விவாதமேடை

"இங்குள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமா? அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

28th Jul 2021 04:09 AM

ADVERTISEMENT

 மனிதாபிமானம்
 இங்குள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழக்கப்பட வேண்டும். அவர்கள் விருப்பமின்றி அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது. இவர்களின் முன்னோரில் பெரும்பாலோர் ஆங்கிலேய ஆட்சியின்போது வேலைக்காக இலங்கைக்குச் சென்றவர்களாக இருப்பர். எனவே, இவர்கள் இனத்தால் தமிழர்களே. மேலும், அங்கு ஏற்பட்ட இனக்கலவரத்தால் உயிர் பிழைப்பதற்காக இங்கு வந்தவர்களை அங்கே திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
 பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.
 அறிவுடைமை
 இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுமானால், இந்தியாவின் மக்கள்தொகை கணிசமாக உயர்ந்து பல்வேறு பிரச்னைகள் உருவாகக்கூடும். ஏற்கெனவே, அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடியுரிமை பெற்றுள்ள அந்நிய நாட்டவர்களால் கலவரம் உருவாகி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.இலங்கை அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வழிகாண்பதே அறிவுடைமையாகும்.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 காலத்தின் கட்டாயம்
 இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலை நாடுகளில் பத்து ஆண்டுகள் இருந்தாலே குடியுரிமை வழங்கப்படுகிறது - அதுவும் வெவ்வேறு நாட்டவருக்கும் வெவ்வேறு இனத்தவருக்கும். இலங்கைத் தமிழர் யார்? ஒரு காலத்தில் தமிழகத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி இலங்கைக்குச் சென்றவர்கள்தானே? அவர்களுக்கு ஏன் இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடாது?
 கலைப்பித்தன், கடலூர்.
 ஏற்புடையதல்ல
 இலங்கை அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது ஏற்புடையதல்ல. இந்தியாவில் தங்கியுள்ள எல்லா அயல் நாட்டினருக்கும் குடியுரிமை வழங்குவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். மேலும், அவர்களுக்கான சலுகைகளை வழங்க தற்போதைய இந்தியப் பொருளாதாரம் இடம் தராது. எனவே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது கூடாது. அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 நிர்பந்தம்
 இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கினால், அத்தனை வெளிநாட்டு அகதிகளுக்கும் குடியுரிமை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ஒருபுறம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக குடிமக்களை இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று அரசு அறிவுறுத்துகிறது. மற்றொருபுறம், வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கெல்லாம் இந்தியக் குடியுரிமை கொடுப்பதன் மூலம் மக்கள்தொகையைக் கூட்டுவது நியாயமல்ல.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 சலுகை
 ஏற்கெனவே வங்கதேசத்திலும், மியான்மரிலும் இருந்து வந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள், இந்தியக் குடிமக்களுக்கான ஆவணங்களை முறைகேடாகப் பெற்று இந்தியக் குடிமகனுக்குள்ள சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். அவர்களைக் கண்டறிவதே மத்திய அரசுக்கு சவாலாக இருக்கிறது. எனவே, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
 செ. சுவாமிநாதன், திருவானைக்காவல்.
 தயக்கம் ஏன்?
 உலக நாடுகள் பலவற்றில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகள், அந்தந்த நாட்டு மக்களுக்கு சமமான உரிமைகளுடன் வாழும்போது இந்தியா அவர்களுக்குக் குடியுரிமை வழங்கத் தயங்குவது ஏன்? குறைவான உதவித்தொகையோடு வேலைவாய்ப்புகள் இன்றி வசதிகளற்ற குடியிருப்புகளில் இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் நிலையை அறிந்த மாண்புமிகு நீதியரசர் "இதயத்தில் ரத்தம் கசிகிறது' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 அவல வாழ்க்கை
 இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கை அகதிகள் வாழ்வுரிமை இன்றி இங்கு அவல வாழ்க்கை வாழ்கின்றனர். இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகள் இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்யட்டுள்ளது. அதேபோல் இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குவதே நியாயமாகும்.
 கே. ராமநாதன், மதுரை.
 கண்ணோட்டம்
 இலங்கைத் தமிழர் பிரச்னை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல. தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தங்கள் உற்றார் உறவினர், உடமைகள் அனைத்துமே இழந்துவிட்டவர்கள். எனவே, அவர்களின் வாழ்வியல் சிறக்க அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி, அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட இந்திய அரசு முன்வர வேண்டும்.
 ப. நரசிம்மன், தருமபுரி.
 வெளிப்படை
 இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது தமிழக அரசுக்கு இருக்கும் அக்கறை இந்திய அரசுக்கு நிச்சயமாக இல்லை என்பது வெளிப்படை. இலங் கைத் தமிழர்நலம் காத்தலில் அக்கறையில்லாத இந்திய அரசுக்குத் தமிழக அரசு துணைபோகாமல், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை பெறச்செய்வது உட்பட எல்லா உதவிகளையும் செய்யவேண்டியது கடமை யாகும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 அடையாளம்
 இங்கு உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அகதிகள் என்ற அடையாளம் கொடுத்து தனியாக நாம் வைத்திருக்கின்றோம். அவர்களுடைய பூர்விகம் நமது தாய்த்திருநாடே. நிச்சயமாக அவர்கள் இங்கிருந்து இலங்கைக்கு திரும்பிப் போக விரும்பமாட்டார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புவதும் தவறு. இனியாவது இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்று அடையாளம் பெற்று, கண்ணியமாக வாழட்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 கேள்விக்குறி
 இலங்கை அகதிகள் இங்கு வந்த பின்பு இந்திய மண்ணிலேயே பலர் பிறந்துள்ளனர். இருப்பினும் இப்போது அவர்களும் இலங்கை பிரஜையாகத்தான் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு தமிழக அரசு மாதாமாதம் பணக்கொடை, வசிக்க வீடு, மின்சாரம், அத்யாவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர்களின் வாழ்வாதாரம் நிச்சயமாகக் கேள்விக்குறியாகிவிடும்.
 மு. நடராஜன், திருப்பூர்.
 சவால்
 இலங்கை அகதிகள் அனைவரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைப்பதுதான் சரியானது. அவர்கள் இந்தியாவில் இருப்பதை விட தங்களது தாய்நாட்டிற்குச் சென்று அங்கு வாழ்வதுதான் அவர்களது கலாசாரத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்புடையதாக இரு க்கும். தற்போது இந்தியாவின் மக்கள்தொகை 136 கோடியை எட்டிவிட்ட சூழலில் இலங்கை அகதிகளை வைத்துப் பராமரித்து பாதுகாப்பதென்பது இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 விருப்பம்
 இலங்கை அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமா அல்லது அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டுமா என்பதை முடிவெடுப்பதற்கு முன் முதலில் அவர்களின் விருப்பம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசிப்பவராவார்கள். அவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதில் தவறில்லை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 அவமானம்
 இலங்கை அகதிகள் உயிர் பிழைப்பதற்காக இந்தியாவுக்கு வந்தவர்கள். தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி இலங்கைக்குச் சென்று அந்நாட்டுக்கு வளம் சேர்த்தவர்கள். ஒருநாள் திடீரென அனைத்தையும் இழந்துவிட்டு இங்கு வந்தவர்கள். வேறுநாட்டில் குடியேறியவர்கள் வசதிகளுடன் வாழ்கின்றனர். தங்களுடைய பூர்விக நாட்டில் வாழ்பவர்கள் எந்தவொரு உரிமையும் இல்லாமல் அகதிகளாய் இருப்பது நமக்குத்தான் அவமானம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 கண்ணியம்
 இங்குள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அதே சமயத்தில், இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விடும்புகிறவர்களை அங்கு செல்ல அனுமதிக்கலாம். ஆனால்,,அகதிகள் என்கிற அடைமொழியோடு அடையாளப்படுத்தப்படுகிற வாழ்க்கையினால் ஏற்படுகிற சங்கடங்களை போக்கும்விதமாக அவர்கள் சொந்த மண்ணில் கண்ணியமாக வாழ வைக்கப்பட வேண்டும்.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT