விவாதமேடை

"குற்றப் பின்னணி உள்ளவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிகளின் சின்னத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

4th Aug 2021 04:10 AM

ADVERTISEMENT

 சரியல்ல
 குற்றப் பின்னணி உள்ளவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிகளின் சின்னத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கருத்து சரியல்ல. அதற்குப் பதிலாக, வேட்பாளர் குற்றப் பின்னணி உடையவராக இருந்தால் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குத் தரப்பட வேண்டும். ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட இயலாது. அவர்கள் போட்டியிட்டாலும், வாக்காளர்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 சவால்
 தற்போது குற்றப் பின்னணி உடைய பலர் தேர்தலில் வென்று மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். இது ஜனநாயகத்துக்கு பெரிய சவாலாகும். அரசியல் கட்சிகள் ஒருவரை வேட்பாளராகத் தேர்வு செய்வதற்கு முன்பு அவர் குற்றப் பின்னணி இல்லாதவர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பணக்கார்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு என்ற நிலை மாறி, நேர்மையானவர்கள் வேட்பாளராகும் வாய்ப்பு உருவாகும்.
 கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
 அவசியம்
 குற்றப் பின்னணி உள்ளவரை வேட்பாளராக நிறுத்தும் அரசியல் கட்சிகளின் சின்னத்தைத் தடை செய்ய வேண்டியது அவசியம். குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றால், தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறிக்கொள்வார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று மக்கள் எண்ணும் நிலை ஏற்படுவது நல்லதல்ல. எல்லாக் கட்சிகளிலும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் பெருகி விடுவார்கள்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 ஜனநாயக விரோதம்
 ஒருவர், குற்றப் பின்னணி உடையவரை அரசியல் கட்சி வேட்பாளராக அறிவிப்பதும், அதனை தேர்தல் ஆணையம் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்வதும் ஜனநாயக விரோத செயல்கள். குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சித் தலைமை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். நீக்காவிடில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நீக்கும்படி செய்ய வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் சுயேச்சையாகவும் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
 டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.
 மக்கள் சேவை
 குற்றப்பின்னணி உள்ளவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிகளின் சின்னத்தைத் தடை செய்வதை விட, அக்கட்சியையே தடை செய்ய வேண்டும். அப்போதுதான், குற்றப் பின்னணி இல்லாத நபரை வேட்பாளராக கட்சிகள் நிறுத்தும். வாக்காளர்களுக்கும் நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். வேட்பாளருக்கு வயதை நிர்ணயம் செய்துள்ள தேர்தல் ஆணையம் குற்றப் பின்னணி கூடாது என்பதையும் தகுதியாக நிர்ணயிக்கவேண்டும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 சட்டச் சிக்கல்
 குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் விஷயத்தில் தேர்தல் ஆணையம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது. எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களும் அதை முக்கிய குற்றச்சாட்டாக முன்வைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் இத்தகைய வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளின் சின்னத்தை தடை செய்ய வேண்டும் என்ற விதியை தேர்தல் ஆணையம் விதிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதில் சட்ட சிக்கல்கள் எழும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 கடமை
 அரசுப் பணிக்கு குற்றப் பின்னணி நபர் தேர்வு செய்யப்படுவதில்லை. அதே போன்று ஒருவர் குற்றப் பின்னணி இல்லாதவர் என்று தெரிந்தபின், அவரை வேட்பாளராக நிறுத்துவது அரசியல் கட்சியின் கடமை. அப்படி செய்யாத அரசியல் கட்சியின் சின்னத்தைத் தடை செய்யலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை. குற்றப் பின்னணி உள்ள ஒருவருக்குப் பதவி கிடைத்தால் அவர் மேலும் மேலும் குற்றங்களையே செய்வார்.
 கவிதா தாமரைச்செல்வன், பெருந்துறை.
 புதுச்சின்னம்
 அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரச் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால் மக்களின் மனதில் அவர்கள் விரும்பும் கட்சியின் சின்னம்அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. அச்சின்னத்துக்கு வாக்களிக்கும் எண்ணம் இயல்பாக ஏற்படுகிறது. கட்சிக் கொள்கைகளையோ வேட்பாளர் தகுதிகளையோ அவர்கள் பார்ப்பது கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் தோறும் புதுச்சின்னம் ஒதுக்கும் வழிமுறையை கடைப்பிடித்தால் தான் ஜனநாயகம் செழிக்கும்.
 மல்லிகாஅன்பழகன், சென்னை.
 தண்டனை
 தெரியாமல் தவறு செய்தவரை மன்னிக்கலாம். ஆனால் தெரிந்தே தவறு செய்தவரை தண்டிக்கத்தான் வேண்டும். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களின் விவரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவிக்கின்றது. ஒரு கட்சியின் வேட்பாளர் குற்றப் பின்னணி உடையவர் என்றால் அக்கட்சியில் வேறு நல்லவர்களே இல்லையா? குற்றப் பின்னணி உள்ளவரை வேட்பாளராகத் தேர்வு செய்யும் கட்சிகளின் சின்னத்தைத் தடை செய்வது நல்ல முடிவு.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 நியாயமல்ல
 சின்னத்தைப்பார்த்து வாக்களிக்கக்கூடிய
 வர்கள் நம்நாட்டில் அதிகம் பேர் இருக்கிறார்கள். சின்னத்தைத் தடைசெய்தால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் குழம்பிப் போகும்படியான சூழல் ஏற்படும். அதனால் வாக்கு சதவிகிதம் குறையும். அவ்வாறு நிகழ்வது ஜனநாயகத்திற்கு பாதகமான விளைவை ஏற்படுத்திவிடும். வேட்பாளர் குற்றவாளி என்பதற்காக ஒட்டுமொத்த வாக்காளர்களையும் குழப்பமடையச் செய்வது நியாயமல்ல.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 நம்பிக்கை
 குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்குவது தவறு. அப்படி வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் அந்த கட்சியின் சின்னத்தைத் தடை செய்யலாம். இதனால், குற்றப் பின்னணி இல்லாதவர்களே வேட்பாளர்களாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். அது அந்தக் கட்சிக்கு சாதகமாகவே அமையும். குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளராக அறிவிக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 புறக்கணிப்பு
 வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறினாலும் பெரும்பாலான வேட்பாளர்கள் அதனைப் புறக்கணிக்கின்றனர். ஒரு சில கட்சிகள் பெரும்பாலும் குற்றப் பின்னணி உடையவர்களுக்கே வாய்ப்பு வழங்குகிறது. ஏனெனில், அவர்களிடம்தான் பணம் உள்ளது. நல்லவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாத கட்சிகளின் சின்னத்தைத் தடை செய்யலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 வாய்ப்பு
 அரசியல் கட்சிகள், குற்றப் பின்னணி உள்ளவரை வேட்பாளராக்குவது, மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று, அவரை வெற்றி பெறச்செய்து, மீண்டும் அவர் குற்றங்களை பயமின்றி செய்வதற்கு வாய்ப்பளிக்கும் செயலாகும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி சில மாநிலக் கட்சிகள் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு இடம் கொடுத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கட்சிகளின் சின்னத்தைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, இக்கருத்து சரியே.
 கே. ராமநாதன், மதுரை.
 கேள்விக்குறி
 நாட்டுக்குத் தேவையான எல்லாச் சட்டத் திருத்தங்களையும் கொண்டு வரும் தகுதி படைத்த இரு அவைகளிலும் இன்றைக்கு இடம் பெற்றிருக்கும் எல்லாக் கட்சிகளிலும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது குற்றப் பின்னணி உள்ளவரை நிறுத்தும் கட்சிகளின் சின்னங்களைத் தடைசெய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவார்களா என்பது கேள்விக்குறியே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 தவறான பாதை
 மறைந்த தலைவர்களின் பெருமையைப் பேசும் அரசியல் கட்சிகள் அவர்கள் காட்டிய வழியில் செயல்படாமல் தவறான பாதையில் பயணிக்கின்றன. குற்றம் புரிந்து தண்டனை பெற்றவர்கள் தியாகிகளாக சித்திரிக்கப்படும் அவல நிலை மாற வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கும் கட்சியின் சின்னம் தடை செய்யப்பட வேண்டும். கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 ப. நரசிம்மன், தருமபுரி.
 வரவேற்கத்தக்கது
 குற்றப்பின்னணி உள்ளவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிகளின் சின்னத்தை தடை செய்ய வேண்டும் என்கிற கருத்து வரவேற்கத்தக்கது. குற்றப்பின்னணி உள்ளவர்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகள் ஆகிவிடுகிறார்கள். கட்சியின் சின்னத்துக்குத் தடை ஏற்படக்கூடிய நிலை வந்தால், எந்த அரசியல் கட்சியும் குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்தாது.
 மா.பழனி, கூத்தப்பாடி.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT