விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "அம்மா சிறு மருத்துவமனை ஊழியர்களை அயல் பணி (அவுட்சோர்சிங்) முறையில் நியமிக்க உத்தரவிட்டிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

13th Jan 2021 03:56 AM

ADVERTISEMENT

முற்றிலும் தவறு
 அம்மா சிறு மருத்துவமனை ஊழியர்களை அயல் பணி (அவுட் சோர்சிங்) முறையில் நியமிக்க உத்தரவிட்டிருப்பது முற்றிலும் தவறு. அரசு தானே செய்ய வேண்டிய வேலைவாய்ப்பு நடைமுறைகளை பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது சரியல்ல. தொழில் கல்வி பயின்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 நல்ல பயன்
 அம்மா சிறு மருத்துவமனை ஊழியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் கல்வித்தகுதி உள்ளவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிப்பதே முறையாகும். அதிக எண்ணிக்கையில் பணி வாய்ப்பு கிடைக்கும்போது அதை அரசுப் பணியாக வழங்குவதே வேலையற்ற இளைஞர்களுக்கு நல்ல பயன் தரும். அவுட் சோர்சிங் மூலம் வழங்கப்படும் வேலைகளில் முறைகேடுகளுக்கும் வாய்ப்புண்டு.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 வணிக நோக்கம்
 மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் இவ்வாறு நியமித்தால் அவர்களிடம் சேவை மனப்பான்மை இல்லாமல் போகும். அயல் பணி வழியில் வந்த மருத்துவருக்கோ செவிலியருக்கோ முழுமையான ஊதியம் கொடுக்கப்படாமல் ஒப்பந்தம் செய்பவர்களே முழுப்பலனையும் அனுபவிப்பர். மருத்துவப் பணியில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 மறு பரிசீலனை
 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இது போன்ற நடை முறை மிகவும் தவறானது ஆகும். இது நடைமுறைக்கு வந்தால் மற்ற துறைகளும் இதனையே பின்பற்றக்கூடும். கல்வி முடித்து அரசுப் பணிக்காகக் காத்திப்போரின் நிலை என்னாகும்? எனவே இதனை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 சிக்கல் இல்லை
 அவுட் சோர்சிங் பணியாளர்கள், ஒழுங்காகப் பணி செய்தால் தாங்கள் நிரந்தரமாக இருக்க முடியும் என்பதை அறிவார்கள். மேலும், இவர்கள் அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவதால் குறிப்பிட்ட ஊதியத்தை அவர்களுக்கு அளித்தால் போதும். ஓய்வூதியம், ஊதிய உயர்வு போன்ற நடைமுறை சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே அம்மா சிறு மருத்துவ மனைகளில் இவ்வாறு நியமனம் செய்யப்படுவதில் தவறில்லை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 நிதிச்சுமை குறையும்
 இதில் தவறு எதுவுமில்லை. இயற்கைப் பேரிடர், நோய்த்தொற்று முதலிய காரணங்களால் பெரிதும் பொருளாதார சிரமத்தில் இருக்கும் அரசாங்கத்தின் நிதிச் சுமையை இத்திட்டம் ஓரளவுக்குக் குறைக்கும். கடந்த ஆண்டு மிகவும் சரிந்துபோய்விட்ட பொருளாதாரத்தில் ஒரு சீரான நிலைமையை உருவாக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் தற்காலிகமான ஏற்பாடுதான் இது. பொருளாதாரம் சரியானால் எல்லாம் சரியாகும் என நம்புவோம்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 தவிர்க்க முடியாதது
 அம்மா சிறு மருத்துவமனை திட்டம், தமிழக அரசு திடீரென முடிவெடுத்து செயல்படுத்திய மக்கள் நலத் திட்டம். அதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்வது கால தாமதம் ஆகக்கூடும். எனவே, உடனடி பணி நியமனத்திற்கு அயல்பணி முறையில் ஊழியர்களை நியமனம் செய்வது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது. எனவே இந்த உத்தரவு சரியே.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 இடைத்தரகர் கூடாது
 இந்த ஊழியர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்க பல நாட்கள் ஆகும். அதற்குள் அவர்களின் பணி தேவை என்பதால் இந்த முறையை செயல்படுத்தியுள்ளது அரசு. அயல் பணி என்பதால், இதில் நடுவில் இடைத்தரகர்கள் நுழைந்து இடையூறு செய்யாமல் இருந்தால் இது சிறப்பாக நடைமுறைக்கு வரும். இது தற்காலிக உத்தரவுதான் என்பதால் இதை நடை முறை படுத்துவதில் எந்த சிக்கலும் வராது.
 உஷா முத்துராமன், மதுரை.
 சரியான நடைமுறை
 இது சரியான நடைமுறைதான். எந்தப் பணிக்கும் ஊழியர்களின் தகுதிதான் முக்கியம். அயல் பணிகளில் நியமிக்கப்படுபவர்களும் முறையான சுகாதாரப் பணி பயிற்சி பெற்றவர்கள்தானே! நாளடைவில் அவர்களின் பணி மூப்பு கணக்கிடப்பட்டு நிரந்தர ஊழியர்களாகும் வாய்ப்பு கூட உருவாகலாம். உடனடி மருத்து உதவி கிடைக்காமல் ஒதுக்கப்பட்டிருக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சேவை கிடைப்பது வரவேற்கத்தக்கது.
 கு. அருணாசலம், தென்காசி.
 கடமையுணர்ச்சி
 மருத்துவமனை என்பது மக்களின் உயிருடன் தொடர்புடையது. நிரந்தரப் பணியாளர்களுக்கே பொறுப்பு அதிகம். ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், தற்காலிக ஊழியர்கள் அல்லது அயல் பணி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. அவர்களிடம் மிகுந்த கடமையுணர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. எனவே, மருத்துவர்கள், செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதுதான் சரியானது.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 போராட்டங்கள்
 எல்லா ஊர்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பதால் அம்மா சிறு மருத்துவமனைகள் கூடுதல் மருத்துவமனைகள்தான். பல்கலைக்கழகங்களில் இது போன்று தொகுப்பு ஊதியத்தில் தனியார் மூலம் பணிக்கு வந்தவர்கள்தான் பின்னாட்களில் நிரந்தரம் கோரி போராட்டங்கள் நடத்தினர். அதில் வெற்றியும் பெற்றனர். எனவே, அம்மா சிறு மருத்துவமனை பணி நியமனம் சரிதான்.
 ஆர்.எஸ். மனோகரன், முடிச்சூர்.
 நிபந்தனை
 மருத்துவ ஊழியர்களை நிரந்தரஅடிப்படையில் நியமிப்பதுதான் சரியான முறையாகும். பிற பிரிவுகளில் இருந்து தேர்வு செய்தால் அந்த துறைகளுக்கு பணியாளர் பற்றாக்குறை ஏற்படும். அம்மா சிறு மருத்துவமனை ஊழியர்களை தற்காலிகமாக நியமனம் செய்து அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பின் அவர்களை பணி நிரந்தரம் செய்யலாம். நியமிக்கும் பொழுதே அவர்களுக்கு இந்த நிபந்தனையை சொல்லி நியமிக்க வேண்டும்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 அரசு சலுகைகள்
 அரசின் எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் ஒருவரை நிரந்தரமாகப் பணியமர்த்தினால் அவருக்குப் பல்வேறு அரசு சலுகைகள் வழங்க வேண்டியிருக்கும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு மருத்துவமனைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக அயல்பணி முறையில் மருத்துவர்களையும் ஊழியர்களையும் நியமித்து வருகின்றது. இப்போது தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்துகிறது. இதனால் அரசுக்கு செலவு குறையலாம்.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 யாருக்கும் தெரியாது
 அம்மா சிறு மருத்துவமனைகளை அரசு திறந்திருப்பது தேர்தலை மனதில் கொண்டுதான். அதனாலேயே அங்கு ஊழியர்களை அயல் பணி வழியில் நியமனம் செய்திருக்கிறது அரசு. அந்த மருத்துவமனைகள் எவ்வளவு காலம் செயல்படப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து வரும் அரசு வேறு கட்சியாக இருந்தால் இதைத் தொடர வாய்ப்பில்லை. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க இது உதவும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 மக்கள் சேவை
 ஊழியர்களை நியமிக்கும் போது அந்தந்த பணிகளுக்கு உரிய கல்வித் தகுதி உள்பட அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு அளிப்பதுதானே சிறப்பு. மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்ற அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 தாமதம்
 அம்மா சிறு மருத்துவமனைகள் உடனடியாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ள நிலையில், அரசாணைத் தேர்வுகள் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது தாமதத்திற்கு வழி வகுக்கும். நல்ல அனுபவமும் திறமையும் வாய்ந்த ஊழியர்களை அயல் பணி முறையில் நியமனம் செய்வது எளிதானது. அரசின் பணிச்சுமை குறைவதோடு எதிர்பார்க்கும் பலனையும் எளிதில் பெற இது வழிவகுக்கும். அரசின் உத்தரவு சரியானதே.
 கே. ராமநாதன், மதுரை.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT