விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்கிற யோசனை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

19th May 2021 03:35 AM

ADVERTISEMENT

தடை தேவையில்லை
 மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற யோசனை சரியல்ல. தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒருவரின் ஜனநாயக உரிமையாகும். தேர்வு செய்யப்பட்டவுடன் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதே விதி. அரசு பணியாளர் ஒருவர், தான் வகிக்கும் பதவியை விட உயர் பதவிக்கு போட்டித் தேர்வு எழுதி செல்வது போலத்தான் இதுவும். எனவே, தடை தேவையில்லை.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 தடை தேவை
 ஒருவருக்கு ஒரு பதவி என்பது சட்டமாக்கப்பட வேண்டும். ஒரு பதவியில் இருக்கும் போதே மற்றொரு பதவிக்குப் போட்டியிடுவது சரியல்ல. ஏற்கெனவே மாநிலங்களவை அல்லது சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் இடையில் அப்பதவியிலிருந்து விலகினாலும் கூட அந்தப் பதவிக்காலம் முடியும் வரை வேறு பதவிகளுக்குப் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத்தைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும்.
 உதயம் ராம், சென்னை.
 சொந்த விருப்பம்
 ஒரு பதவியில் இருப்பவரை இன்னொரு பதவிக்கு போட்டியிட அனுமதிக்கு கூடாது. இதனால் மக்கள் பணமும் நேரமும் விரயமாகிறது. அப்படி மாநிலங்களவை உறுப்பினர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனாலோ, சட்டப்பேரவை உறுப்பினர் மாநிலங்களவை உறுப்பினர் ஆனாலோ அது அவரின் சொந்த விருப்பமாகவே அமைவதாக கருத வேண்டும். அதன்மூலம் ஆகும் செலவை அரசு அவரிடம் வசூல் பண்ணியே ஆக வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்பவர்கள் மட்டுமே இரண்டாவது பதவிக்குப் போட்டியிடலாம் என்கிற நிலை வரவேண்டும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 உறுதி செய்ய வேண்டும்
 மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஒருவரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில் தவறில்லை. மாநிலங்களவை உறுப்பினர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அரசியல் கட்சிகள் மாநிலங்களவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கையில் அவரது பணி மாநில அரசியலுக்கு தேவையில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதோ பதவி எப்படியோ பதவி என்ற மனோபாவத்திலிருந்து அரசியல்வாதிகள் மீண்டு வர வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 நம்பிக்கை
 இந்த யோசனை சரியானதுதான். அப்போதுதான் மாநிலங்கவை உறுப்பினர் தனது கடமையைத் தொய்வின்றி செய்வார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தகுதியானவரின் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படாது. ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து போக வாய்ப்பு உருவாகாது. தேவையற்ற வெற்றிடம் உருவாகி, அதனால் பொருளாதார விரயமோ ஒரு உறுப்பினரின் மாநிலங்களவை சேவையிழப்போ ஏற்படாது.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 கேலிக்கூத்து
 மாநிலங்களவை உறுப்பினராக ஐந்தாண்டுகள் கடமையாற்ற வேண்டியவரை, சட்டப்பேரவைக்குப் போட்டியிட அனுமதிப்பது தவறாகும். அதுபோல, சட்டப்பேரவை உறுப்பினர் மாநிலங்களவை உறுப்பினராகும் போது முதல் பதவியை ராஜினாமா செய்வதால் அந்தத் தொகுதியில் மறுதேரதல் நடத்துவது வீண்செலவு தானே! இப்படித் தான் ஒருவரே இரு தொகுதிகளில் போட்டியிடுகிற கேலிக்கூத்தும்! இது போன்ற தவறான நடைமுறைகளை உடனே ரத்து செய்து ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.
 அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
 வீண் செலவு
 இந்த யோசனை சரியானதே. மாநிலங்களவை உறுப்பினர்களாக இருப்பவர்கள் பதவியில் இருக்கும்போதே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தேவையற்றது. இதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, மறுபடியும் இடைத்தேர்தல் வைக்க வேண்டும். இதனால் அரசுக்கு வீண் செலவு. ஆகவே மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சட்டப்பேரவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மாநிலங்களவைத் தேர்தலிலும், போட்டியிட உடனே தடை விதிக்க வேண்டும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 ஒருமுறை மட்டும்
 ஏற்கனவே ஒரு பதவியில் இருக்கும் போதே, அடுத்த பதவிக்கு போட்டியிடுவதற்கே அனுமதிக்கக் கூடாது.அதற்கான சட்டத்தை முதலில் உருவாக்கவேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டு வந்துவிட்டால் அந்தப் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவியிலேயே இருக்க வேண்டும் என்பதையும் சட்டமாக்க வேண்டும். ஒரு பதவியில் இருந்து கொண்டே அடுத்த பதவிக்கு போட்டியிடுவதை அரசு தடைசெய்யவேண்டும். மேலும் எந்தவொரு பதவிக்கும் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஒருவர் போட்டியிட முடியும் என்ற சட்டத்தையும் இயற்ற வேண்டும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 மக்கள் வரிப்பணம்
 இக்கோரிக்கை சரியல்ல. சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் வேண்டுமானால் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிடத் தடை விதிக்கலாம். ஏனெனில் சட்டப்பேரவை உறுப்பினராவதற்கு மக்களால் தேர்ந்தெடுக் கப்படவேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு செலவு, மக்கள் வரிப்பணம் வீண், மறு தேர்தல் பிரசாரம், வாக்குப்பதிவு என்று பிரச்னைகள் உள்ளன. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் சட்டப்பேரவை உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்கள் வரிப்பணம் வீணாக வாய்ப்பில்லை. எனவே மாநிலங்களவை உறுப்பினர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை சரியல்ல.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 திரும்பப் பெற வேண்டும்
 எந்த அவையில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் மற்றொரு அவைக்கான தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். அது மட்டுமன்றி, பதவிக்காலம் முடியுமுன்னர், அவர்களாகவே ராஜிநாமா செய்யும் பட்சத்தில் அதுவரை அவர் வாங்கிய ஊதியம் உள்ளிட்ட பயணப்படிகள் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியம் போன்றவைகளும் வழங்கக் கூடாது. ராஜிநாமாவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப நடத்தப்படும் தேர்தல் செலவினங்களும் அவர்களிடமிருந்தே வசூல் செய்யப்பட வேண்டும். அதே போல ஒரு தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒருவர் போட்டியிடுவதையும் தடை செய்ய வேண்டும்.
 சி. இரத்தினசாமி, திருப்பூர்.
 ஜனநாயக முரண்
 ஏற்கெனவே ஒரு பதவியிலிருப்பவர் வேறொரு பதவிக்குப் போட்டியிடுவது என்பது ஜனநாயக முரண். அவர் தேர்தலில் நின்று வென்று விட்டால் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகும். அதற்குத் தேர்தல் நடத்த வேண்டும். வென்ற உறுப்பினர் அடிப்படையில் தேர்வு செய்யப்டுவதால் ஏற்கனவே இருக்கும் கட்சிக்கு வாய்ப்பு குறையலாம். அதனால் அந்த உறுப்பினரின் பதவிக்காலம் முடியும் முன்பே உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடலாம். சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும் இதே நிலைமைதான். தேவையற்ற இச்சூழலை உருவாக்குவதைவிட போட்டியிட தடை விதிப்பதே சரி.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்
 நடைமுறைச் சிக்கல்கள்
 மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற யோசனை சரியானதே. ஒருவரே இரண்டு விதமான பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ஏதாவது ஒரு பதவியை ராஜிநாமா செய்தாக வேண்டும் என்ற நிலையில் அதற்காக மக்களின் வரிப்பணம் வீணாக்க படுவதன் மூலம் நிறைய நடைமுறைச் சிக்கல்களும் உருவாகிவிடுகின்றன. ஏற்கெனவே ஒருவர் ஒரு பதவியில் இருக்கும்போது இன்னொரு பதவிக்கு போட்டியிடும் நடைமுறையை முற்றிலும் தடை செய்து அதற்கான சட்ட முன்வடிவுகளை கொண்டு வருவது நல்லது.
 மா. பழனி, தருமபுரி.
 தேர்தல் செலவு
 இந்த யோசனை சரியே. மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டால் தேர்தல் நடப்பதற்கு முன்பே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதனைப் போலவே ராஜினாமா செய்யும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை நடத்த ஆகும் செலவை ராஜிநாமா செய்பவரே ஏற்க வேண்டும். ஒருவர் ஒரு பதவியை ராஜினாமா செய்தவர் பின் அவர் எப்போதும் அப்பதவிக்கு போட்டியிட தடை விதிக்க வேண்டும். இப்படிச் செய்தால் தேவையின்றி ஒரு பதவியில் இருப்பவர் இன்னொரு பதவிக்கு போட்டியிட மாட்டார்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,
 வேம்பார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT