விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணிகள் தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்...

DIN

தவறில்லையே
 தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகள் தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கருத்து சரியே. அரசு அலுவலகங்களுக்கு பல காரணங்களுக்காக மக்கள் செல்ல வேண்டியிருக்கிறது. அலுவலக பயன்பாட்டு மொழி தமிழ் எனும்போது அரசுப் பணிகள் தமிழர்களுக்கே என்று சட்டம் கொண்டு வருவதில் தவறில்லையே. தமிழ் அறிந்த ஊழியர்களிடம் எளிய மக்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற வசதியாக இருக்கும். வேறு மொழி அறிந்த அலுவலர்கள் பணியில் இருந்தால் இது சிரமம். எனவே, இந்த சட்டம் தேவை தான்.
 வி.எஸ். ரவி, கடலூர்.
 அவசியம்
 தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து இங்குள்ள கலாசாரம் தெரிந்தவர்களுக்கே தமிழகம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். மேலும், தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் தமிழ் பேசும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பேசிட, கருத்துகளைப் பகிர்ந்திட இயலும். வேற்று மொழி பேசுபவர்களுக்கு தமிழ் பேசுவதும் கடினம்; தமிழைப் புரிந்து கொள்வதும் கடினம். வேற்று மொழியினர் கூறுவதை பொதுமக்களால் புரிந்துகொள்ள இயலாது. எனவே, சட்டம் இயற்றுவது அவசியமானது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 இன்றைய பிரச்னை
 திறமை உள்ளவர்கள் இந்தியாவில் எப்பகுதியிலும் வேலை செய்ய தனியார்துறையில் வாய்ப்பு உள்ளபோது அரசுத்துறையில் மறுப்பது சரியல்ல. மாநிலம் என ஆரம்பிக்கும் கோரிக்கை, மாவட்டம், வட்டம், கிராமம் என நீண்டு கொண்டே போனால் என்ன ஆகும்? யாருக்கு வேலைவாய்ப்பு என்பது இன்றைய பிரச்னை அல்ல. வேலைவாய்ப்பு இல்லை என்பதுதான் இன்றைய பிரச்னை. அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதை விடுத்து இப்படிக் கோரிக்கை வைப்பது தவறு.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 தகுதிக்கே பணி
 இப்படிச் சொல்வது சரியல்ல. அப்படிப் பார்த்தால் எத்தனையோ தமிழர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு அங்கு வேலை மறுக்கப்படலாம். தகுதி இருப்பவர்களுக்கு எங்கும் வேலை கொடுக்கலாம். எத்தனையோ தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று அந்த மாநில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். யாருக்குத் தகுதியோ இருக்கிறதோ அவர்களுக்கே அரசுப் பணி என்பதே சரியானது.
 உஷா முத்துராமன், மதுரை.
 முரணான செயல்
 எந்த அரசுப் பணியாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்குக் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில்தான் வேலைவாய்ப்பு அமைய வேண்டுமே தவிர, அந்த மாநில மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்று சட்டம் இயற்ற வேண்டுமென்பது தவறு. இச்செயல் அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் முரணான செயல். குறிப்பிட்ட சதவீத வேலைவாய்ப்பு அடிப்படையில் எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்பதே சரி.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 அமைதிப் பூங்கா
 நம் நாட்டிலுள்ள சில மாநிலங்களின் விசால புத்தியற்ற "மண்ணின் மைந்தர்கள்' செய்து வரும் குறுகிய நோக்கம் கொண்ட செயல்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்த "மாநில வேலை மாநிலத்தவர்க்கே' என்னும் கோரிக்கை. பல்லாண்டு காலமாக பல்வேறு மாநில மக்கள் தமிழர்களுடன் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டு தமிழகத்துக்கு வளம் சேர்த்து வருகிறார்கள். தமிழர்களும் பல மாநிலங்களில் பணியாற்றுகிறார்கள். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் இந்தக் கோரிக்கை எழுவது நியாயமற்றது.
 ஆர்.தீனதயாளன், காரமடை.
 சட்டத்திற்குப் புறம்பானது
 இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால், இந்தியா முழுவதும் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற அடிப்படை உரிமை அடிபட்டுப்போகின்றது. போட்டிகள் குறைவதால் தகுதியும் திறமையும் குறைகின்றது. மாநில அரசுப்பணிதான் என்றாலும் இந்த மாநிலத்தில் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத் தகுதியும் திறமையும் கொண்ட வேற்று மொழிக்காரரின் உரிமை பறிக்கப்படுவது சட்டத்திற்குப் புறம்பானது.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 தனி நாடு அல்ல
 இது தவறான கருத்து. ஜனநாயக நாடான நம் நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வைத் தவிர, எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி, ரயில்வே போட்டித் தேர்வுகள் இவற்றைப் பற்றி தமிழர்களை யோசிக்க விடாமல் தடுக்கும் சட்டமாக இது அமையும். தமிழ்நாடு என்பது இந்திய மாநிலங்களில் ஒன்றே தவிர, தனி நாடு அல்ல. இந்தியர்கள் அனைவரும் இந்திய நாட்டில் எங்கும் பணிபுரிய உரிமை உண்டு.
 க. நல்லையன், கரூர்.
 எப்படி உதவும்?
 ஒவ்வொரு மாநிலமும் தம் மாநில மக்களுக்கே அரசுப் பணிகளை வழங்கும் என்றால் மத்தியஅரசுப் பணிகளில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது? எல்லாரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம் என்று கூறப்படும் சமயச் சார்பற்ற இந்திய அரசின் பொதுத்தன்மைக்கு இது முரணல்லவா? ஐ.ஏ.எஸ். போன்ற அகில இந்திய நிர்வாகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர்க்கு பணிஅளிப்பதற்கு இச்சட்டம் எப்படி உதவும்? எனவே தமிழ் நாட்டின் அரசுப் பணிகளில் தமிழ் வழியில் கற்றோர்க்கு முன்னுரிமையும் இட ஒதுக்கீடும் அளிக்கலாம்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 நியாயம்தான்
 ஒரு மாநிலத்தில் அமையப்பெறும் பொதுத்துறை நிறுவனங்கள் அரசுத்துறைகள் எல்லாமே அந்த மாநிலத்தில் வாழும் மக்களின் உதவிக்காக எனும்போது அவர்கள் மொழியில் பேசக் கூடிய, வாழ்க்கை முறைகளை உணர்ந்துகொண்ட பணியாளர்கள்தான் அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே என சட்டமியற்றினாலும் அது நியாயம்தான்.
 இரா. செல்வமணி, பாப்பாக்குடி.
 முன்னுரிமை
 தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணிகள் தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதல்ல. இதேபோல் ஒவ்வொரு மாநிலமும் சட்டம் இயற்றினால் அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்க வாய்ப்புள்ளது. மேலும், தகுதியுள்ள நபர்களை தக்க பணியிடங்களில் அமர்த்துவதற்கும் இயலாத நிலை ஏற்படலாம். வேண்டுமெனில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் தமிழ்மொழி நன்கு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
 வ. ரகுநாத், மதுரை.
 கேள்விக்குறி
 இக்கோரிக்கை சரியல்ல. தமிழர்களுக்கு முன்னுரிமையும் பிற மாநிலத்தவர்களுக்கு குறிப்பிட்ட விழுக்காடு வேலைவாய்ப்பு என்றும் வரையறை செய்தால் எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், பிற மாநிலங்களும் இவ்வாறு சட்டம் இயற்றினால் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடும். தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படாமல் இருக்க இப்படி ஒரு சட்டம் அவசியமில்லை.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 முக்கியத்துவம் இல்லை
 தமிழ்நாட்டில் ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் ஆறு மாதத்திற்குள் மாநில மொழியில் தேர்ச்சி பெறவேண்டும் என சட்டமிருந்தாலும் அதனை ஒரு கடமையாகக் கருதித் தேர்ச்சி பெறுபவர்கள்தான் அதிகம். கோப்புகளை பெரும்பாலும் தமிழில் கையாளுவதில்லை. தமிழ் தெரியாத பணியாளர்களிடம் வேலைவாங்குவதில் மிகுந்த சிரமம் உள்ளது. வங்கிகளில் சாதாரண மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. எனவே தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பணிகள் தமிழர்களுக்கே என சட்டம் இயற்றப்பட வேண்டும்.
 இராம. வேல்முருகன், வலங்கைமான்.
 சட்டம் தேவை
 மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் வேலைவாய்ப்பில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சொல்கின்றன. தமிழ்நாட்டில் படித்த, வேலையில்லாத இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது தேவையான ஒன்றுதான். அந்தவகையில் தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் தமிழர்களுக்கே என்கின்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 மறக்கலாமா?
 இந்தக் கோரிக்கை சரியல்ல. தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இதே போல மற்ற மாநிலங்களிலும் பிற மாநிலத்தவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை மறக்கலாமா? இதன்படிதான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வேண்டுமானால் முன்னுரிமை கொடுக்கலாம். ஆனாலும் அதன் மூலம் பிற மாநிலத்தவர் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது!
 எஸ்.வி.ராஜசேகர், சென்னை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT