விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்பட வேண்டும் என்கிற யோசனை ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 ஏற்புடையதே
 தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்பட வேண்டும் என்கிற யோசனை ஏற்புடையதே. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் இருப்பதுபோல மாநிலத்திற்கு சட்டப்பேரவை, சட்ட மேலவை என இரு அவைகள் இருப்பது அவசியம். கல்வி, கலை, விளையாட்டு, சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் திறமைகளை அரசு பயன்படுத்திக்கொள்ள மேலவை ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
 எஸ். பூவேந்த அரசு, சின்ன தாராபுரம்.
 வழிகாட்டி
 முற்காலத்தில் வசதியானவர்கள் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்கள். பின்னர் சாமானிய மக்களும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்கள். ஆனாலும், தேசத்தின் வளர்ச்சிக்கோ, மக்கள் நல மேம்பாட்டுக்கோ பாடுபடுபவர்கள் எண்ணிக்கை சட்டப்பேரவையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், அரசியல் சாராத பல்துறை வித்தகர்கள் கொண்ட அவையாக சட்ட மேலவையை அமைக்கலாம். இவர்கள் அரசுக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள்.
 கோதை மாறன், திருநெல்வேலி.
 சவால்
 இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் நிலைமை சீரடையவில்லை. மேலும், தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்குவதே அரசுக்கு பெரம் சவாலாக உள்ளது. மதுக்கடைகளால் வரும் வருமானம் போதாததால்தான் அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர எண்ணுகிறது. இந்த சிக்கலான சூழலில் சட்ட மேலவையைக் கொண்டுவருவது தேவையற்றது.
 த. நாகராஜன், சிவகாசி.
 பாதிப்பு
 தமிழகத்தில் சட்ட மேலவை கலைக்கப்பட்டதால் மக்களுக்கோ, அரசுக்கோ இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போதும் மேலவையைக் கொண்டுவருவதற்கான எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது கட்சி பிரமுகர்களுக்கு ஆளுங்கட்சி பதவி தருவதற்கு மட்டுமே மேலவை பயன்படும். தேவையின்றி மக்களின் வரிப்பணமும் செலவாகும்.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 குழப்பம்
 இந்த யோசனை ஏற்புடையதல்ல. சட்ட மேலவையை அமைப்பதற்கு ஆகக்கூடிய செலவில் எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நிகரான அதிகாரமோ ஆற்றலோ சட்ட மேலவைக்கு கிடையாது. இதனால் வீண் குழப்பங்களே உருவாகும். அறிஞர்களையும், கலைஞர்களையும் அரசு கௌரவிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதற்காக சட்ட மேலவை தேவையில்லை.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 பதவிப்பசி
 சட்ட மேலவை கீழவையில் இயற்றப்பட்ட சட்டங்களை விவாதித்து ஒப்புதல் அளிக்கும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கீழவையின் முடிவே இறுதியானது. அன்றைய காலகட்டத்திலேயே உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் அரசியல் சார்பு தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இன்றைய சூழ்நிலையில் அரசியல் சார்பு மேலும் அதிகரிக்கும். சபையில் நடுநிலையான விவாதங்கள் குறையும். சட்ட மேலவையை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளின் பதவிப்பசியை தீர்க்கவே உதவும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 பலன் கிட்டாது
 சட்ட மேலவையால் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு பதவி கிடைக்கலாமே தவிர பெரிய பலன் ஒன்றும் நாட்டு மக்களுக்குக் கிட்டப்போவதில்லை. நான் வாக்களிக்க தொடங்கிய காலந்தொடங்கி இன்றுவரை சட்ட மேலவை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஆண்ட அரசுகள் மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் சரியாக செய்துள்ளதாகவே எண்ணுகிறேன். எனவே சட்ட மேலவை அமைத்தால் மாநிலத்திற்குப் பலன் ஏற்படப் போவதில்லை.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 நல்ல வாய்ப்பு
 இந்த யோசனை ஏற்புடையது. மேலவை உறுப்பினர்களில் உள்ளாட்சி அமைப்பிலிருந்து ஒரு பகுதியினரும், பட்டதாரிகளிலிருந்து ஒரு பகுதியினரும், ஆசிரியர் குழுவிலிருந்து ஒரு பகுதியினரும் சமூக, இலக்கிய ஆர்வலர்களிலிருந்து ஒரு பகுதியினரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெறுவார்கள். நேரடியாக அரசியலில் ஈடுபட விருப்பமில்லாதவர்களுக்கு இந்த அவை நல்ல வாய்ப்பைத் தரும். எனவே, சட்ட மேலவை கொண்டு வரலாம்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 அதிகாரப் பரவல்
 மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஓட்டு போடும் உரிமை ஏதாவது ஒரு பட்டம், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்றவர்களுக்கு மட்டுமே இருந்தது. இனியும் அப்படித்தான் இருக்கும். ஆகவே மேலவை உறுப்பினர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். மேலவை கொண்டு வரப்பட்டால் அதிகாரக் குவியல் நீக்கப்பட்டு அதிகாரம் பரவலாக்கப்படும். ஆகவே தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதே.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 பணநாயகம்
 கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சட்ட மேலவை இல்லாததால் தமிழகம் எந்தெந்த வகையில் எந்தெந்த துறைகளில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது? இன்றைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பெரும் பணக்காரர்கள். ஜனநாயகம் என்கிற பெயரில் பணநாயகம் செய்யும் ஆட்சிதான் நாம் காணும் காட்சி. சட்டப்பேரவைத் தொடரின் எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டு மக்கள் நன்மைக்குப் பாடுபட்டால் போதும். சட்ட மேலவை தேவையில்லை.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 இரு அவைகள்
 இந்திய ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தை அடுத்து மாநிலங்கள் அவை என்ற ராஜ்ய சபா இருந்து வருகிறது. அது போலவே மாநில அளவில் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை இருப்பதில் தவறில்லை. சட்டப்பேரவையால் இயற்றப்படும் சட்டங்கள் மக்கள் நலனுக்கு ஏற்புடையவையா இல்லையா என்பதை சட்ட மேலவை விவாதிக்கும். இதனால் மக்கள் நலனுக்கு ஏதிரான சட்டங்கள் இயற்றப்படாத நிலை உருவாகும்.
 எஸ்.எம். ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 நியாயமல்ல
 தற்போது தமிழக அரசு, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், சட்ட மேலவையைக் கொண்டு வருவது நியாயமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களால் தீர்க்க முடியாத பிரச்னைகளை நியமன உறுப்பினர்களான மேலவை உறுப்பினர்கள் எப்படித் தீர்ப்பார்கள்? மேலவை அமைந்தால் தகுதியற்றவர்களுக்குப் பதவி கிடைக்கலாம். மக்களின் வரிப்பணம் வீணாகும்.
 கே. ராமநாதன், மதுரை.
 மறுபரிசீலனை
 தமிழகத்தில் சட்ட மேலவை அவசியம் அமைக்கப்பட வேண்டும். ஆட்சி மன்றம் என்பது அறிஞர் கூடிய அவையாக இருக்க வேண்டும். சட்ட மேலவை என்பது ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் அடைக்கலம் தேடும் இடமாக ஆகி விடாமல் அறிஞர்கள் நிறைந்த அவையாக அமைத்திடல் வேண்டும். தற்போது உள்ள ஒதுக்கீடுகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆசிரியர் தொகுதி, பட்டதாரி தொகுதி இவற்றை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
 ப. நரசிம்மன், தருமபுரி.
 வரவேற்புக்குரியது
 தமிழகத்தில் மீண்டும் மேலவையை ஏற்படுத்த வேண்டும் என்கிற யோசனை வரவேற்புக்குரியது. இதில் நல்ல கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள் நியமனம் பெறவும், பட்டதாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆட்சியாளர்கள் இவர்களின் கருத்தை கேட்டு திட்டங்களை செம்மைப் படுத்தி செயல் வடிவம் கொடுத்தால் நாட்டு மக்களுக்கு நன்மை கிட்டும்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 வாக்குவாதம்
 சட்டப்பேரவையில் தற்போது விவாதங்களுக்குப் பதிலாக வாக்குவாதங்கள்தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன. சட்ட முன் வடிவுகளுக்கோ, சட்டத் திருத்தங்களுக்கோ தற்போதெல்லாம் நீண்ட விவாதங்கள் நடத்தப்படுவதில்லை. அரசால் அமைக்கப்படும் குழுவின் அறிக்கைகள் சட்டப்பேரவைகளில் தாக்கல் செய்யப்படுவதில்லை, தாக்கல் செய்யப்பட்டாலும் விவாதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், சட்ட மேலவை தற்போது தேவையில்லை.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 வீண் செலவு
 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு பதவி தருவதற்கே மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வர ஆளுங்கட்சியினர் முயல்கின்றனர். மேலும், தமிழக அரசு பல லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது மேலும் பல கோடி ரூபாய் வீண் செலவுகளை ஏற்படுத்தும். எனவே, சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது மக்களிடம் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும்.
 கோ. அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT