விவாதமேடை

"மருத்துவப் படிப்புக்கான "நீட்' தேர்வு என்பது சமூக அநீதி. அது ரத்து செய்யப்பட வேண்டும் என்று சிலர் கூறுவது சரிதானா?' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்...

23rd Sep 2020 04:28 AM

ADVERTISEMENT

கட்டாயம் தேவை
 நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறுவது முற்றிலும் தவறு. உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது "நீட்' தேர்வு முறை. புறக்கடை வழியாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் பணம் கொடுத்து சேர்ந்து பயின்ற மாணவர்களின் மருத்துவ அறிவு உலகத் தரமாக இருக்குமா? நீட் தேர்வு கட்டாயம் தேவை.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 கண்ணோட்டம்
 பல்வேறு துறை சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அப்படியிருக்க, மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது. மருத்துவத்திற்கு இணையாக மற்ற துறைகளும் சிறப்பானவைதான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். இதற்கு பெற்றோரும் ஆசிரியரும் துணை நிற்க வேண்டும். கல்வி தொடர்பான நிகழ்வுகளில் உணர்ச்சிகரமான கண்ணோட்டம் கூடாது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 வெறுக்கத் தக்கவை
 ஒரு மாணவன் மருத்துவப் படிப்பு பயிலத் தகுதியானவனா என்று சோதிப்பதற்குத்தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு என்பது சமூக அநீதி என்று மாணவர்களையும் பெற்றோரையும் குழப்பும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் வெறுக்கத் தக்கவை. ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்காமல் நீலிக்கண்ணீர் வடித்தால் கல்வியில் தரம் எப்படி வரும்?
 எஸ் சொக்கலிங்கம், கொட்டாரம்
 என்ன தவறு?
 மருத்துவப் படிப்பிற்கான இடம் திறமையானவர்களுக்குக் கிடைக்க இத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, இது அவசியம்தான். ஆனால், தமிழகத்தில் மட்டும் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைவது தவறு. திறமையானவர்களுக்கு மட்டுமே கல்வி வாய்ப்பு என்பதில் என்ன தவறு? தேர்வைக் கண்டு பயப்படும் மாணவர்களுக்கு தைரியத்தைக் கொடுப்பதே அரசின் வேலை. எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 தடைக்கல்
 இக்கருத்து சரியானதுதான். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி இருக்கும் மாணவர்களுக்கு எதற்கு இன்னொரு தேர்வு? இந்த நீட் தேர்வு முறை ரத்து செய்யப்பட வேண்டியது அவசியம். இதற்கு முன் நீட் தேர்வு இல்லாமல்தானே மருத்துவப் படிப்பு படித்தனர். அப்படி படித்தவர்கள் இன்று நல்ல மருத்துவர்களாக இருக்கிறார்களே! நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒரு தடைக்கல். அதை நீக்குவது நல்லது.
 உஷா முத்துராமன், மதுரை.
 நியாயமல்ல
 ஒரு மாநிலத்தில் அம்மாநிலம் உருவாக்கியுள்ள பாடத் திட்டத்தில் படித்துதான் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். மற்ற படிப்புகளுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய மதிப்பெண்கள் மருத்துவத்திற்கு மட்டும் ஏற்கப்படாமல் தனியாக அதற்கு ஒரு தேர்வு நடத்தப்படுவது நியாயமல்ல. இது குறிப்பிட்ட சிலர் பணம் சம்பாதிக்க வழிகோலுவதாகவும் வசதி படைத்தவர் மட்டுமே முன்னேற வழிசெய்வதாகவும் அமையும். எனவே, வேண்டாம் நீட் தேர்வு.
 இராம. வேல்முருகன், வலங்கைமான்.
 கண்கூடு
 சிலர் கூறுவது சரிதான். நகரத்து மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களும் எந்தத் தேர்வுக்கும் தயாராகி விடுவார்கள். ஆனால், கிராமப்புற மாணவர்களும் அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வை எழுத மிகவும் சிரமப்படுவது கண்கூடு. மருத்துவப்படிப்பில் சேர அவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அளவுகோலாகக் கொள்வதே சிறந்தது. எல்லாத் தரப்பு மாணவர்களும் மருத்துவம் பயில அது ஒன்றுதான் வழி.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 சம வாய்ப்பு இல்லை
 பெரும்பாலான மாணவர்கள் படிக்க விரும்புவது பொறியியலும் மருத்துவமுமே. பொறியியலுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. மருத்துவப் படிப்புக்கு மட்டும் நுழைவுத் தேர்வு தேவையா? இதனால் சம வாய்ப்பு பறிபோய் பண வசதி இல்லாத மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர். பயிற்சி நிலையங்களில் கட்டணம் செலுத்தி தயாரான நகர்ப்புற மாணவர்கள்தான் தேர்வு பெறுகிறார்கள். எனவே, இந்த நீட் தேவையில்லை.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 கேள்விக்குறி
 இக்கருத்து தவறு. தேர்வுக் கட்டணம் மட்டும் வசூலித்துக் கொண்டு மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்வது அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். ஏற்கெனெவே எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதால் தற்போது உயர்கல்வியிலும் தேர்ச்சி பெறும் மாணவர்களின் தரம் சோதிக்கப்படாமலேயே போகிறது. அரசியல் காரணங்களுக்காக கல்வியின் தரம் பலியிடப்படுவது கண்டனத்திற்குரியது.
 சிவ. வெங்கடேஷ், திருக்கோவிலூர்.
 வீண் வேலை
 இதற்கு முன் பள்ளியிறுதித் தேர்வை எதிர்கொள்ள பயந்து பல மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பள்ளியிறுதித் தேர்வை ரத்து செய்து விடலாமா? தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் நீட் தேர்வுக்கு மட்டும் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் எனத் தெரியவில்லை. இது நீட் தேர்வை விரும்பாத சில அரசியல்வாதிகளின் வீண் வேலையே தவிர வேறில்லை.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 தேசிய நீரோட்டம்
 நீட் தேர்வு என்பது சமூக அநீதி என்பது சரியல்ல. தமிழ்நாடு தேசிய நீரோட்டத்தில் கலந்துதான் பயணிக்க வேண்டும். தேசிய அளவில் போட்டியிட்டால்தான் நமது மாணவர்களின் திறமை வெளிப்படும். தமிழக மாணவர்கள் எப்போதுமே திறமையில் குறைந்தவர்கள் அல்ல. மேலும், நீட் தேர்வு மூலம்தான் ஏழை எளிய நடுத்தர குடும்பத்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல இயலும். நீட் தேர்வை ரத்து செய்வது சரியல்ல.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 ஐயமில்லை
 அரசின் திட்டங்கள் பல நேரங்களில் காரணமில்லாமலே எதிர்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் நீட் தேர்வும். நீட் தேர்வால் தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவராவது எளிது. எதிர்கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே ஒரு முயற்சியைப் பார்க்க வேண்டுமே தவிர இன்றைய சூழ்நிலையை வைத்து முடிவெடுக்கக் கூடாது. நாடு முழுமைக்குமான தேர்வுகளே தகுதியான மருத்துவ மாணவர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
 வ. ரகுநாத், மதுரை.
 ஒரே பாடத் திட்டம்
 தற்போதைய கல்வி முறை இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரி அமையவில்லை. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் போதிய பயிற்சி இல்லாததால் அவர்களில் அதிகம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போகிறது. எனவே, இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் அமைய வேண்டும். இல்லையெனில் சிபிஎஸ்இ, மெட்ரிக், அரசுப் பள்ளி என இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் .
 எம்.ஆர். லட்சுமிநாராயணன்,
 தாத்தைய்யங்கார்ப்பட்டி.
 குறையை நீக்கலாம்
 மருத்துவம் படிக்க விரும்பும்புபவர்களுக்கு முழுமையான அறிவும், ஆற்றலும், திறமையும் அவசியம். ஆகவே நீட் போன்ற தேர்வு அவசியமானதே. அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி தேர்வுக்கான பயிற்சியை இலவசமாகவும், தரமாகவும் ஏழை மாணவர்களுக்கு வழங்கலாம். தேர்வு முறையில் வேறு ஏதேனும் குறைபாடு இருந்தாலும் நீக்கலாம். ஆனால், தேர்வே கூடாது என்பது சரியல்ல.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 தனித் தேர்வு ஏன்?
 பிளஸ் டூ மதிப்பெண்அடிப்படையிலேயே உயர்கல்வியின் பல்வேறு துறை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மருத்துவத்திற்கு மட்டும் ஏன் தனித் தேர்வு? அத்தேர்வும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படிதான் நடைபெறும் என்பதால் மாநில பாடத் திட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படுமல்லவா? எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்காததால் இது ரத்து செய்யப்படவேண்டும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கேலிக்கூத்து
 தமிழகம் மட்டுமே நீட் தேர்வை எதிர்க்கிறது. மாணவர்களின் கல்வித் திறனில் நம்பிக்கையற்ற மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது. கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆசிரியரும் பெற்றோரும் மாணவர்களின் பயத்தைப் போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தேர்வே கூடாது என்பது கேலிக்கூத்து.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT