விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "அரசு வேலைவாய்ப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற முடிவு சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

30th Jun 2021 03:43 AM

ADVERTISEMENT

 வரவேற்கத்தக்கது
 அரசு வேலைவாய்ப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற முடிவு வரவேற்கத்தக்கது. ஏழை எளிய மக்களின் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் குளிர்சாதன வசதியோடு கல்வி கற்கும் மாணவர்களைவிட அரசுப் பள்ளியில் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதே நல்லது.
 பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.
 சரியானது
 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தரும் முடிவு சரியானதுதான். ஆனால், அரசுப் பள்ளிகள் உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அத்துடன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும். அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், அரசு ஊழியர்கள் அனைவருமே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க உறுதியேற்க வேண்டும்.
 அ. யாழினி பர்வதம், சென்னை.
 தேவையற்ற முடிவு
 இது தேவையற்ற, நடைமுறை சாத்தியமற்ற முடிவு. வேலைவாய்ப்புக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகள் திறமையை சோதிக்கத்தான் என்றால் திறமையாளர்கள்தானே தேர்வு பெற்று வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்? முன்னுரிமை என்றால் அரசுப் பள்ளி மாணவர்கள் திறமையற்றவர்களா? அரசுப் பள்ளிகள் மாணவர்களை எந்தப் போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்தால் போதும்.
 த. யாபேத்தாசன், பேய்க்குளம்.
 முரண்பாடு
 மாநிலம் முழுவதும் இயங்கும் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் எண்ணிக்கையில் அதிகம். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அப்படியிருக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது முரண்பாடானது. வேலைவாய்ப்பில் தகுதியை சோதிக்க போட்டித் தேர்வுகள் உள்ளன. அதில் தேர்வாகி வேலைவாய்ப்பைப் பெறுவதே சரியான முறை.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 விபரீத முடிவு
 இம்முடிவு சரியானதன்று. மாணாக்கர் பெற்ற மதிப்பெண்ணும், அவர்தம் திறமையும்தான் முக்கியமே தவிர, அவர்கள் பயின்ற பள்ளிகள் அல்ல. தனியார் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், மாணாக்கரின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் யாவரும் அறிந்ததே. அரசுப் பள்ளியில் பயின்றோருக்கே அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்கிற விபரீத முடிவு எடுக்கப்படக் கூடாது.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 சந்தேகம்தான்
 அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் நிலைதான் உள்ளது. வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதால் மட்டுமே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவிடுமா என்பது சந்தேகம்தான். அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் குறித்து அக்கறை கொள்வதுமே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிகோலும்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 வீண் பெருமை
 சாதாரண மக்களின் புகலிடமாக இருப்பவை அரசுப் பள்ளிகள்தான். வீண் பெருமைக்காக பல லட்சங்களை செலவிட்டு தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் லட்சங்களை லஞ்சமாகக் கொடுத்து வேலைகளை விலைக்கு வாங்க முடியும். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாண வர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம். இந்த முடிவு மிகவும் சரியானது.
 ஏ. நாகராஜன், கடலூர்.
 பாரபட்சம் கூடாது
 வேலைவாய்ப்பு என்று வரும்போது தகுதிதானே முக்கியம்? எந்தப் பள்ளியில் படித்தால்தான் என்ன? கல்விக்கே தகுதி பார்க்கின்ற இக்காலத்தில் வேலைவாய்ப்புகளில், குறிப்பாக அரசுப் பணிகளுக்கு தகுதி பார்க்க வேண்டாமா? அது மட்டுமல்ல, எந்தப் பள்ளியில் படித்திருந்தாலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தானே அரசுப் பதவிகள் கிடைக்கின்றன? எனவே, அரசு வேலைவாய்ப்பில் இந்த பாரபட்சம் கூடாது.
 மகிழ்நன், சென்னை.
 கல்வி ஒரு தொழில்
 தனியார் பள்ளிகளை நடத்துவதில் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுகின்ற அளவிற்கு கல்வி ஒரு தொழிலாகிவிட்டது. இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பது கூடாது. அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தலாம். பொதுத் தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் என வேறுபடுத்தி தயாரிக்கப்படுவதில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 முறையல்ல
 எந்தவொரு வேலைவாய்ப்பிலும் போட்டியாளரின் கல்வித் தகுதி, அவர் பெற்ற மதிப்பெண் இவற்றோடு போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலே திறமையான பணியாளர்களைக் கண்டறிய முடியும். வேலைவாய்ப்புக்கு கல்வி பயின்ற பள்ளியினையும் ஒரு தகுதியாக்குவது முறையல்ல. இது ஒரே விதமான தகுதியுடைய போட்டியாளர்களிடையே பாரபட்சம் காட்டும் செயலாகும்.
 கே. ராமநாதன், மதுரை.
 சமநோக்கு பார்வை
 அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ எந்தப் பள்ளியானாலும் அரசின் பாடத்திட்டம் மூலம்தானே மாணவர்கள் படித்துத் தேர்ச்சி பெறுகிறார்கள்? அரசுப் பள்ளிகளின் தரத்தையும், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த முயற்சி மேற்காள்ள வேண்டுமே தவிர, அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்பது சமநோக்கு பார்வையாகாது.
 இரா. முத்துக்குமரன், தஞ்சாவூர்.
 தடையாக இல்லை
 மாணவ மாணவியர் பெறும் மதிப்பெண்கள்தான் அவர்களின் தகுதியை நிர்ணயிக்கிறது. இப்போதும் அரசு பள்ளியில் படித்தது என்பது வேலைவாய்ப்புக்கு தடையாக இருக்கவில்லை. வேலைவாய்ப்பு தேர்வுக்கான பயிற்சிகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே விரும்புவோருக்கு அளிக்கலாம். இந்திய அரசின் உயரிய பதவிகளை வகித்த பலரும் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 அறிவுடைமையல்ல
 அரசுப் பள்ளிகள் முதலில் தரம் உயர்த்தப்பட வேண்டும். கற்றல்-கற்பித்தல் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களைப்போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். இவையெல்லாம் நடந்தால்தான் அரசுப் பள்ளியில் பயின்றோரும் திறமைகளைப் பெறுவர். அதனை விடுத்து, வேலைவாய்ப்பில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்று பிரிப்பது அறிவுடைமை ஆகாது.
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 தாழ்வு மனப்பான்மை
 தனியார் பள்ளிகளை அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவற்றை அரசுப் பள்ளிகளாக மாற்றலாம். அப்போது, கல்விக்காக பெற்றோர் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பிள்ளைகளின் கல்விக்காக செலவழிக்கும் நிலை மாறும். அரசுப் பள்ளி குறித்து இருக்கும் தாழ்வு மனப்பான்மை மாறும். மாணவர் சேர்க்கையும் அதிகமாகும். அரசுப் பணியில் அரசுப் பள்ளிகளில் பயின்றோருக்கே முன்னுரிமை என்பது சரியே.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 வரப்பிரசாதம்
 தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கும் லட்சக்கணக்கான ரூபாயை எண்ணி, தங்கள் பிள்ளைகளுக்கு வருங்காலங்களில் கல்வி என்பதே எட்டாக்கனியாகி விடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்ந்திருந்த ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்கிற செய்தி மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். கல்விக் கட்டணக் கொள்ளைக்கு சவுக்கடி இந்த முடிவு.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 நன்மை அளிக்கும்
 அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் ஏழைகள். அவர்கள் அரசு வேலைக்கு வந்தால் ஏழை மக்களுக்கு என்ன தேவை என்பதை அனுபவபூர்வமாக அறிவர். அதற்கு ஏற்ப அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவார்கள். இது நாட்டுக்கும் மக்களுக்கும் பெருமளவு நன்மை அளிக்கும். ஆகவே அரசு வேலை வாய்ப்புகளில் அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற முடிவு சரியானது.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT