விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் பிளஸ் 2 பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 சரியல்ல
 கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் பிளஸ் 2 பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியல்ல. கோவிட் 19 நோய்த்தொற்று காலத்திலும் தமிழகத்தில் கோடிக்கணக்கானோர் வாக்களித்திருக்கும் போது சில லட்சங்களே இருக்கும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத முடியாதா என்ன? அரசு விதிமுறைகளைக் கடைப்பிடித்து குறிப்பிட்ட நாட்களில் தேர்வுகளை நடத்தி முடிக்க கல்வித்துறை முன்வர வேண்டும்.
 உதயம் ராம், சென்னை.
 கூடவே கூடாது
 பிளஸ் 2 தேர்வை இம்முறை தள்ளி வைப்பதோ ரத்து செய்வதோ கூடவே கூடாது. கரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம். கல்வி கற்பதும் கற்பிப்பதும் மீண்டும் மீண்டும் ஒத்தி வைப்பது இனி தேவை இல்லை. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கமான கல்விப் பணிகள் தொடர வேண்டும் என்பதே மாணவர், பெற்றோர் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
 கு. அருணாசலம், தென்காசி.
 சாத்தியமல்ல
 இக்கோரிக்கை சரியானதே. அனைவருக்கும் தடுப்பூசி போடும் நிலை இன்னும் வரவில்லை. கரோனா தீநுண்மி கடந்த முறையைவிட வேகமாகப் பரவுவதால், வரும் வாரங்கள் நெருக்கடியானவை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கிடையே கரோனா பரவினால் அதனைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல.தேர்வை விட மாணவர்களது உடல் நலனும், உயிரும் மிக மிக முக்கியம்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 பாதுகாப்பு நடவடிக்கை
 பிளஸ் 2 தேர்வை தள்ளி வைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வு நடக்குமிடத்தில் அறைக்கு பத்து மாணவர்கள் வீதம் மட்டுமே அமர வைக்க வேண்டும். தேர்வு அறைகளின் எண்ணிக்கையை அதிகரித்து அனைத்து நிலை ஆசிரியர்களையும் தேர்வுப் பணியில் ஈடுபடச் செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு தேர்வை குறித்த காலத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 இணைய வழி தேர்வு
 இணைய வழியிலேயே தேர்வுகளை நடத்த முயற்சிக்கலாம். கரோனா தீநுண்மிப் பரவாமல் தடுப்பதற்கு முக கவசம், கையுறை போன்றவற்றைப் பயன்படுத்தி, இருக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு மாணவர்களை அமரச்செய்து பாதுகாப்பான முறையில் தேர்வை நடத்துவதே சிறந்தது. அப்பொழுதுதான் மாணவ மாணவியரால் மேற்படிப்பிற்கு தங்களை தைரியமாக தயார்படுத்திக் கொள்ள முடியும்.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 உயிர்தான் முக்கியம்
 பிளஸ் 2 பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் சரியானது. தேர்வைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். உயிருடன் இருந்தால் எந்த வயதிலும் படிக்கலாம். அதுவும் இப்பொழுது கரோனா தொற்று முன்பைவிட மிகவும் அதிகமாகப் பரவி வருவதாகத் தெரிகிறது. அதனால் பிளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளி வைப்பதுதான் எல்லோருக்கும் மிகவும் நல்லது.
 உஷா முத்துராமன், மதுரை.
 அடித்தளம்
 பிளஸ் 2 தேர்வு என்பது மாணவர்களின் அடுத்த கட்ட படிப்புக்கான அடித்தளம் ஆகும். தேர்வை தள்ளித் தள்ளி வைத்தாலும் தேர்வே வேண்டாமென்று ரத்து செய்தாலும் மாணவர்களின் நலன்தான் பாதிக்கப்படும். அறைக்கு பத்திலிருந்து பதினைந்து பேர் என்ற அளவில் அமர வைக்கலாம். இணைய வழியிலும் குறிப்பிட்ட தேதியில் தேர்வு நடத்தலாம். தேர்வைத் தள்ளி வைத்தால் அதுவே மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாக மாறிவிடும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 புரியாத புதிர்
 பிளஸ் 2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் சரியே. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு பல தடைகளைக் கடந்துதான் வரவேண்டியுள்ளது. கரோனா தீநுண்மி எங்கிருந்து எப்படிப் பற்றுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. பிரபலமாக இருக்கும் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தகவல் வந்து கொண்டிருக்கும் வேளையில் மாணவர்களைக் காப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 உயர்கல்விக்கு அடிப்படை
 பொதுத்தேர்வு நடக்கும் என்கிற நம்பிக்கையில்தான் ஆசிரியர்களும் மாணவர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்கள் சோர்வடைந்து விடுவர். பிளஸ் 2 பொதுத்தேர்வு அனைத்து உயர்கல்வி நுழைவுக்கும் அடிப்படை என்பதால் உயர்படிப்பு சேர்க்கையும் தாமதமாகும். தேர்வு மையங்களை அதிகரித்து உரிய காலத்தில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவிப்பது மாணவ சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 எதிர்காலம்
 கரோனா தீநுண்மிப் பரவத்தொடங்கியது முதலே அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வலியுறுத்தி வருகிறது. ஆனால், பொதுமக்கள் அவற்றை சிறிதும் கவனத்தில் கொள்வதில்லை. அதனால், தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவை. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்வை நடத்துவதே சிறந்தது.
 பா. சங்கரன், வேலூர்.
 உண்மைதான்
 கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியிருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக பிளஸ் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வு எழுதும் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கூட பணியாளர்களும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றினால் போதும். நிச்சயமாக அவர்கள் நோய்த்தொற்று பாதிப்பு வராமல் தங்களை காத்துக்கொள்ளலாம்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 உயர்நிலைக் கல்வி
 பள்ளி மாணவர்கள் மூலம் கரோனா பரவல் அதிகரித்தபோது, 9,10,11 வகுப்புகளை மூடிவிட அரசு உத்தரவிட்டது. பிளஸ் 2 தேர்வு, மாணவர்களின் உயர்நிலை கல்விக்கான தேர்வு. தேர்வை நடத்தாவிட்டால், ஆசிரியர்கள் இத்தனை நாள் பாடம் நடத்தியது வீணாகப் போய்விடும். பள்ளி நிர்வாகம் பொறுப்புடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிளஸ் 2 தேர்வை நடத்தி, மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 குழப்பம்
 தேர்வு முறையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் மாணவர்கள் குழப்பம் அடைவதுடன் தன்னம்பிக்கையையும் இழந்து விடுவர். கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது பொதுத்தேர்தலையே நடத்திவிட்டபிறகு பள்ளித் தேர்வுகளை ஏன் தள்ளிவைக்கவேண்டும்? பாடத்திட்டத்தை வேண்டுமானால் குறைக்கலாம். எது எப்படியிருந்தாலும் திட்டமிட்டபடி தேர்வு நடத்துவதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 கேள்விக்குறி
 நோயின் தாக்கம் மீண்டும் அதிகமாகி வருவது மாணவர்களின் எதிர்காலக் கல்வியைக் கேள்விக்குறியாக்கி விட்டது. கல்லூரி மேற்படிப்பிற்கான தகுதியை நிர்ணயிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வினைத் தள்ளி வைக்கும் செயல், தேர்வுக்காக அரும்பாடுபட்டு தம்மைத் தயார்படுத்தி வரும் மாணவர்களை சோர்வடையச் செய்துவிடும். குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்வுகளை நடத்துவதே சிறந்தது.
 கே. ராமநாதன், மதுரை.
 விளையாடலாமா?
 இக்கோரிக்கை சரியானதே. சமீபத்தில் பல பள்ளிகளிலும் தொற்று பரவியுள்ள நிலையில் தேர்வை நடத்தி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடலாமா? இந்த மாதம் முழுதும் புதிய வேகத்தில் பரவி மாத இறுதியில் தொற்று குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்காகப் பொறுத்திருந்த அரசு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டியது மிகமிக அவசியம்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 காலத்தின் அருமை
 கரோனா தீநுண்மியின் தாக்கம் எப்போது குறையும் என்பது யாருக்கும் தெரியவில்லை. அரசு அறிவித்துள்ளபடி பிளஸ் 2 தேர்வை நடத்துவது சிறப்புக்குரியது. மாணவர்களும் ஆசிரியர்களும் முக கவசம், சமூக இடைவெளி இவற்றை பின்பற்ற வேண்டும். தேர்வு தள்ளி போனால் அதன் முடிவுகளும் தள்ளிப்போகும். இதனால் மாணவர்கள் கல்லூரியில் சேர்வது தடைபடும். காலத்தின் அருமையை கருதி தேர்வை நடத்துவதே உத்தமம்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

SCROLL FOR NEXT