விவாதமேடை

"குழந்தைகளின் பார்வை பாதிக்கப்படுவதால் ஆன்லைனில் தொடக்க வகுப்புகளை நடத்தக் கூடாது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

கவனம் தேவை
 குழந்தைகளின் பார்வை பாதிக்கப்படுவதால் ஆன்லைனில் தொடக்க வகுப்புகளை நடத்தக் கூடாது என்பது சரியே. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தொடர்ந்து ஆன்லைனை பயன்படுத்தினால் பார்வை பாதிக்கப்படும். அதற்காக ஆன்லைனை முற்றிலும் ஒதுக்கி விடவும் முடியாது. அதைப் படிப்பு தவிர, வேறு விளையாட்டு பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு பிள்ளைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். பெற்றோரும் இயன்றவரை ஆன்லைனை தவிர்க்க வேண்டும். அறிவியல் மாற்றம் பயனையும் தரும்; பாதிப்பையும் தரும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
 எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
 கால வரையறை
 செல்லிடப்பேசி, கணினி போன்றவற்றின் நீண்ட நேரப் பயன்பாடு பார்வை பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்ணை விற்று ஓவியம் வாங்க முடியாது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது. அதே நேரத்தில் மாணவர்கள் நீண்ட காலம் கல்வி தொடர்பு இல்லாமல் இருப்பதும் அவர்களது எதிர்காலத்தைப் பாதிக்கும். கண் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று ஆன்லைன் கல்விக்கு கால வரையறை செய்வதே நல்லது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 பொறுப்பற்ற செயல்
 முன்பைவிட தற்போது நிறைய குழந்தைகள் கண்ணாடி அணிவதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம் அறிதிறன்பேசி, கணினி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதே. மருத்துவர்கள் பாதிப்பு குறித்து எச்சரிக்கை செய்தும் பள்ளிகள் வியாபார நோக்கில் தொடக்க வகுப்புகளை நடத்தி வருகின்றன. குழந்தைப் பருவ பார்வை பாதிப்பு வாழ்நாள் முழுதும் தொடரும். இது தெரிந்தும் பள்ளி நிர்வாகங்கள் பொறுப்பற்று செயல்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
 வி.எஸ். ரவி, கடலூர்.
 குறைந்த நேரம்
 இப்போது நோய்த்தொற்று அச்சத்தால் தற்காலிகமாகத்தான் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. வரும் காலங்களில் இணையக் கல்வியே முதன்மையாக இருக்கப் போகிறது. குழந்தைகள் ஆன்லைன் வழியே பயில, வெளிச்சமான இடம், குறிப்பிட்ட இடைவெளியைப் பின்பற்றல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் போதும். குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் இணைய விளையாட்டு, வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அதனைத் தவிர்த்தாலே கண்பார்வை பாதிக்காமல் காப்பாற்றி விடலாம்.
 அ.பா. சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
 காலம் வீணாகக் கூடாது
 ஏற்கனவே குழந்தைகள் அறிதிறன்பேசி மூலமாக விளையாட்டுகளைப் பார்க்கின்றனர். அவற்றைக் குறைக்க வேண்டும். நீண்ட நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. குழந்தைகளின் கல்வி கற்கும் காலம் வீணாகக் கூடாது. அதற்குத்தான் ஆன்லைன் வகுப்புகள். எதிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பயனை நோக்குவதுதான் நல்லது. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தினால் கற்பித்தல் - கற்றல் பயனுள்ளதாக இருக்கும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 கல்வி முக்கியம்
 குழந்தைகளுடன் விளையாடுவதற்கும் அவர்களுக்குக் கதைகள் சொல்வதற்கும் வீட்டில் தாத்தா பாட்டி யாரும் இப்போது இல்லை. எனவே, குழந்தைகள் செல்லிடப்பேசியிலும் கணினியிலும் பொழுதைப் போக்குகிறார்கள். ஆன்லைனில் படிப்பதனால் மட்டும்தான் குழந்தைகளுக்குப் பார்வை குறைபாடு ஏற்படுமா? கணினியில் விளையாடுவதால் ஏற்படுவது இல்லையா? அவற்றையெல்லாம் தடுத்தாலே போதும். கல்வி மிகவும்
 முக்கியம்.
 க. நல்லையன், கரூர்.
 பாதிப்பு வரும்
 ஆன்லைனில் பாடங்களைக் கேக்கும்போது குழந்தைகளின் கண்கள் நீண்ட நேரம் திரையை உற்று நோக்குவதால் நிச்சயம் பார்வையில் பாதிப்பு வரும். அறிதிறன்பேசியில் விளையாடாதே என்று கண்டித்த பெற்றோரே இப்போது ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளிடம் அறிதிறன்பேசியைக் கொடுக்கும் கட்டாயம் வந்துள்ளது. விளையாடினால் பாதிக்கும். பாடம் கேட்டால் பாதிக்காதா? குழந்தைகளுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தாமல் இருப்பது நல்லது.
 உஷா முத்துராமன், மதுரை.
 விபரீத விளையாட்டு
 இந்தக் கருத்து மிகவும் சரிதான். குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடங்களைக் கற்பிப்பது ஏற்புடையதல்ல. இப்போது பார்வை பாதிக்கப்படுவது மட்டுமல்ல, வருங்காலத்தில் கண்களேகூட பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. பெரியவர்களையேகூட அதிக நேர ஆன்லைன் பயன்பாடு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் தொடக்கக் கல்வி வகுப்புகளை ஆன்லைன் வழியே நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கற்பித்தலைவிட கற்றதைப் புரிந்துகொள்ளுதல் அவசியம் ஆகும். எனவே, வேண்டாம் விபரீத விளையாட்டு.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 காலத்தின் கட்டாயம்
 கற்பிக்கும் முறையில் மாற்று வழிகளைக் கையாண்டுதான் இந்தத் தீநுண்மி காலத்தைக் கடக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் ஆன்லைன் வழியே கற்கும்போது அவர்களுக்குச் சற்று சிரமமும் அழுத்தமும் இருக்கும் என்பது உண்மைதான். இவற்றைக் களைய மாற்று வழிகளைக் காண்போம். ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கி அரசு, இத்தனை மாதங்களுக்குப் பிறகு வகுப்புகளை தொடங்கியுள்ளது வரவேற்கவேண்டியதே. இனி வருங்காலம் இதை நோக்கித்தான் இருக்கும். இது காலத்தின் கட்டாயம்.
 ஏ.பி. மதிவணன், சென்னை.
 கவனச் சிதறல்
 ஆன்லைனில் தொடக்க வகுப்புகளை நடத்தக் கூடாது என்கிற கருத்து மிகவும் சரியே. குழந்தைகள் வெகுநேரம் கணினி அல்லது செல்லிடப்பேசியை உற்று நோக்கும்போது அவர்களின் பார்வைத் திறனில் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைன் வகுப்பின்போது கவனச்சிதறல் மற்றும் படிப்பின் மீது ஆர்வமின்மை ஆகியவை ஏற்படலாம். எனவே, தொடக்க வகுப்புகளை ஆன்லைனில் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
 வ. ரகுநாத், மதுரை.
 அவசரம் ஏன்?
 முதலில் அனைத்து வீடுகளிலும் அறிதிறன்பேசி இணைய வசதி இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது வகுப்புகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து வீட்டுப்பாடம், தேர்வு என அறிதிறன்பேசியிலேயே இயங்க வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கிட அவசரம் ஏன்? படிப்படியாக பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களுக்குள் பள்ளிகள் திறக்கப்பட்டுவிடும். அதுவரை பொறுத்திருக்கலாம்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 வரப்பிரசாதம்
 பள்ளிகளைத் திறக்க இயலாத சூழலில்தான் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அவர்களுக்குக் குறைந்த நேரமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் கல்வி என்பது நமக்கு கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதம் என்று சொல்ல வேண்டும். ஆன் லைன் என்பது இனி தவிர்க்க முடியாத ஒன்று. குறைந்த நேரமே வகுப்புக்கள் நடத்தப்படுவதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 சாத்தியமல்ல
 பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகள் நடத்தப்பட்டால் குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் ஆடுதல், பாடுதல், கதை சொல்லல், மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் மூலம் செயல்வழிக் கற்றலாக வகுப்பறை நிகழ்வுகள் அமையும். ஆனால், ஆன்லைன் வகுப்புகளில் இவை சாத்தியமல்ல. கணினி திரையை உற்று நோக்குவதால் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்படைய வாய்ப்பு அதிகம். எனவே, ஆன்லைனில் தொடக்க வகுப்புகள் நடத்துவது சரியல்ல.
 வீ. இராமலிங்கம், தாணிக்கோட்டகம்.
 மன உளைச்சல்
 இது சரியான கருத்தாகும். பள்ளி வகுப்புகள் நடைபெறாததால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் தொடர்ந்து மூன்று மணி நேரம் கணினியையோ அறிதிறன்பேசியையோ பார்க்க வேண்டியிருக்கிறது. இதனால், பார்வை பாதிப்பு, மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. ஆகவே, அரசு இதில் தலையிட்டு குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளைத் தடை செய்ய அல்லது நேரத்தைக் குறைக்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மா. இளையராஜா, திருச்சி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT