விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "9,10,11 வகுப்பு மாணவர்கள் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது கல்வித்துறைக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 கேள்விக்குறி
 9,10,11 வகுப்பு மாணவர்கள் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது கல்வித்துறைக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். மாணவரின் கற்றல் திறனை அளவீடு செய்வது தேர்வு ஒன்றுதான். அதனை ரத்து செய்வது ஆசிரியர்கள், நன்கு பயிலும் மாணவர்கள் ஆகியோரின் கடின உழைப்பை கேள்விக்குறியாக்கி விடும். பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம், ஆனால், கல்வியறிவை வாங்க முடியாது. கல்வியறிவை தேர்வு என்ற கருவியில்லாமல் அளக்க முடியாது.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 ஏற்க முடியவில்லை
 9, 11வகுப்புகளுக்குக்கூட இந்த "அனைவருக்கும் தேர்ச்சி' முடிவு பரவாயில்லை. ஆனால், 10 வகுப்புக்கு "தேர்வின்றி தேர்ச்சி' என்பதை ஏற்க முடியவில்லை. ஒரு மாணவனின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமைவது 10-ஆம் வகுப்பு கல்வியே. இந்த முடிவுக்கு மாற்றாக, இந்த மூன்று வகுப்புகளுக்கும் இதுவரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து குறைந்தபட்ச பாடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தேர்வு வைத்திருக்கலாம்.
 கலைப்பித்தன், கடலூர்.
 அச்சம்தான் காரணம்
 அரசு இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதற்குக் காரணம் கரேனா தீநுண்மிப் பரவல் அச்சம்தான் காரணம். வீட்டிலிருந்து இணைய வழி கற்றலை பெரும்பாலான மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். சில கிராமப்புற மாணவர்களுக்கு இணைய வழி கற்பதில் பிரச்னை இருக்கலாம். தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது நெருக்கடி நிலை அறிவிப்பது போன்றதுதான் இது
 குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.
 தவறான நடைமுறை
 ஆண்டு முழுதும் பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் ஆண்டு முடிவில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதுதான் சரியான நடைமுறை. தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்பது தவறான நடைமுறை. முழு பாடத்திட்டமும் நடத்தி முடிக்கப்படாத நிலையில் நடத்திய வரையுள்ள பாடதிட்டத்திற்கேற்ப தேர்வு வைப்பதுதான் சரியாக இருக்கும். இந்த முடிவு கல்வித்துறைக்கு நிச்சயம் பின்னடைவே.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 வேறு வழியில்லை
 இந்த அறிவிப்பு கல்வித்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. பெருந்தொற்றுப் பரவல், இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் இவ்வாறு செய்வதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. தேர்வு நடைபெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அவர்களுக்குக் கற்றலில் தடை ஏதுமில்லை. அடுத்த ஆண்டு பாடத்தை அவர்கள் எளிதாகக் கற்பார்கள். எனவே, இதனால் பின்னடைவு இல்லை.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 ஏன் வலியுறுத்தவில்லை?
 கரோனா தீநுண்மிப் பரவல் காலத்தில் எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்புகளும் வசதிகளும் திட்டமிடுதல்களும் இருக்கும் போது தேர்வுகளையும் அது போன்று திட்டமிட்டு நடத்த முடியாதா? கட்டாயமாகத் தேர்வு வேண்டும் என்பதை மாணவர்களும் ,பெற்றோர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தியிருக்க வேண்டும். அவர்கள் அப்படி வலியுறுத்தத் தவறியதால் அரசும் பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறது.
 உதயம் ராம், சென்னை.
 தவிர்க்க இயலாதது
 எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது எதிர்பாராத முடிவுகளை எடுக்க நேர்வது தவிர்க்க இயலாதது. இதனால் கல்வித்துறைக்கு உடனடி பாதிப்பு என்று எதுவும் இல்லை. ஆனால், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித்தரம் தற்காலிகமாக பாதிப்படையும். அதனை ஈடுகட்ட அடுத்த கல்வியாண்டில் முன்னதாகவே பள்ளிகளைத் திறந்து விடுபட்ட பாடங்களை ஆசிரியர் நடத்தி முடிக்க வேண்டும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 குழப்பம்
 அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு கற்றலில் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். அதன் விளைவாக அடுத்த ஆண்டு தேர்வை எதிர்கொள்வதிலும் அவர்களுக்கு அச்சம் ஏற்படும். பள்ளி வேலை நாட்களை நீட்டித்து பாடங்களை முடித்து தேர்வு நடத்தியிருக்கலாம். வினாத்தாளை எளிமையாக்கி பெரும்பாலானோர் தேர்ச்சியடையும்படி செய்திருக்கலாம்.
 கோ. லோகநாதன், திருப்பத்தூர்.
 நிதர்சனம்
 பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகத்தான் ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கான பாடங்கள் நடத்தப்பட்டன. பல நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கான பாடத்திட்டமும் குறைக்கப்பட்டது. மாணவர்களும் பாடங்களைப் படித்து தேர்வெழுதத் தயாராகத்தான் இருந்தனர். அரசின் இந்த அறிவிப்பு நன்கு படிக்கும் மாணவர்களை சோர்வடையச் செய்துள்ளது என்பதே நிதர்சனம்.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 கடும் சவால்
 9,10,11-ஆம் வகுப்புத் தேர்வுகளே ஜே.இ.இ மற்றும் நீட் தேர்விற்கான அடிப்படைப் பாடத்திட்டங்களைக் கொண்டது. இந்த முடிவால், அத்தேர்வுகளுக்குத் தயாராவதில் சிரமமும் பாடத்திட்டங்கள் புரியாத நிலையும் மாணவர்களுக்கு ஏற்படும். ஏற்கெனவே கற்றல் - கற்பித்தலில் பின்தங்கி இருக்கும் நாம் இன்னும் பின்தங்க நேரிடும். இவர்களுக்கு அடுத்த ஆண்டு வரும் தேர்வு கடும் சவாலைத் தரும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 தேர்வு முக்கியம்
 கிராமப்புறப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவனால் ஒரு நாளிதழைக்கூட படிக்க முடியவில்லை. பத்தாம் வகுப்பு பொது தேர்வு என்றால் எல்லோரும் அதிக அக்கறையுடன் படிப்பார்கள். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் இணைய வழியில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு என்பது மிக மிக முக்கியமானது. மாணவர்களின் நலன்கருதி தேர்ச்சி மதிப்பெண்ணை அரசு குறைத்திருக்கலாம்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 புரியவில்லை
 பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும்போதே இதுபோன்ற அறிவிப்பு எதற்காக என்று புரியவில்லை. குறைந்தபட்சமாக அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் அடைவு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக சிறு தேர்வுகள் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செய்திருந்தால் அடுத்த வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்லும்போது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 மா. பழனி, தருமபுரி.
 தடுமாற்றம்
 இப்போது எட்டாவது வரை பயிலும் மாணவர்கள் கட்டாயம் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலை இருக்கிறது!. 9,10,11-ஆம் வகுப்புகளுக்கும் இந்த முறையையே நீட்டித்தால் 12-ஆம் வகுப்பிற்கு வரும் சராசரிக்கு மேற்பட்ட திறனுள்ள மாணவர்கள்கூட கற்றலில் தடுமாற நேரும். அவர்கள் அடுத்த ஆண்டு தேர்வினை எதிர்கொள்ளும் திறனின்றி திண்டாட வேண்டியதாகும். மேற்கல்விக்கு போக இயலாமல் படிப்பை விட்டு விலகி விடுவார்கள்.
 வெ. இராஜகோபாலன், ஸ்ரீரங்கம்.
 இரண்டாவது அலை
 கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவின் பல மாநிலங்களிலும் வரத்தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களிடம் என்னதான் அறிவுரை கூறினாலும் சமூக இடைவெளியை அவர்கள் கடைப்பிடிப்பது சிரமம்தான். மேலும், ஒரு பள்ளியில் ஒரு மாணவனுக்கு தீநுண்மி பாதிப்பு இருந்தாலும் சுலபமாக மற்றவர்களுக்கும் பரவிவிடும். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். மாணவர்களின் உடல் நலம் முக்கியம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 நல்ல எண்ணம்
 மக்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. மாணவர்களின் உடல்நலமும், எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஏற்கத்தக்கதே. இது தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட முடிவுதான். இந்த முடிவு கல்வித்துறைக்குப் பின்னடைவு ஆகாது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 வேறுபாடு
 இணைய வழி வகுப்புகள் பாடத்திட்டங்களை போதித்து இருக்கின்றன. பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் கற்ற அளவிற்கு தேர்வுகளை நடத்தி அதனடிப்படையில் தேர்ச்சி அறிவித்திருக்கலாம். தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது என்பது நன்கு படிக்கும் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் வேறுபாடும் இல்லாத சூழலை உருவாக்கும்.
 சீனி. செந்தில்குமார், தேனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT