விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற யோசனை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

தேவையில்லை
 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற யோசனை சரியல்ல. சமூகப் பணிக்கு உச்சபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கத் தேவையில்லை. உடல் ஆரோக்கியமும், சேவை மனப்பான்மையும் இருக்கும் எந்த வயதினரும் வேட்பாளராக நிறுத்தப்படலாம். தேர்தல் ஆணையம் வேட்பாளரின் உடல் தகுதிக்கான மருத்துவ சான்றை கட்டாயமாக்கலாம். வேட்பாளர்களுக்கு வயது வரம்பு இல்லாத நிலையே தொடரட்டும்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 மக்கள் பணி
 மனிதர்கள் நாற்பது வயதுவரை சுறுசுறுப்பாகப் பணியாற்றும் உடல்நலத்தோடு இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் அறுபது வயதுவரை தளர்ச்சியில்லாமல் பணியாற்றும் நிலையில் இருப்பார்கள். அறுபது வயதுக்கு மேல் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வும் சலிப்பும் ஏற்படும். மக்கள் பணியாற்றுபவர்களுக்கு உடல் நலனும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, வேட்பாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு அறுபது என நிர்ணயிக்கலாம்.
 த. நாகராஜன், சிவகாசி.
 சோர்வு
 சில தொகுதிகளில் குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அவர் முதுமை அடைந்தாலும் கூட அவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவதால் அந்தக் கட்சியிலுள்ள இளைஞர்களே தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் சோர்ந்து விடுகின்றனர். வாக்காளர்களுக்கு வயது வரையறை இருப்பதுபோல ஒருவர் எந்த வயது வரை தேர்தலில் போட்டியிடலாம் என்கிற வரைமுறையையும் உருவாக்கினால் இளைஞர்களிடையே அரசியல் ஆர்வம் உண்டாகும்.
 மா. பழனி, தருமபுரி.
 அத்தியாவசியம்
 மக்களுக்காக செயல்படுவதற்கு அனுபவம், ஆற்றல், உடல் நலம் இவை யாவும் அத்தியாவசியமானவை. ஆனாலும், ஒருவர் 60 வயதுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். காரணம், உடல் அளவில் சோர்வு, தன் கருத்துக்கு மதிப்பில்லை என்ற தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் அவரின் செயல்திறன் குறைந்து விடும். அரசு பணிக்கு வயது வரம்பு இருக்கும்போது அரசியல் பணிக்கும் இருக்கலாமே.
 உதயம் ராம், சென்னை.
 முன்மாதிரி
 அரசுப் பணியில் நேர்மையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிலர் பின்னர் அரசியல் கட்சிகளில் சேர்ந்தோ தனித்தோ தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்படும்போது இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும். தேர்தலில் அவர்கள் வெற்றி அடையாவிட்டாலும் தேர்தலை கண்ணியமாக எதிர்கொள்வார்கள். அவர்கள் அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாகவும் இருப்பார்கள். எனவே, வேட்பாளருக்கு வயது வரம்பு கூடாது.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 இயலாத செயல்
 இந்த யோசனை சரியே. மக்களோடு மக்களாகக் கலந்து, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றும் துடிப்பான படித்த இளைஞர்களை களமிறங்கினால்தான் நாளை நல்ல சமுதாயம் உருவாகும். வயது முதிர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அடிக்கடி தொகுதிக்கு சென்று மக்களை சந்திப்பது இயலாத செயல். மூத்த அரசியல்வாதிகள் இதனைப் புரிந்துகொண்டு, தங்கள் அனுபவங்களை இளைஞர்களுக்கு ஆலோசனையாகச் சொல்லி அவர்களை வழி நடத்த வேண்டும்.
 ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
 பக்குவம்
 வேட்பாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கத் தேவையில்லை. இளமையில் மனிதர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால், முதுமையில்தான் ஒரு மனிதனுக்கு மனதளவில் பக்குவம் ஏற்படுகிறது. அவனுடைய கடந்த கால அனுபவங்கள் அவனுக்கு மக்கள் பணியில் கைகொடுக்கும். உடல்நலம் ஒத்துழைக்கும்வரை ஒருவர் மக்கள் பணியில் ஈடுபடலாம். தேவைப்பட்டால் இளைஞர்களை உதவியாளர்களாக வைத்துக் கொள்ளலாம். எந்தத் துறையிலும் வயது ஒரு தடையில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 என்ன பயன்?
 குறிப்பிட்ட வயதிற்கு மேல் நினைவாற்றல், சிந்தனைத் திறன், செயல் திறன் ஆகியவை குறைந்து விடும். மக்களுக்காக பணியாற்றிட இயலாது. முதுமையில் அடிக்ககடி உடல் நலம் பாதிக்கப்படும். அதனால், சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ சென்று அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள இயலாது. தங்கள் தொகுதிக்காக குரல் கொடுக்க இயலாதவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து என்ன பயன்?
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 ஏற்க இயலாதது
 இந்த யோசனை சரியானதே. அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். எவ்வளவு நல்லவராக இருந்தாலும் எண்பது வயதைக் கடந்த ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அவரால் இளைஞனைப்போல் சுறுசுறுப்பாக தொகுதிப் பணிகளை ஆற்ற முடியுமா? அரசு ஊழியர்களுக்கு ஒரு நியதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு நியதி என்பது ஏற்ற இயலாதது.
 மு. நடராஜன், திருப்பூர்.
 கல்வித்தகுதி
 இந்தக் கருத்து ஏற்புடையதே. அரசுப் பணியாளர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது போல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்துடன், வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் கல்வியறிவில்லாதவர்களும் முதியவர்களும் மக்கள் பிரதிநிதி ஆவதைத் தடுக்க முடியும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 தொழில் அல்ல சேவை
 இந்த யோசனை ஏற்கத்தக்கதல்ல. வயதிற்கும் மக்கள் சேவைக்கும் தொடர்பு இல்லை. ஒருவர் எண்பது வயதிலும் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார் என்றால் அவரை வேட்பாளர் ஆக்குவதில் என்ன தவறு? தகுதியுடையவர்கள் வேட்பாளர் ஆவவை வயது வரம்பு தடுத்து நிறுத்திவிடக் கூடாது. அரசியல் தொழில் அல்ல சேவை. சேவைக்கு வயது தடையாகக் கூடாது.வேட்பாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது அரசியலை தொழிலாக ஆக்குவதற்கு சமம்.
 சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
 இடைத்தேர்தல்
 மக்கள் பிரதிநிதிகள் அடிப்படைக் கல்வியறிவுடனும் ஆரோக்கியமான உடல் தகுதியுடனும் இருப்பது அவசியமாகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு வயது வரம்பு இருந்தால், மிகவும் வயதானவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்கப்படும். இதனால் இடைத்தேர்தல் வாய்ப்பும் குறையும். மேலும், வயது வரம்பு இருந்தால்தான் இளைய தலைமுறையினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 அனுபவம்
 தேர்தலில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் போட்டியிடக்கூடாதென விதித்தால் வயது முதிர்ந்தவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடும். மேலும், தேர்தல் பிரசாரம், பேரணி, ஊர்வலம் இங்கெல்லாம் எல்லாருமே இளைஞர்களாக இருந்தால் எளிதில் உணர்ச்சிவசப்படுவர். அதனால், மோதல்களும் தரம் குறைந்த பேச்சுகளும் வளரும். வேண்டுமானால், ஒருவர் மூன்று முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விதி ஏற்படுத்தலாம்.
 வளவ. துரையன், கடலூர்.
 கட்டாயம் தேவை
 வேட்பாளர்களுக்கு வயது வரம்பு கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் வயது முதிர்ந்தவர் உறுபினராகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. அவருக்கோ அவர் குடும்பத்தினருக்கோ உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கு மட்டுமே அவருடைய பதவி பயன்படும். அரசுப் பணியில் சேர்வதற்கே வயது வரம்பு இருக்கும்போது வேட்பாளர்களுக்கு அது கட்டாயம் தேவை.
 பட்டவராயன், திருச்செந்தூர் .
 என்ன நியாயம்?
 இந்த யோசனை சரியானது. அரசு வேலைகளுக்கான தேர்வு எழுதுவதற்கே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணியில் சேரவும் வயது வரம்பு உண்டு, ஓய்வுபெறவும் வயது வரம்பு உண்டு. நமது நாட்டில் சாதாரண கடைநிலை ஊழியர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை அனைவருமே ஒரு குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே பணியில் இருக்க முடியும். ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே வயது வரம்பு தேவையில்லை என்பது என்ன நியாயம்?
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 வழிகாட்டி
 அரசு ஊழியர்களுக்கு அறுபது வயதில் ஓய்வு என்று இருப்பதைப்போல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வயது வரம்பை அறுபது என நிர்ணயிக்க வேண்டும். அந்த வயதிற்குப் பின் தான் சார்ந்த கட்சிக்கு ஆலோசகராகவும் வழிகாட்டிகளாகவும் அவர்கள் செயல்படலாம். இளைஞர்கள் எப்போது ஆளும் திறனைப் பெறுவது? காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் கொண்டுவந்தால் நாட்டுக்கு நல்லது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT