விவாதமேடை

"தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று கூறப்படும் யோசனை ஏற்கத்தக்கதா?'

5th May 2021 03:24 AM

ADVERTISEMENT


ஏற்கத்தக்கதல்ல

தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கூறப்படும் யோசனை ஏற்கத்தக்கதல்ல. 11 கோடி மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிர மாநிலமும், 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசமும் ஒரே முதலமைச்சரையும், ஒரே ஆளுநரையும் கொண்டிருக்கும்போது, எட்டு கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு மூன்று முதலமைச்சர்களும் மூன்று ஆளுநர்களும் தேவையா? இன்றைய காலகட்டத்திற்கு இது  தேவையற்ற சிந்தனையாகும். 

இந்திரா ஸ்ரீவத்ஸா, சென்னை.


பொருந்தாது

ADVERTISEMENT

தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிப்பதென்பது ஜாதிப் பிரிவினையை ஊக்குவிப்பதாகிவிடும். ஒருங்கிணைந்த தமிழகமாக இருப்பதைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். ஒரு சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கலாம். அந்த எடுத்துக்காட்டுகள நம் மாநிலத்திற்குப் பொருந்தாது. அரசியல் கட்சியினர் சிலர் மாநிலப் பிரிவினையை எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்கள் பிரிவினைக்கு இடமளித்துவிடக் கூடாது.                                                                                                                              
ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி. 


சம வளர்ச்சி

இந்த யோசனை ஏற்கத்தக்கதே. ஆனால், அது சாதி அடிப்படையில் அமைந்துவிடக்கூடாது. பூகோள அடிப்படையில் தமிழகம் மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால்தான், அனைவருக்கும் சமூக நீதி என்பது சாத்தியமாகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடப்பதற்குக் காரணம், தமிழகத்தின் நீண்ட நெடும்பரப்புதான். தமிழகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டால் அதிகாரம் பரவலாகும். 

ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.


விதிவிலக்குகள்

எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்த சாதியினர் மிகுதியாக உள்ளனரோ, அந்தந்தப் பகுதிகளில் அந்தந்த சாதியினர் அதிகாரம் செலுத்தவும் பிற சாதியினர் அவர்களுக்கு அடங்கி நடக்கவும் வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சாதிவெறி அதிகரிக்கவும், சாதிக் கலவரங்கள் உருவாகவும் இதுவே காரணமாகிவிடும். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதே தவறு என்று இப்போது உணர்கிறார்கள். விதிவிலக்குகளை விதியாக மாற்றுவது தவறு.

பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.


சுயநலக் கோரிக்கை

இது ஏற்கத்தக்கதல்ல. நாடு விடுதலை பெற்றபின் மக்கள் நலன் கருதி, மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது சில அரசியல் கட்சியினர் சாதியை முன்நிறுத்தி மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று கோருகின்றனர். இது சுயநலக் கோரிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைத்ததுபோல அரசு அலுவலகங்களை வேறு வேறு மாவட்டங்களில் அமைக்கலாம். அதற்காக மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க நினைப்பது தவறு.

அ. கண்ணன், திருவண்ணாமலை.


என்ன தவறு?

இந்த யோசனை வரவேற்கத்தக்கதே. தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரித்தால் அப்போது மூன்று மாநிலங்களின் வளர்ச்சியும் மிகப்பெரிய அளவில் இருக்கும். நிர்வாக வசதிக்காக ஒரு மாவட்டத்தைப் பிரித்து இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் உருவாக்குவதை போன்று, பெரிய மாநிலங்களை பிரித்து இரண்டு அல்லது மூன்று மாநிலங்களை உருவாக்குவதில் என்ன தவறு? அந்த மாநிலங்கள் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெறும்.  

மா. பழனி, தருமபுரி.   

 

மதிப்பற்ற நிலை

ஏற்கெனவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மதிப்பிழந்து விட்டன. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வேதாரண்யம் முகாமிட மூன்று மாதங்கள் ஆகும். மாவட்ட ஆட்சியர் வருகிறார் என்ற அச்சம் அதிகாரிகளிடமும் ஆர்வம் ஊர்மக்களிடமும் இருந்தன. இன்றோ அது நான்கு மாவட்டங்களாகப் பிரிந்துவிட்டது. குறுகிய பரப்பு என்பதால் அடிக்கடி ஆட்சியர் வருகை. அதனால் மதிப்பற்ற நிலை. மாநிலத்தை பிரிப்பதும் இது போன்றதுதான்.    

அ. சம்பத், சின்ன சேலம்.       


முரணானது

இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழும் மாநிலம் தமிழ்நாடு. மாநிலத்தை மூன்றாகப் பிரித்தால் இந்த சிறப்பு குலைந்துவிடும். ஒரே மொழி பேசும் மாநிலங்களைப் பிரிப்பது மொழிவாரி மாநில கொள்கைக்கு முரணானது. தமிழ்நாடு பெரிய மாநிலமாகத் திகழ்வதால் பொருளாதார  வளர்ச்சி அடிப்படையில் எந்தப் பகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டைப் பிரிப்பது கூடாது.    

க. ரவீந்திரன், ஈரோடு.  

 

அமைதிப்பூங்கா

மக்கள் ஒற்றுமையுடன் ஒரே மாநிலமாகத் திகழுவதைப் பிரிக்கும் கோரிக்கையை எதற்காகவும் ஏற்கக்கூடாது. ஒன்றுபட்ட தமிழகமாக்க போராடிய போராட்டங்கள், தலைவர்களின் தியாகங்கள் நினைவிற்கு வரவேண்டும். மூன்று மாநிலமாகப் பிரித்தால் நமக்குள் பிரிவினைவாதம் தலைதூக்கி ஒற்றுமைக்கு குந்தகம் நேரும். அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகம் போராட்டக் களமாகும். மாநில ஒற்றுமை கருதி பிரிக்கக்கூடாது. பிரிவினை எண்ணத்தைக் கைவிட வேண்டும்.  

ப. தாணப்பன், தச்சநல்லூர்.  

 

பயன் இல்லை

தற்போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வரை அரசின் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து இணைய வழியிலேயே பெற்றுவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. எனவே, மாநிலப் பிரிப்பால்  மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. ஒரு வேளை மூன்று மாநிலங்களாகப் பிரித்தால், அரசுக்குத்தான் நிர்வாக செலவுகள் மூன்று மடங்காகும். எனவே இந்த யோசனை ஏற்கத்தக்கதல்ல. 

மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.   


குற்றம் குறையும்

தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரித்தால்  மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு இன்னும் பலப்படும். இவ்வாறு பிரிக்கப்படுவதால்  அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறைகின்றன. இதனால் அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை விரைவாக சென்றடையும். குற்றங்களை எளிதில் குறைக்க முடியும். அரசின் சலுகைகள் மக்களை எளிதில் சென்றடைவதால் அனைத்து துறைகளிலும் வளம் உடையதாக மாற்ற இயலும்.    

                            
சு. தாமரைச்செல்வன், ஈரோடு.

 
நியாயமல்ல

தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மொழியை, கலாசாரத்தை  நிர்வாக வசதி என்கிற ஒரே காரணத்திற்காகக் கூறுபோடுவது நியாயமல்ல.  தமிழ்நாட்டில் தமிழ் பேசுவோர் மட்டுமல்லாது பிறமொழி பேசுவோரின் எண்ணிக்கையும் மிகுந்திருக்கும் சூழலில், மாநிலங்கள் பிரிப்பதினால் முதலில் நம் மொழி சிதைந்து போக வாய்ப்புள்ளது. அத்துடன், மக்களிடம் ஒற்றுமை சிதைந்து போகும். தமிழகத்தைப் பிரிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல.  

ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.  

 

விபரீத யோசனை

சமீப காலமாக நிர்வாகக் காரணங்களுக்காக பல மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. தமிழ்  மட்டுமே பேசப்படும் நம் மாநிலத்தில் நிர்வாகம் செய்வதிலும் தடை ஏதும் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்பது விபரீத யோசனை. அப்படிப் பிரிக்க நேர்ந்தால் சாதிய உணர்வுகளைத் தூண்டுவதாகவே அது அமையும். இயற்கைவளப் பயன்பாடு நதிநீர்ப் பங்கீடு ஆகியவற்றுள் நமக்குள்ளே பிரச்னைகள் ஏற்படுவது உறுதி. 

அ. கருப்பையா, பொன்னமராவதி.  


மொழியே அடிப்படை

தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்கும்போது நிர்வாகச் செலவு தேவையில்லாமல் அதிகரிக்கும். இதுவரை மாநிலங்களைப் பிரித்தது மொழியின் அடிப்படையில் மொழிவாரி மாநிலங்களாகத்தான். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்ததும், ஆந்திரத்திற்கு திருப்பதியை விட்டுக்கொடுத்ததும் மொழியின் அடிப்படையில்தான். தமிழ்நாடு தமிழ் பேசும் மாநிலம். அதை கூறு போடுவானேன்?   

எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

 

குழப்பங்கள்

மாநிலத்தை இப்போது பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தேவையற்ற சாதிச் சண்டைகள், மதக்கலவரங்கள் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். ஒன்றுபட்ட தமிழகம்தான் நாம் குரல் கொடுத்து, மத்திய அரசிடம் இருந்து உதவிகள் பெறுவதற்கு வசதியாக இருக்கும். மாநிலத்தைப் பிரிப்பதால் நிர்வாக செலவு உட்பட பல செலவுகள் அதிகமாக தவிர, மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் ஏற்படாது.  

ந. சண்முகம், திருவண்ணாமலை.

 

பாதிப்பு

தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கூறப்படும் யோசனை ஏற்கத்தக்கதல்ல. நிர்வாகக் காரணங்களைக் கொண்டும், குறிப்பிட்ட சாதி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்ற காரணத்தாலும் தமிழகத்தை ஒரு போதும் பிரிக்கக்கூடாது. தமிழின் தொன்மையும் மக்களின் வாழ்வியலும் மிகவும் பாதிக்கப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் விருப்பம் போல் மாநிலத்தைப் பிரிப்பது   நேர்மையற்ற செயலாகும்


ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT