விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "நீட்' உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சாத்தியமல்ல
 நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதல்ல. சர்வீஸ் கமிஷன்களில், சைனிக் பள்ளி போன்ற பள்ளிகளில் நுழைவுத்தேர்வு இல்லாமல் சேர்க்கை சாத்தியமல்ல. தொழிலுக்குரிய திறனறித் தேர்வுகள் கட்டாயம். அதற்கேற்ப மாணவர்களை ஆயத்தப்படுத்த நுழைவுத் தேர்வுகள் அவசியம் தேவை. எனவே, நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது.
 கலைப்பித்தன், கடலூர்.
 வேலைவாய்ப்பு
 இக்கருத்து மிகவும் தவறானது. மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலம்தான் பணியாளர்களைத் தேர்வு செய்ய இயலும். அப்போதுதான் தகுதியுள்ளவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் வேலைவாய்ப்பைப் பெற முடியும். வெறும் மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வின் மூலமும் பணியாளர் தேர்வு இருக்குமானால், அவற்றில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உருவாகும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 சரியான கருத்து
 இது மிகவும் சரியான கருத்தாகும். கல்வி, வேலைவாய்ப்பு முதலிய பணிகளை மாநிலங்களின் உரிமையில் சேர்க்க வேண்டும். தேசிய அளவிலான பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரலாம். மாநிலப் பட்டியலில் உள்ள படிப்புகளிலும், பணிகளிலும் மத்திய அரசு மூக்கை நுழைப்பது கூடாது. அது இந்திய இறையாண்மைக்கே எதிரானதாகும். இக்கருத்து வரவேற்கத்தக்கதே.
 பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.
 நுழைவாயில்
 இக்கருத்து ஏற்புடையது அல்ல. பல்வேறு துறைகளில் உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வுதான் சரியான தேர்வாகும். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கின்றன. நாமும் ஏற்கத்தான் வேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. தற்போது பிளஸ் 2 வகுப்பில் தேர்வில்லாமல் தேர்ச்சி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், நுழைவுத் தேர்வே உயர்கல்விக்கான நுழைவாயில்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 தேவையற்றது
 ஒரு மாணவன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதினோராம் வகுப்பில் சேரும் போதே எதிர்காலத்தில் எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ப பாடங்களை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெறுகிறான். அதன்பிறகு அவன் அந்தத் துறையில் படிப்பதற்கு அதே பாடத்திட்டத்தில் தனியே போட்டித் தேர்வு தேவையற்றது. தேவைப்பட்டால் 11- 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தலாம்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 எப்படி அறிவது?
 ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பொது தேர்வு இன்றி தேர்வான மாணவர்கள் இன்று பத்தாம் வகுப்பிலும், பிளஸ் 2 }விலும் அனைவரும் தேர்ச்சி. தேர்வே எழுதாத இம்மாணவர்களின் தகுதியை எப்படித்தான் கண்டறிவது? கரோனா நோய்த்தொற்று ஓரளவு தணிந்தபிறகு நீட் போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதுவே, மாணவர்கள் ஊக்கமாகப் படிக்க வழி வகுக்கும்.
 அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
 ஏற்புடையதே
 இக்கருத்து ஏற்புடையதே. சென்ற ஓராண்டுக்கும் மேலாக, பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணமே கரோனா தீநுண்மி தீவிரமாகப் பரவியதே. இப்போது நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தினால் அதே நிலைதான் மீண்டும் வரும். மாணவர்கள் உயிருடன் இருப்பதுதான் முக்கியம். நுழைவு தேர்வுக்கு அவசரப்படுவதை விட கொஞ்சம் காலம் அமைதியாக இருந்து நோய்த்தொற்று நீங்கிய பிறகு தேர்வை நடத்தலாம்.
 உஷா முத்துராமன், மதுரை.
 பயன் என்ன?
 பாடத்திட்டங்களை மாநில வாரியாக வடிவமைத்து விட்டு தேர்வுகளை மட்டும் தேசிய அளவில் நடத்துவதால் பயன் என்ன? முதலில் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்றிடவும் தேர்வு எழுதிடவும் வாய்ப்புகள் உருவாக வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு உருவானால் தேசிய அளவில் தேர்வுகள் வைக்கப்படலாம். அதுவரை "நீட்' உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படவேண்டும்.
 அ. செலஸ்டின் மகிமை ராஜ், வேம்பார்.
 பாடத்திட்டங்கள்
 இக்கருத்து சரியானதே. ஏழை எளிய நடுத்தர மக்களின் பிள்ளைகள் போதிய பயிற்சியின்றி உள்ளனர். நீட் தேர்வினை எதிர்கொள்ளவியலாமல் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தேசிய அளவில் நடத்தப்படுகிற தேர்வுமுறை சரியானதல்ல. அடிப்படையான சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு பிறகு வேண்டுமானால் அதுபற்றி கல்வியாளர்களோடு கலந்து பேசி பரிசீலிக்கலாம். அதுவரை நீட் தேர்வினை நிறுத்தி வைக்கலாம்.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 அடிப்படைத் தகுதி
 பொறியியல் நுழைவுத் தேர்வுகளை கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களால் மட்டுமே எழுத இயலும். மருத்துவ நுழைவுத்தேர்வை அறிவியல் அல்லது உயிரியல் பாடத்தை படித்தவர்களால் மட்டுமே எழுத இயலும். இதிலும் சில மாணவர்கள் மட்டுமே நுழைவுத்தேர்வுக்கு தயாராவார்கள். மேலும் கல்லூரியில் சேர்ந்து பயில ஏதாவது அடிப்படை தகுதி வேண்டாமா? அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படக் கூடாது.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 என்ன தவறு?
 உயர்கல்வி பயில தகுதியான,திறமையான மாணவர்களை நுழைவுத்தேர்வு வாயிலாக தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு? அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை எதிர்க்கலாம். ஆனால் மாணவர்களின் தனித்திறனை அடையாளம் காட்டும் கருவியாக நுழைவுத்தேர்வு உள்ளது. மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்தும் களமாக நுழைவுத் தேர்வுகள் அமைந்துள்ளதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
 மு. சம்சுதீன் புஹாரி, தூத்துக்குடி.
 நிரந்தரத் தீர்வு
 பணம் இருந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பு என்றிருந்த சூழலை நுழைவுத் தேர்வு முறை மாற்றியது. இதனை ரத்து செய்வது தேவையற்றது. மாணவர்கள் தகுதியினை வளர்த்துக் கொள்ளத் தேவையான பாடத்திட்டத்தை வகுப்பதே நிரந்தர தீர்வு. தகுந்த பயிற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவர்கள் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம். நீட் தேர்விற்கான பயிற்சியில் இருப்பவர்களால் தேர்வு ரத்து என்பதை ஏற்க இயலாது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 கேள்விக்குறி
 பல மாநிலங்கள் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து விட்டன. இணைய வழிக் கல்வி என்பது ஓரளவு பயன்படுமே தவிர முழுமையாக அவர்களின் அறிவை மேம்படுத்த உதவுமா என்பது கேள்விக்குறிதான். மாணவர்கள் படிப்பது குறைந்துவிட்டது. இந்த நிலையில் தேசிய அளவிலான தேர்வுகள் வைப்பது பயனற்றதாகவே இருக்கும். சிபிஎஸ்இ, பிளஸ் 2 தேர்வுகள் நடக்காததால் அனைத்து நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதே சரி.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 இரண்டாவது அலை
 நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது சரியே. காரணம் கரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகமாகி விட்டன. மேலும் பலர் இடம் விட்டு இடம் பெயர்ந்து இந்த தேசிய அளவிலான தேர்வுகளை எழுத வேண்டிய நிலையும் இருப்பதால் இத்தேர்வுகளை சில முக்கிய விதிமுறைகளோடு ஆன்லைனில் நடத்த வேண்டும். அல்லது தள்ளிப் போட வேண்டும்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 இன்றியமையாதது
 தகுதியை நிர்ணயம் செய்வதற்கு தேர்வு என்னும் அளவுகோல் மிக இன்றியமையாதது. தற்போதைய பேரிடர் சூழலால் நுழைவுத் தேர்வு முறையினை தேவைக்கு ஏற்ப மாற்றி வைத்துக் கொள்ளலாம். தற்போது இணையவழி கற்றல் - கற்பித்தல் சிறப்பாக தொடர்ந்து நடைபெறுவது போன்று நுழைவுத் தேர்வுகளையும் இணையவழியில் நடத்துதல் சிறப்பு. நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வது பலவிதக் கெடுதல்களுக்கு வழிவகுக்கும்.
 வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.
 கல்வித்தரம்
 உயர்கல்விப் படிப்பிற்கு பிளஸ் 2 மதிப்பெண்களே அடிப்படை. அத்தேர்வை ரத்து செய்துவிட்டு மாநிலப் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மதிப்பெ ண்கள் வழங்கப்படும் என்பதால் தங்களின் உண்மையான கல்வித்தரம் தெரியப்போவதில்லை என்று மாணவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது அவர் களை மேலும் சோதனைக்கு ஆளாக்குவதாகும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT