விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழில் படிக்கலாம் என்று அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் முடிவெடுத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

9th Jun 2021 03:32 AM

ADVERTISEMENT

கண்கூடு
 பொறியியல் பாடங்களை தமிழில் படிக்கலாம் என்று முடிவெடுத்திருப்பது சரியே. தாய்மொழியில் படித்தால்தான் சிந்தனை மேலோங்கும். மேலைநாடுகளில் உயர்கல்வி தாய்மொழியில் உள்ளதால் அந்நாடுகள் சிறந்த வளர்ச்சி கண்டு வருவது கண்கூடு. ஆனாலும், தொழில் நுட்ப வார்த்தைகளை தமிழில் மாற்றம் செய்யக்கூடாது. அப்பொழுதுதான் மாணவர்கள் உலக அளவில் பணியாற்ற முடியும்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 முன்னேற்பாடுகள்
 தாய்மொழியில் உயர்கல்வி பயில்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தொழில் நுட்ப வார்த்தைகளைக் கற்பதில் தொடக்கத்தில் சிரமம் ஏற்படும். அதற்கு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கொடுக்க வேண்டும். பொறியியல் தொடர்பான நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் தடையின்றிக் கிடைக்க வேண்டும்.
 மு. பாலசுப்பிரமணியன், தில்லி.
 விபரீத முயற்சி
 பிற துறை சார்ந்த கல்வியைப்போல் பொறியியல் கல்வி ஒரு குறிப்பிட்ட பகுதியோடு அடங்கிவிடுவதில்லை. தொழில் கல்வி உலக அளவிலான கல்வியோடு தொடர்புடையது. இதனை ஆங்கில மொழியில் பயின்றால் மட்டுமே, அம்மாணவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியும். மாநில மொழியில் பயின்றால், அந்த மாநிலத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையே உருவாகும். எனவே வேண்டாம் இந்த விபரீத முயற்சி.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 தவறில்லை
 பொறியியல் பாடங்களைத் தமிழ் வழியில் நடத்துவதில் தவறொன்றுமில்லை. சில வார்த்தைகளை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆங்கில வழியில் பயிலும் மாணவன் முழுவதுமாக புரிந்து படிப்பதுமில்லை. தவறு இல்லாமல் எழுதுவதுமில்லை. மொழிவழிக்கு முக்கியம் தராமல் ரஷியாவில் தாய்மொழியில்தான் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது. அவர்கள் சிறந்த மருத்துவர்களாக இல்லையா?
 எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
 கலைச்சொற்கள்
 எல்லா மாணவர்களுமே ஆங்கிலப் புலமை பெற்றிருப்பதில்லை. அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் முடிவு ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என்கிற நிர்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பொறியியல் பாடங்கள் தமிழில் பயிற்றுவிக்கப்படும்போது அதில் மேலும் பல புதிய கலைச்சொற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் நிச்சயம் அதிகரிக்கும். எனவே இம்முடிவை வரவேற்போம்!
 மு. சம்சுதீன் புஹாரி, தூத்துக்குடி.
 கனவு நனவாகட்டும்
 வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழில் படிக்கலாம் என்று அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் முடிவெடுத்திருப்பது சரியே. அறிவியலோ, தொழில் நுட்பமோ தாய்மொழியில் உள்வாங்கும்போது நெருக்கமாக உணரப்படும். ஆக்கத்திறன், கண்டுபிடிப்புகள் ஆகியவை அதிகரிக்க சாத்தியக்கூறுகள் உருவாகும். தாய்மொழி வழிக்கல்வி என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவு. அந்தக் கனவு நனவாகட்டும்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 வரப்பிரசாதம்
 தொழில் நுட்ப கவுன்சிலின் முடிவு சரியானதே. பள்ளிக்கல்வியை தமிழ் வழியில் படித்துவிட்டு பொறியியல் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆங்கில வழியில் படிக்க இயலாமல், பொறியியல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, கலை-அறிவியல் கல்லூரிகளை மாணவர்கள் நாடும் போக்கு குறையும். மாணவர்கள், தமிழ் வழியில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற வாய்ப்பு ஏற்படும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 உள் ஒதுக்கீடு
 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி கற்று தமிழ் வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் உள் ஒதுக்கீடும் கல்வி கட்டணச் சலுகையும் வழங்கலாம். இவர்களுக்கு ஆங்கில மொழியையும் கற்பிக்கலாம். தூய தமிழ் கொள்கை என்பது இலக்கியம் தொடர்புடையது. தமிழ் வழி கல்வி என்பது கல்வி தொடர்புடையது. ஆதலின் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்துவதால் தவறு ஒன்றும் இல்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 காப்புரிமை
 ஜப்பானிலும் சீனாவிலும் தங்கள் தாய் மொழியில் தான் பொறியியல், மருத்துவப் படிப்புக்கள் உள்ளன. அவர்கள் உலகளவில் முன்னணியில் இருப்பதற்கு தாய்மொழி வழியிலான கல்வியே காரணம். தமிழ்வழிக் கல்வி, கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெருக வழி வகுக்கும். பொறியியல் கலைச்சொற்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும். தமிழ் மொழிக்கு கலைச் சொற்களின் வருகை புதிய பாய்ச்சலைக் கொடுக்கும்.
 கரு. பாலகிருஷ்ணன், மதுரை.
 மொழிபெயர்ப்பு
 பொறியியல் பாட நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கும்போது நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் இயல்பான மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் ஆங்கில வழியில் இதுவரை நடத்திக்கொண்டிருந்த பாடங்களை தமிழில் நடத்தும் பொழுது தொழில் நுட்ப வார்த்தைகளை தமிழாக்கம் செய்வது கடினம். ஆனாலும் தமிழ் வழியில் படிக்கும் பொழுது புதிய புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 முதல் விருப்பம்
 பொறியியல் பாடம் என்பது உலக அளவில் பரந்து விரிந்து கிடப்பது. தகவல்-தொழில் நுட்பத் துறையில் வேலை பார்ப்பதுதான் பொறியியல் பட்டதாரிகளின் முதல் விருப்பம். தமிழில் பொறியியல் பட்டம் பெற்றால், இந்த துறையில் உலகளாவிய முறையில் வேலை செய்வதற்கு வாய்ப்பு கிட்டாமல் போய் விடும். பொறியியல் படித்தும் நல்ல வருவாய் ஈட்ட முடியாமல் போகும். எனவே, இம்முடிவு சரியல்ல.
 கு. அருணாசலம், தென்காசி.
 பெருமை குறையாது
 பொறியியல் பாடங்களைத் தமிழில் கற்பிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அவற்றில் உள்ள தொழில் நுட்ப வார்த்தைகள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கத் தேவையில்லை. இதனால் தமிழின் பெருமை குறைந்துவிடாது. இன்றைக்கு ஆங்கில மொழியிலுள்ள எத்தனையோ வார்த்தைகள் பிற மொழி வார்த்தைகளே. ஆனாலும் அது உலகத் தொடர்பு மொழியாக இருக்கிறது.
 மகிழ்நன், கடலூர்.
 கனவு மெய்ப்படும்
 பொறியியல் பாடங்களைத் தமிழில் கற்பதால் பல ஏழை எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் பொறியியல் கனவு மெய்ப்படும். ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அதை நாம் எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். ஆனால் படிக்கும் காலகட்டத்தில் பாடம் சார்ந்த அறிவுதான் மிக முக்கியம். ஆகவே பாடம் சார்ந்த அறிவை தாய்மொழியில் பெறுவதே சிறந்தது. இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் முடிவு சரிதான்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 சிரமம் குறையும்
 இந்திய தொழில் நுட்ப கவுன்சில் முடிவெடுத்திருப்பது மிகவும் சரியே. ஏனெனில் தாய் மொழியில் கல்வியினைப் பயிலும்போதே முழுமையானப் புரிதல் ஏற்படும். மேலும் கிராமப்புற மாணவர்களுக்கும் மேல்நிலை வரை தமிழ்வழியில் மட்டுமே படித்த மாணவர்களுக்கும் ஆங்கில வழியில் கற்பதில் இதுவரை உள்ள சிரமங்கள் முற்றிலும் குறையும். இது தவிர மொழிப்பற்று மிகுந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
 வ. ரகுநாத், மதுரை.
 உலகளாவிய துறை
 பொறியியல் பாடங்களை தாய்மொழியில் கற்பது, பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கு வழி வகுக்கும். அத்துறையில் உள்ள கலைச்சொற்களை தமிழில் ஆக்கிக் தந்து, பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல்கலைக்கழகங்களும் அரசும் ஆவன செய்யவேண்டும். பொறியியல் துறை உலகளாவிய துறை என்பதால் அதில் வேலைவாய்ப்புக்குத் தேவையான அளவிற்கு ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 நிதர்சனம்
 என் மகன் பள்ளியில் தமிழ் வழி கல்வி கற்று பொறியியல் படிப்பை முடித்து வெளிநாட்டில் பணிபுரிகிறார். அவரால் ஆங்கிலத்தில் தெளிவாகவும் சரியான உச்சரிப்புடனும் பேச முடியவில்லை. வேலைவாய்ப்புக்கு ஆங்கிலமே தேவைப்படும். பொறியியல் பாடங்களை தமிழில் படித்து விட்டு வெளிமாநிலத்தில் வேலை செய்வது மிகவும் கடினம் என்பதே நிதர்சனம். வேலைவாய்ப்புக்கு ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT