விவாதமேடை

"மருத்துவ படிப்புக்காக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

7th Jul 2021 03:22 AM

ADVERTISEMENT

 கேள்விக்குறி
 மருத்துவப் படிப்புக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் கட்டாயம் தயாராக வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படாமல் போனால் மாணவர்கள் நிலை என்ன? தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் மத்திய அரசால் ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறியே. மருத்துவராகும் கனவில் இருக்கும் மாணவர்கள், தேர்வுக்குத் தயாராகவில்லையெனில் துன்பப்பட நேரிடும். நீட் ரத்தானாலும் படித்த படிப்பு வீணாகப் போகாது.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 வாய்ப்பு குறைவு
 நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு தயாராவதே நல்லது. தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு மத்திய அரசோடு பேசி ரத்து செய்ய முயல்கிறது. ஆனால், சட்ட ரீதியாக ரத்து செய்யப்படுமா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதுதான் அவர்களுக்கு நல்லது.
 கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை.
 சட்டப் போராட்டம்
 தமிழக அரசு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே எதிர்ப்பு மனநிலை உள்ளது. மாணவர்களும் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து நீட் தேர்வை எழுத மாட்டோம் என்று புறக்கணித்தால், தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் வெளி மாநில மாணவர்களைக் கொண்டா நிரப்ப முடியும்? நீட் ரத்து போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும்.
 பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.
 தெளிவான முடிவு
 தமிழக மாணவர்கள் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறும்வரை நீட் தேர்வுக்கு தயாராக வேண்டியது அவசியம். அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நீதிமன்றமும் நீட் தேர்வை உறுதிப்படுத்தியிருக்கிறது. மாணவர்களையும். பெற்றோர்களையும் குழப்பாமல் அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும். இப்போதுள்ள சூழலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் நிச்சயம் தயாராக இருக்க வேண்டும்.
 மா. பழனி, தருமபுரி.
 முன்னுதாரணம்
 இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தும் முடிவுக்கு வந்தால் தமிழக மாணவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளனர். ஒரு சட்டத்தை எதிர்த்து விலக்கு பெறுவது அத்தனை எளிதானதல்ல. நீட் விஷயத்தில் தமிழகம் பெறப்போகும் தீர்ப்பு இந்தியாவிற்கு முன்னுதாரணமாக அமையும். இப்படி வலுவான சட்ட ரீதியான போராட்டத்திற்கு கால அவகாசம் தேவைப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும்வரை மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.
 கே. ஸ்டாலின், மணலூர்பேட்டை.
 வேறு வழியில்லை
 12-ஆம் வகுப்பு தேர்வுகளே ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில் 11,12-ஆம் வகுப்பு பாடத் திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வும் ரத்து செய்யப்படுவதே முறையாகும். அப்படித் தேர்வு நடத்தினால் 12-ஆம் வகுப்புத் தேர்வைவிட நீட் தேர்வுதான் முக்கியம் என்று அரசு கருதுவதாக கொள்ளலாம். இந்த சூழலில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டியதை தவிர வேறு வழியில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 குழப்பம் கூடாது
 திமுக-வின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தாலும் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. அதனால்தான் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு சம்பந்தப்பட்ட வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறி உள்ளது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 நிர்பந்தம்
 நீதிபதி ஒருவரின் ஆய்வுக் கருத்தின் அடிப்படையில் நீதிமன்றம் சென்று நிரந்தரமாகத் தடைபெற வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசுக்கு உள்ளது. தேர்வுக்குக் குறைந்த கால அவகாசமே உள்ளதால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் இதைக் கருத்தில் கொண்டே பயிற்சி வகுப்புகள் இவ்வாண்டு நடை பெறும் என்று கூறியிருக்கிறார். ஆகவே இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதத் தயாராக வேண்டியது அவசியமே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 தன்னம்பிக்கை
 தமிழக அரசு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற்றாலும், நீட் போன்ற போட்டித்தேர்வுக்கான தயாரிப்பு மாணவர்களின் பாடம் பற்றிய அறிவையும் புரிதலையும் நிச்சயம் அதிகப்படுத்தும். மக்களின் உயிக் காக்கும் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எப்போதும், எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும். தமிழக அரசு நீட் தேர்வில் விலக்கு பெற முடியவில்லை என்றாலும், போட்டித் தேர்வுக்கான முழுமையான தயாரிப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 நன்மைதான்
 தமிழகப் பள்ளிகளில் சிபிஎஸ்இ மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் படிப்பிற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க, மருத்துவப் படிப்பின் தரம் காக்க, "நீட்' நுழைவுத் தேர்வுதான் ஒரே வழி. ஒருவேளை, தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக்குத் தயாராவது கல்வித் திறனை மேம்படுத்தும். எனவே தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது அவர்களுக்கு நன்மையே பயக்கும்.
 கே. ராமநாதன், மதுரை.
 கடமை
 நீட் தேர்வை வைத்து இன்னமும் அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு குறித்த தேவையற்ற அச்சத்தைப் போக்கி அதனை எதிர்கொள்ள ஊக்கம் கொடுத்து மாணவர்களை தயார்படுத்துவதே மாநில அரசின் கடமையாகும். சிறப்பான பயிற்சி கிடைக்காததே தோல்விக்கான காரணம். அனைத்திற்குமே தேர்வு நடத்தப்படுவதை ஏற்கும் நாம் இதனையும் ஏற்க வேண்டும். தமிழக மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 உன்னத படிப்பு
 மருத்துவம் என்பது மனித உயிரை காப்பாற்றும் ஒரு உன்னதமான படிப்பு. ஆகவே மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கும்போது மதிப்பின் அடிப்படையில் முதலில் வரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரி, தனியார் கல்லூரி என்ற பாகுபாடின்றி அனைத்து இடங்களையும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ஒதுக்க வேண்டும். பணம் அதிகமாக கொடுத்து வாங்குவதும், விற்பதும் அப்போதுதான் தடுக்கப்படும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 பாதிப்பு வராது
 மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தால் நிச்சயம் நீட் தேர்வை எதிர் கொள்ள தங்களை தயார் செய்து கொள்வது அவசியம். நீட் தேர்வு நடக்கும் என்று திடீரென்று அறிவிக்கப்பட்டால் பய உணர்வு ஏற்பட்டு அவர்களால் தேர்வை சரிவர எழுத முடியாமல் போய் விடும். முன்கூட்டியே அவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதில் தவறே இல்லை. பிறகு தேர்வு ரத்தானால் கூட அதனால் பாதிப்பு வராதே. எனவே, தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 தாமதம் ஆகும்
 நீட் தேர்விற்கு நிச்சயம் தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும். மாநில அரசு ஆய்வுக் குழுதான் அமைத்துள்ளது. அதன் முடிவு தெரிந்து பின் அரசின் நடவடிக்கைகள் முடிவதற்குள், நீட் தேர்வு நடந்து முடிந்துவிடும். அரசின் முடிவு சட்டரீதியாக சரியானதா என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் முடிவதற்கு காலதாமதமாகும். தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதே சிறப்பு.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 ஐயமில்லை
 நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் கண்டிப்பாக தயாராக வேண்டும். இனிவரும் ஆண்டுகளில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு முயன்று வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. தற்போதைய சூழலில் கால அவகாசம் குறைவாக உள்ளதால் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் முயன்று படித்து இன்றைய நடைமுறையில் உள்ள நீட் தேர்வை எழுதி மருத்துவ படிப்பில் சேர்வது நல்லது.
 என். கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
 கானல் நீர்
 நீட் தேர்வு உச்சநீதிமன்ற உத்தரவின்படியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு அரசியல் சாயம் பூசுவது தவறான செயல். நீட் தேர்வை எப்பாடு பட்டேனும் ரத்து செய்துவிடுவோம் என தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது கானல் நீராகவே முடியும். எனவே, மாணவர்கள் நீட் தேர்வுக்காக தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
 மு. சம்சுகனி, திரேஸ்புரம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT