விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறியிருப்பது சாத்தியமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 கற்பது எளிது
 தாய்மொழியை அடிப்படை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறியிருப்பது சாத்தியமே. அடிப்படைக் கல்வியை தாய்மொழி வாயிலாகக் கற்பது எளிது. ஆங்கில வழியில் கற்கும் மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்ளாமல், மனப்பாடம் செய்தே தேர்வு எழுதுகின்றனர். கேள்விகளை மாற்றினால் குழம்பிவிடுவார்கள். தாய்மொழியில் கற்கும்போது பாடங்களை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
 ப. இராமகிருஷ்ணன், சிந்துபூந்துறை.
 அடித்தளம்
 ஒரு கட்டத்திற்கு அடித்தளம் முக்கியம் என்பது போல மாணவர்களுக்கு ஆரம்பக்கல்வி மிகவும் முக்கியம். தாய்மொழியில் கற்கும் பாடங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் இருக்கும். அடிப்படை பயிற்று மொழியாக தாய்மொழியே இருக்க வேண்டும். அதே நேரத்தில், மேற்படிப்பில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்புக்காக பிற மொழியில் கற்பது அவசியமானால் அதை கற்பதில் தவறில்லை.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 தவறான எண்ணம்
 தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்பதை பெற்றோரும் ஆசிரியரும் உணர்ந்து அதனை வற்புறுத்த வேண்டும். தாய்மொழிக்கு முன்னுரிமை தரும் ஜப்பான், ரஷியா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் மேல்நிலையில் இருப்பதை நாம் உணர வேண்டும். ஆங்கிலமே சிறந்த மொழி என்ற தவறான எண்ணத்தை தமிழர்கள் கைவிட வேண்டும். ஆங்கிலத்தில் கற்றோர் அறிவாளி என்ற கருத்து பிற்போக்கானது.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 எதிர்காலம் சிறக்கும்
 அடிப்படை பயிற்றுமொழி தாய்மொழியாக இருந்தால்தான் மாணவர்களால் கற்பதை புரிந்துகொள்ள இயலும். பிற மொழிகளில் படிப்பவர்களும் தங்கள் தாய்மொழியில் அதன் பொருளைப் புரிந்து கொண்டுதான் தேர்வு எழுதுகிறார்கள். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைக் கற்பது அவர்களின் எதிர்காலம் சிறக்க வாய்ப்பாக அமையும்.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 புதிய சிந்தனை
 மாணவர்கள் தாய்மொழியை முதன்மை மொழியாக கொண்டு கற்கும்போது அவர்களின் கற்றல் எளிமையாவதோடு, அவர்களுக்குப் புதிய புதிய சிந்தனைகளும் உருவாகும். உலக நாடுகள் பலவும் தாய்மொழி வழியிலான கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் புதிய புதிய ஆய்வுகளும் சிந்தனைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக்க முன்வருவதே சிறந்தது.
 மா. பழனி தருமபுரி.
 முயற்சியும் ஒத்துழைப்பும்
 தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக்குவதற்கான முழு முயற்சியையும் ஒத்துழைப்பையும் அரசும் சமுதாயமும் மாணவரும் பெற்றோரும் அளிக்க வேண்டும். தாய்மொழியை பயிற்றுமொழியாக மேல்நிலைக் கல்வி வரையிலாவது கட்டாயமாக ஆக்கவேண்டும். மாணவர்களுக்கு தாய்மொழியில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு ஒரேவழி தாய்மொழி அடிப்படை பயிற்றுமொழியாவதே.
 எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்
 மறுக்க முடியாது
 ஒருவன் எந்த மொழியில் எதைத் தெரிந்து கொண்டாலும் அவன் அதைத் தனது தாய்மொழியில் புரிந்து கொண்டால்தான் தெளிவடைய முடியும். இன்று நம்மால் போற்றப்படும் அறிஞர்கள், மருத்துவர்கள், அறிவியல் சாதனையாளர்கள் பலரும் அடிப்படைக் கல்வியை தங்கள் தாய்மொழியில் பயின்றவர்கள்தான் என்பதை மறுக்க முடியாது. குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையாவது தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்.
 உதயம் ராம், சென்னை.
 இணைமொழி தேவை
 தாய்மொழியானது தொடக்கக் கல்வியில் அடிப்படை பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவது சரியானதுதான். ஆனால், மேல் வகுப்பு பயின்று உயர்கல்விக்கு வரும்போது தாய்மொழியோடு ஆங்கிலமும் இணைமொழியாக இருக்க வேண்டும். படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்றச் செல்லும்போது அவர்களுக்கு ஆங்கில அறிவுதான் கைகொடுக்கும். அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
 கு. அருணாசலம், தென்காசி.
 சிந்திக்கும் திறன்
 மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் தொடக்க வகுப்பு வரை மாநில மொழியே முதல் பாடமாக இருக்கவேண்டும். மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியை மாநில மொழி மற்றும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கலாம். மேலும், தங்களுக்கு விருப்பப்பட்ட மொழியை மாணவர்கள் தேர்வு செய்யலாம். சிந்திக்கும் திறன் தாய்மொழியிலேதான் தோன்றும். சுய சிந்தனை என்பது தாய்மொழியில்தான் சாத்தியம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 நல்ல கருத்து
 அவரவர் தாய்மொழியே அடிப்படைப் பயிற்று மொழியாக இருப்பின் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் போதிய திறன் பெறவும், பிறமொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளவும் இயலும். இதுபோன்ற நல்ல கருத்துகளை அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பலரும் குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. இவர்கள் பதவியில் இருந்த காலத்தில் இதைச் செய்திருக்கலாமே. இருப்பினும் இக்கருத்து நடைமுறைக்கு வந்தால் எல்லோர்க்கும் நல்லதே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கவனிக்கத்தக்கது
 கல்வியறிவினை மேன்மேலும் பெற்றிடவும் அறிவையும் மனத்தையும் பக்குவப்படுத்தவும் அடிப்படைக் கல்வியாக தாய்மொழிக் கல்வியே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் கல்வி நிறுவனங்களில் தாய்மொழியே பிரதான மொழியாக இருப்பது கவனிக்கத்தக்கது. தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக்குவது சாத்தியமானது மட்டுமல்ல, மிகவும் அவசியமானதும்கூட.
 கே. ராமநாதன், மதுரை.
 வரவேற்கத்தக்கது
 இந்தக் கருத்து சாத்தியமானது; வரவேற்கத்தக்கது. குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக ஆக்க வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் சிறப்பு. தாய்மொழிக் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையும் செயலும் அறிவும் ஆற்றலும் திறனும் உயரும் என்பதில் ஐயமில்லை. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு மற்ற மொழிகளை கற்பது எளிதாகும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 கேள்விக்குறி
 வேற்று மொழியினில் உரையாடும்போதோ வேற்று மொழியைக் கேட்கும்போதோ நம் மூளை அதனை நம் தாய்மொழியில் மாற்றி நமக்கு உணர்த்துகிறது. ஆனால், தாய்மொழியில் படிக்கும்போது மூளை இதற்கென மெனக்கெட வேண்டியதில்லை. கிராமப்புற மாணவர்கள் நலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடிப்படை வசதியே கேள்விக்குறி எனும் போது பிறமொழிக் கல்வி என்பது அவர்களுக்குப் பெரும் சுமையேயாகும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்
 பழகப் பழக எளிது
 வீட்டில் தாய் மொழியைப் பேசும்போது அந்த மொழியை அடிப்படை பயிற்று மொழியாக்கினால் நிச்சயம் அந்த பிள்ளைகளால் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எதுவுமே முதலில் தொடங்கும்போது கடினமாகத்தான் தோன்றும். பிறகு பழகப் பழக எளிதாகி விடும். தாய்மொழி பயிற்று மொழியாக இருந்தால் எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இக்கருத்தை பெற்றோரும் ஆதரிக்க வேண்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 சிறந்த நடைமுறை
 எல்லோருக்கும் தாய்மொழிதான் கல்விக்கு அடித்தளம். அதனை நன்கு கற்றுவிட்டால் பின்னர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் எளிதாகக் கற்கலாம். பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களைத் தங்கள் தாய்மொழியில் கட்டாயமாகப் பயிற்றுவிக்க வேண்டும். அதன் பின்னர் மாணவர்கள் விரும்பும் பிற மொழிகளில் பயிற்றுவிப்பது சிறந்த நடைமுறை. இதனால் மாணவர்கள் சிறப்படைவார்கள்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 தகுதிக்குறைவு
 அறிவியல் தொழில் நுட்பங்களில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான், ரஷியா போன்ற நாடுகளில் அவர்களின் தாய்மொழியே பயிற்று மொழியாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் தாய்மொழியில் பேசுவதையோ தாய்மொழியில் கற்பதையோ தகுதிக்குறைவாக நினைக்கின்றனர். இந்த பிற்போக்குத்தனமான மாயை அகல வேண்டும். தாயைப் போற்றுவதுபோல தாய்மொழியையும் போற்ற வேண்டும்.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

நரேந்திர மோடி ஓா் ஆபிரஹாம் லிங்கன்!

அருணாசலில் ‘ஒருதலைத் தோ்தல்’!

SCROLL FOR NEXT