விவாதமேடை

"மருத்துவப் படிப்புக்கான "நீட்' தேர்வுக்கு நவோதயா பள்ளிகள் சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறப்படும் கருத்து சரியா?' என்ற கேள்விக்கு  வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

முக்கியம்
 மருத்துவப் படிப்புக்கான "நீட்' தேர்வுக்கு நவோதயா பள்ளிகள் சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறப்படும் கருத்து சரியல்ல. மாணவர்கள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எப்படிப் படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சிறப்பாகப் படிப்பவர்கள் "நீட்' உள்ளிட்ட எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள முடியும். மாநில அரசு உறுதியான கல்வியையும் திடமான தேர்வு முறையையும் கொண்டு வந்தால் மாணவர்கள் எந்த நுழைவுத் தேர்வையும் எளிதாக எதிர்கொள்வர்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 வாய்ப்பு இல்லை
 கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டு மக்கள் மனத்தில் இருமொழிக் கொள்கை ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது. ஆதலால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நவோதயா பள்ளிகளாகவும் இல்லை. அப்பள்ளிகளில் காணப்படும் ஏனைய சிறப்பம்சங்களை நமது பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். அதன் மூலம் நமது மாணவர்களுக்கு நீட் தேர்வை அச்சமின்றி சந்திக்கும் ஆற்றலை உருவாக்க முடியும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 அர்ப்பணிப்பு
 தகுதி என்பது ஒரே நாளில் வருவதில்லை. தொடர்ந்து செய்யப்படும் பயிற்சியில் வருவது. அந்தப் பயிற்சி ஆரம்பப்பள்ளி படிப்பிலிருந்தே வர வேண்டும். சிறந்த மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களை மட்டுமே சார்ந்தது அல்ல; பெற்றோரையும் சார்ந்தது. பல சாதனையாளர்கள் அரசுப் பள்ளியில் பயின்றவர்களே. எனவே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற, அரசுப் பள்ளிகள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 சரியான கருத்து
 நவோதயா பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி, நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் என்ற அடிப்படையில் இந்தக் கருத்து சரியானதே. இந்தியாவின் பல மாநிலங்களிலும் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வரும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்குவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய தரமான கல்வியை கிடைக்கவிடாமல் செய்யும் செயல் ஆகும்.
 பா. குமரய்யா, சென்னை.
 துரதிருஷ்டவசமானது
 எல்லா மாநிலங்களிலும் நீட் தேர்வு எந்த எதிர்ப்புமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் தேர்விற்கு, இந்த வகையான பள்ளிகள், இந்த மாதிரியான பாடத்திட்டம் என்பதை விட அனைத்து மாநிலங்களின் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைத்து மாநில மாணவர்களின் நலனை கவனத்தில் கொள்வதே மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 மாற்றம் தேவை
 நவோதயா பள்ளிகளின் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது என்பது உண்மையே. அதே தரத்திற்கு மாநில அரசின் பாடத்திட்டத்தையும் மாற்றுவதற்கு என்ன தடை? அப்படி மாற்றிவிட்டால், எந்தப் பள்ளியில் மாணவர்கள் படிக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. நவோதயாவின் பாடத்திட்டத்தை , நமது ஆசிரியர்கள் எந்த அளவிற்கு மாணவர்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதில்தான் மாணவர்களின் தேர்ச்சி அடங்கியுள்ளது. நவோதயா பள்ளிகளே தீர்வு என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தவறு.
 கே. ஸ்டாலின், மணலூர்பேட்டை.
 தீர்வு அல்ல
 வெவ்வேறு பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுவாக நீட் என்ற தேர்வு நடத்துவது ஏற்புடையதாக இல்லை. மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பு கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல் வழங்கப்பட்டால் அவரவர் படிக்கும் பள்ளிப்பாட திட்டங்கள் மூலம் பெறும் மதிப்பெண் அவர்களுக்கு கைகொடுக்கும். நவோதயா பள்ளிகளே தீர்வு அல்ல.
 மா. பழனி, தருமபுரி.
 சிறந்த தீர்வு
 மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நவோதயா பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் இந்தி மொழி ஆற்றலும் இயல்பாக வந்துவிடுகிறது. இதனால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை மிக சுலபமாக அவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள். நீட் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் நவோதயா பள்ளிகளில் படித்தால் அவர்களுக்கு தேர்வு எளிமையாகவும் சுலபமாகவும் அமையும். நவோதயா பள்ளிகள் ஒரு சிறந்த தீர்வு என்பது சரியே.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 தனிப்பயிற்சி தேவை
 தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் என்சிஆர்டி பாடத்திட்டங்களை வகுத்து அதனையே வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் அவையே இடம் பெற்றுள்ளன. மேலும், நீட் தேர்வுக்கென தனிப்பட்ட பயிற்சியும் அவசியமாகிறது. அதனை பள்ளிகளைவிட தனியார் பயிற்சி மையங்களே சிறப்பாகத் தருகின்றன. எனவே நவோதயா பள்ளிகள் நீட் தேர்வுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 கண்கூடு
 நவோதயா பள்ளிகளைப் பொறுத்தவரை குறைந்த கல்விக் கட்டணம், சி.பி.எஸ்.இ வடிவமைக்கும் பாடத் திட்டம், ஸ்மார்ட் வகுப்புக்கள், பிராந்திய மொழி முதல் மொழி ஆகிய பல சிறப்புகள் உள்ளன. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மற்ற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களைவிட, நவோதயா பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் ஆண்டுதோறும் "நீட்' தேர்வில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வருவது கண்கூடு . எனவே இப்பள்ளிகள் 'நீட்' தேர்வுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
 கே. ராமநாதன், மதுரை.
 பாடத்திட்டம்
 நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் மாநிலப் பாடத்திட்டத்தில் இந்தி இல்லாத தமிழ், ஆங்கில வழி அரசுப் பள்ளி மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு உரியவாறு பாடத்திட்டத்தில் மாற்றமும், மருத்துவம் படிக்க எண்ணும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குத் தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டாலே எல்லாப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 தொலைநோக்குப் பார்வை
 நவோதயா பள்ளிகளின் கல்வி முறை, தொலைநோக்குப் பார்வை உடைய கல்வி முறை. அவை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்றது. நீட் தேர்வு என்பது 90% மேல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடைபெறும் தேர்வு. மாநில அரசு நவோதயா போன்ற பள்ளிகளை உருவாக்கி அதை தேசிய தரத்திற்கு உயர்த்த வேண்டும். நீட் தேர்வின் வெளிப்படைத்தன்மைகளை மத்திய அரசு வலிமையாக்கவேண்டும்.
 சோ.பி. இளங்கோவன், தென்காசி.
 தரமான கல்வி
 இதுவரை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் நவோதயா பள்ளிகளில் பயின்றவர்களா? நவோதயா பள்ளிகளின் பாடத்திட்டம் சிறப்பாக இருக்கலாம். அதுபோன்ற பாடத்திட்டத்தை மாநில அரசு தமிழக பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தருவதுதான் முக்கியமே தவிர, குறிப்பிட்ட பள்ளிகளே சிறந்த பள்ளிகள் என்கிற எண்ணத்தை மாணவர்கள் மனத்தில் ஏற்படுத்துவது கூடாது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 நூற்றுக்கு நூறு
 "நீட்' தேர்வுக்கு நவோதயா பள்ளிகள் சிறந்த தீர்வாக இருக்கும் என்கிற கருத்து நூற்றுக்கு நூறு சரியே. காரணம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நவோதயா பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதி உள்ளது. பள்ளிக்கு சென்றுவர போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் இங்கு தங்கிப் படிக்கலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டம் இப்பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. இதனால், எந்தப் போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் அளவுக்கு மாணவர்கள் திறன் மிக்கவர்களாக உருவாவார்கள்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 கனவு நனவாகும்
 நவோதயா பள்ளிகள் நிச்சயமாக நீட் தேர்வுக்கான சிறந்த தீர்வாக இருக்கும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் பயனடைவர். மொழித் திணிப்பு என்று கூறி நவோதயா பள்ளிகளைத் தடுக்கும் அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளில் அதே மொழி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்பட்டால்தான் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும்.
 மகிழ்நன், கடலூர்.
 எளிதில் தேர்ச்சி
 நவோதயா பள்ளிகள் மட்டுமே நீட் தேர்வுக்குத் தீர்வாகாது. நவோதயா, சிபிஎஸ்இ, சைனிக் பள்ளிகளின் பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து, அதனை மாநிலங்களின் பாடத்திட்டத்தோடு இணைக்க வேண்டும். மேலும், பள்ளியிறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே பாடத்திட்டம் உருவானால், நீட் மட்டுமல்ல, எந்தப் போட்டித் தேர்விலும் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவர்.
 அ. அலெக்சாண்டர், வரதராசன்பேட்டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT