விவாதமேடை

"மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவால் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

14th Jul 2021 03:54 AM

ADVERTISEMENT

 நியாயமானதே
 புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு கலைத்துறையினர் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானதே. ஆனால், தற்போதுள்ள தணிக்கை முறையைத் திருத்த வேண்டிய அவசியம் என்ன? தற்போதைய மத்திய அரசு புதிய சட்டங்களை கொண்டு வருவதைவிட பழைய சட்டங்களைத் திருத்துவதிலேயே ஆர்வம் காட்டுகிறது. இந்த திருத்த சட்டம் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 ஆர்ப்பாட்டம்
 கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திரைப்படங்களில் நமது பண்பாடும் கலாசாரமும் சிதைக்கப்படுகின்றன. ஆபத்தான இந்தப் போக்கைக் கட்டுப்படுத்தவே, மத்திய அரசு புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர இருக்கிறது. அந்த மசோதா கொண்டுவரப் பட்ட பிறகு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திரைப்படத் துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். மசோதா வருவதற்கு முன்பே ஆர்ப்பாட்டம் தேவையில்லை.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 நகைப்புக்கிடமானது
 தற்போது உள்ள அதிகாரம் ஓர் அமைப்பிடம் இருந்து மற்றோர் அமைப்புக்கு கைமாறுகிறது. அவ்வளவுதான். சட்டத்தில் வேறு எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. அப்படியிருக்க இந்த மசோதாவால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறுவது நகைப்புக்கிடமானது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு எதுவும் எழவில்லை. இந்த மசோதாவால் கருத்து சுதந்திரத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 அதிகாரக் குவிப்பு
 நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துகளைக் கட்டுப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. இந்த கோட்பாட்டை செயல்படுத்துமாறு தணிக்கை வாரியத்தை மத்திய அரசு அறிவுறுத்தினாலே போதுமே. எதற்காக தணிக்கை வாரியத்திற்கு மேலான ஓர் அதிகார அமைப்பு? எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசு தன்னிடமே வைத்துக்கொள்ள எண்ணுகிறது என்பதன் வெளிப்பாடே இது.
 கலைப்பித்தன், கடலூர்.
 நல்லதல்ல
 தணிக்கை வாரியம், நீதிமன்றம் இவற்றைத் தாண்டி மத்திய அரசு இதனைக் கையில் எடுப்பது படைப்பாளியின் குரலை ஒடுக்குவதாகும். புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவினால் அரசுக்கு எதிரான கருத்துகளை எவரும் பதிவு செய்ய இயலாது. அப்படி பதிவு செய்து வரும் படங்களை இவர்கள் தடை செய்து விட்டால் அதன் தயாரிப்பாளர்களின் நிலை என்னவாகும்? கருத்து சுதந்திரத்தில் அரசு தலையிடும் போக்கு நல்லதல்ல.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 பாதிப்பு
 மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதால்தான் திரைப்படத்துறையினர் அதனை எதிர்க்கின்றனர். இந்த மசோதா சமுதாயத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது. திரைப்பட தணிக்கை வாரியத்தை தன்னாட்சி பெற்ற அமைப்பாகத் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதிப்பதே நல்லது.
 மா. பழனி, தருமபுரி.
 விமர்சிக்க இயலாது
 புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்தால் நிச்சயமாக கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசின் செயல்பாடுகளை திரைப்படங்கள் மூலமாக விமர்சிக்க இயலாத நிலை உண்டாகும். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போன்ற செயலாகும். ஆனால், அதே நேரத்தில் சமூகத்தை சீரழிக்கும் வன்முறை காட்சிகள் மற்றும் பாலியல் காட்சிகள் தடை செய்யப்படும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 மாற்றங்கள்
 மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவால் கருத்து சுதந்திர பாதிப்பு நிச்சயம் ஏற்படாது. இது போன்று சட்டங்களில் எத்தனையோ முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால் படைப்பாளிகள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க வில்லையையா? படைப்பு சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில்தான் எந்த மாற்றத்தையும் அரசு செய்யும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 சகிப்புத்தன்மை
 தணிக்கை வாரியம் மீது மத்திய அரசு முழு நம்பிக்கை வைக்கவில்லை என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. இப்போது செயல்பட்டு வரும் தணிக்கை வாரியத்துக்கு மேல் ஒரு அதிகார அமைப்பைக் கொண்டுவர எண்ணுவது மத்திய அரசுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது. கருத்து சுதந்திரத்திற்குதடை போடுவது அரசியல் சட்ட விரோத நடவடிக்கை. பொதுமக்கள் ரசனைக்கும் தடை போடுவதாகும்.
 அ. சம்பத், சின்னசேலம்.
 ஏற்கத்தக்கதல்ல
 புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், அதனால், பாதிப்பு இருந்தால் எந்த பிரிவால் பாதிப்போ அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென்று போராடலாம். அதைவிடுத்து கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து என்று இப்போதே கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஒருவரின் கருத்து சுதந்திரம் நாட்டின் இறையாண்மையை பாதித்துவிடக் கூடாது. அதனை உறுதிப்படுத்தவே இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 நன்மையே
 இதுவரை தணிக்கைக் குழு சான்று வழங்கிவிட்டால் அதை மத்திய அரசு நினைத்தாலும் மாற்ற முடியாது என்கிற நிலை உள்ளது. அதை இந்த சட்டத்திருத்தம் மூலம் மாற்ற வழி வகை செய்யப் பட்டுள்ளது. திரைப்படங்கள் சட்ட விரோதமாக ஒளிபரப்புவதை தடை செய்யவும், அதற்கு தண்டனை வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் யாவும் திரைப்படத்துறைக்கு நன்மை அளிக்குமே அன்றி தீமை செய்யாது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 வரலாற்றுத் திரிபு
 கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான கருத்துத் திணிப்பு பல ஊடகங்கள் வழியாகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. பல வரலாற்றுத் திரிபுகளும் கொள்கை குழப்பங்களும் நிகழ்கின்றன. இதனால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, ஜாதி, மத, மொழி, இன மோதல்களும் உருவாகின்றன. இவற்றைத் தடுக்க புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் கட்டாயமே. இம்மசோதாவை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.
 அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
 தவிர்க்க இயலாது
 ஒரு நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் ஆகிய எல்லாமே அந்நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றிற்கு பாதிப்பு விளைவிக்காதிருக்கும் வகையில் ஒரு வரையறைக்குட்பட்டே அனுமதிக்கப்படுகின்றன. இதில் மீறல்கள் ஏற்படும்போது அரசின் தலையீடு என்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இது திரைப்படத் தணிக்கை வாரியத்தின் செயல்பாட்டினைச் சிதைக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 கே. ராமநாதன், மதுரை.
 மசோதா ஏன்?
 இப்போது ஏன் இந்த சட்டத்திருத்த மசோதா? ஏற்கெனவே மத்திய அரசின் தணிக்கை வாரியம் இருக்கிறது. புதிய சிந்தனைகள் வெளிவருவதை மத்திய அரசு விரும்பவில்லையா? கோடிகளில் செலவு செய்து எடுக்கப்படும் ஒரு படத்தை, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வெளியாகாமல் நிறுத்துகின்ற அதிகாரம் இந்த சட்டத்திற்கு இருக்கிறது. ஆகவேதான் திரைத்துறையில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 மீறல் ஏதுமில்லை
 இந்த மசோதா கருத்து சுதந்திரம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. முன் இருந்த மசோதாவை அரசு எளிமையாக்கி இருக்கிறது. அவ்வளவுதான். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால் இப்பொழுது உள்ள சட்ட திருத்த மசோதா மூலம் தகுந்த திருத்தங்களுடன் படம் வெளிவர வழிவகை இதில் இருக்கிறது. இதில் எங்கு கருத்து சுதந்திரம் மீறல் இருக்கிறது ?
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 வேறென்ன?
 மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு தன்னாட்சி அமைப்புகளும் அரசியல் சட்டத்திற்கும், இறையாண்மைக்கும் கட்டுப்பட்டே தத்தம் கடமைகளைச் செய்துவருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் மத்திய அரசிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்பப் பெறும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது மாநில உரிமைகளைப் பறிப்பதும், கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதும் அல்லாமல் வேறென்ன?
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT