விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சரியல்ல
 நீட் தேர்வு என்பது தனியார் பள்ளி மாணவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாதகமானது என்கிற நிலை இன்னமும் நீடிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வை நடத்துவதிலேயே பல்வேறு இடர்பாடுகள் இன்னும் நீடித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் முடிவு சரியானது அல்ல. கற்கும் எல்லா மாணவர்களும் நீட் தேர்வு எழுதத் தயாராக உள்ள சூழலில் வேண்டுமானால் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை செய்திடலாம்.
 பொன். கருணாநிதி, கோட்டூர்.
 கூடுதல் சலுகை
 "ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு' என்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் முடிவு மிகச் சரியான முடிவு. தவிர்க்க முடியாத காரணங்களால் முதல்முறை தேர்வைச் சரியாக எழுத முடியாமற்போனால் கூட, அவர்களுக்குக் கிடைக்கும் அடுத்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதம்! மேலும் இரண்டு தேர்வுகளில் எதில் கூடுதல் மதிப்பெண்களோ அதையே தங்கள் விருப்ப மதிப்பெண்களாக எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் கூடுதல் சலுகையாகச் சேர்த்திருப்பது இன்னமும் அருமை!.
 செ.முத்துசாமி,
 பாளையங்கோட்டை.
 தேவையில்லை
 ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்துவதே சரி. ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தத் தேவையில்லை. ஒருமுறை தேர்வு நடத்தவே பொருள், மனித நாட்கள், அரசுப் பணியாளர், இடத்தேர்வு, தேர்வு நடக்கும் பொழுது மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை, காவல்துறையின் ஒத்துழைப்பு, தேர்வுக்கு வருபவர்களை சோதனையிடல், இவ்வாறு பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தேர்வுத் தாள்களை முறைப்பட திருத்துவது, அதைச் சரிபார்க்கத் தகுந்த ஆசிரியர்களும் தேவை. இப்படிச் செயல்பாடுகளில் ஈடுபடும்போது பணச்செலவு இரட்டிப்பு ஆகும். இது தேவைதானா? இதையெல்லாம் அரசு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
 குரு. பழனிசாமி, கோயம்புத்தூர்.
 சரியானதே
 ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் முடிவு தேர்வர்களுக்கு மேலுமொரு சலுகை வாய்ப்பாகும். இதனால் பதற்றம் நீங்கி, வளர் இளம் பருவ போட்டியாளர்கள் இருபாலரும் தேர்வு எழுதுவார்கள். வெற்றி கிட்டாமல் போனாலும் சமாதானமடைவார்கள். எனவே மத்திய அரசின் முடிவு சரியானதே.
 மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.
 பெரும் சுமை
 "ஆண்டுக்கு இருமுறை நீட்தேர்வு' இது தேவையில்லாதது. மாணவர்களுக்கு இது பெரும் சுமை. ஆண்டுக்கு ஒருமுறை படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இருமுறை என்றால் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மகாகஷ்டம். தேவையில்லாதது இது என்னுடைய கருத்து.
 வண்ணை கணேசன், சென்னை.
 பயிற்சி
 ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு தவறானது, ஒரு முறை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதே சரி. நீட் தேர்வு பயிற்சி முழுமையாக அரசாங்க செலவில் நடத்தப்பட வேண்டும், இல்லையேல் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவு எட்டாக்கனியாகி விடும். அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும்.
 பெ.அருண்செல்வன், ராமநத்தம்.
 ஆசிரியர் பற்றாக்குறை
 ஆண்டுக்கு இருமுறை நீட்தேர்வு நடத்துவதன் மூலம், மதிப்பெண்கள் பட்டியலில், கூட்டலில் தவறு செய்ய நேரிடும். ஒருமுறை விடைத்தாள் திருத்துவதற்கே ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அல்லல்பட வேண்டிய நிலை உள்ளது.
 எஸ்.பூவேந்த அரசு,
 சின்னதாராபுரம்.
 காத்திருக்க வேண்டுமே!
 ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்துவதுதான் சரியாக இருக்கும். நீட் தேர்வில் தேர்ச்சியடைத்தவர்களை உடனே மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதுடன் இந்த ஆண்டு வேலையை முடிப்பதுதான் சுலபமாக இருக்கும். இரண்டாவது முறையாக பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்றவர்களை காத்திருப்பில் வைத்திருந்து, அடுத்த ஆண்டு இவர்களுக்கு முதலிடம் கொடுத்து, இவர்களுக்குப் போக மீதி இருக்கைகளுக்கு நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) நடத்த வேண்டியது சற்று சிரமமாக இருக்கும்.
 மா.தங்கமாரியப்பன்,
 கோவில்பட்டி.
 வரப்பிரசாதம்
 ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு சரியே. இம்முறையால் தேர்வர்களின் மன உளைச்சல் நிச்சயம் குறையும். ஒருமுறை சரியாக எழுதவில்லை என்றாலும் அடுத்த முறை நன்கு உழைத்து நல்ல மதிப்பெண் எடுத்து விடலாம்.இருமுறை எழுதினாலும் கூடுதலாக எடுத்த மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுவது கூடுதல் சிறப்பு. வெவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வோரால் இந்த "இருமுறை நீட் தேர்வு முறை' ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படும் என்பது உறுதி.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 மன உளைச்சல்
 நீட் தேர்வே வேண்டாம் என்பதுதான் மாணவர்களின் விருப்பம். அதுவும் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்தினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை இத்தேர்வை நடத்தினாலே போதும். அப்போதுதான் கண்டிப்பாக மருத்துவம் பயில வேண்டும்; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும். ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு சரியல்ல; சரியல்ல.
 அ.கண்ணன்,
 திருவண்ணாமலை.
 வேண்டாமே
 ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வை நடத்துவது பிரச்னையாக இருக்கும்போது, இரு முறை நடத்துவது தேவைதானா என பலமுறை யோசிக்க வேண்டும்.மேல் நிலைக் கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதது மாணவர்களிடை சோர்வை எற்படுத்துகிறது. தேர்ச்சி பெற்றவர்களிலும் வட மாநிலத்தவர்களே அதிகமாக உள்ளனர். பெண்களிடையே அதிக கெடுபிடியும் காட்டப்படுகிறது. தாலிச் சங்கிலியைக் கூட வாங்கி வைத்துக் கொள்கின்றனர். நீட் தேர்வு மையத்தை வேறு மாநிலங்களில் அமைத்தால் நமது மாணவர்கள் செல்வது எப்படி? அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, அரசு அடுத்து என்ன என்று யோசிக்க முயற்சிக்க வேண்டும். வசதியற்றவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு, மேற்படிப்புக்கான வாய்ப்பு சமநிலையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
 எஸ்.வேணுகோபால், வேளச்சேரி.
 வாய்ப்பு
 ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு சரியே. மாணவர்கள் ஒருமுறை சரியாக எழுத வாய்ப்பு இல்லாதவர்கள் இப்போது ஓர் ஆண்டு காத்திருக்கும் நிலை உள்ளது. உடல் நலமின்மையால் சிலர் தேர்வு எழுதவில்லையெனில் அவர்களுக்கு புதிய அறிவிப்பு பயன்படும். மேலும் ஒருமுறை எழுதிய தேர்தலில் அவர்கள் எதிர்நோக்கிய மதிப்பெண் கிடைக்காத போது மறுமுறை எழுதி அதிக மதிப்பெண் பெறலாம்.
 தி.ரெ.ராசேந்திரன்,
 திருநாகேஸ்வரம்.
 போட்டி
 ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது மிகச்சரியே! ஒரு வருட படிப்பை ஒரே நாளில் தீர்மானிப்பது, பலருக்கும் பின்னடைவாகவே இருக்கிறது. சிறந்ததில் எது என்ற தேர்வு முறை, மற்றவர்களோடு ஒப்பிடாமல், தன்னோடு தானே போட்டி போட்டு படிக்கும் ஆரோக்கிய நிலையை ஏற்படுத்தும். இது வரவேற்கத்தக்கதே!
 ஆர். அஸ்வின்குமார்,
 கோயம்புத்தூர்.
 முயற்சி
 ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு சரியானது தான். ஏனெனில் நன்கு படிக்கும் ஒரு மாணவன் 1/2 மதிப்பெண் அல்லது 1 மதிப்பெண் மூலம் வாய்ப்பைத் தவற விடும் பொழுது 6 மாத காலத்திற்குள் மீண்டும் அவனது முயற்சி வெற்றி அடையும். அம்மாணவருக்கு கால விரயம் ஏற்படாது. எனவே வருடத்திற்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் முடிவு சரியானது தான் என்பதே எனது கருத்து.
 ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT