண்களே இருக்க வேண்டும் என்பது சரியுமல்ல, தேவையுமல்ல.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 கண்காணிப்பு
 பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெண்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிப்பது தீர்வாகாது. சமூகக் கட்டுப்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் மதித்து நடந்துகொள்ளும் மனோபாவம் அனைவரிடமும் இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே பயிலும் கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு மேம்படுத்தப்பட வேண்டும். வரைமுறைகளுக்கு உட்பட்டு நடத்தல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறையாகும். ஆண்-பெண் சமத்துவத்திற்கு கல்வி நிலையங்களே அடித்தளம் அமைக்க வேண்டும். இல்லையெனில் நாம் நமது நாகரிக சமூகத்தை இழந்து விடுவோம்.
 ஏ.பி. மதிவாணன், பல்லாவரம்.
 வழிகாட்டி
 இந்த யோசனை ஏற்கத்தக்கதுதான். நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள், தண்டனைகள் இருந்த போதிலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெண்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அவர்கள் மாணவிகளுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள்.
 மாணவிகள் தங்கள் ஆசிரியைகளை தாயைப்போல, சகோதரியைப்போல மனம்விட்டுப் பேசுவார்கள். பாலியல் வன்கொடுமை குறித்த அச்சமின்றி மாணவிகள் கல்வி
 பயிலலாம்.
 கே. ராமநாதன், மதுரை.
 நம்பிக்கை
 பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெண் ஆசிரியர்களை நியமிப்பது ஒரு தீர்வாகாது. பெண்களிலும் இதுபோன்ற குற்றம் புரிபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். கல்லூரி பேராசிரியரே இதுபோன்ற குற்றத்திற்கு உள்ளானதை மறக்க இயலாது. மேலும் பெண்களுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்குள்ள ஆசிரியர்களால் மட்டுமே பாதிப்பு ஏற்படுவதில்லை. வாகன ஓட்டுநர், கல்வி நிறுவன காவலர் என பாதிப்பை ஏற்படுத்தும் தரப்புகளின் எண்ணிக்கை அதிகம். பாதிப்பை தைரியமாகவும் உடனடியாகவும் வெளியில் சொல்ல பெண்களுக்கு விழிப்புணர்வையும், குற்றத்திற்கு விரைவாக தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தவேண்டும்.
 பா. அருள் ஜோதி, மன்னார்குடி.
 சகோதர உறவு
 ஆண்-பெண் என இருபாலரும் எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்து பயில்வதும், அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் இருபாலராக இருப்பதும்தான் நல்லது. இதனால் மட்டுமே மாணவர்களிடையே சகோதர உணர்வு உருவாகும். பாடத்தொடர்புடன் வாழ்வில் இருபாலரும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் போதித்து நல்ல குடிமக்க ளாக வழிகாட்டவும் முடியும். பெண்கள் மட்டுமே ஆசியர்களானால் தவறு நடக்காது என்பது சரியன்று. மாணவர்களிடையே சகோதர உறவையும், ஆசிரியர்-மாணவரிடையே புனிதமான உறவையும் பேணிக் காத்தால் மட்டுமே கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமைகள் நிகழாது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT