விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்கிற தமிழக அரசின் அறிவிப்பு சரியா? தவறா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

ஏமாற்றம் தரும்
 நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்கிற தமிழக அரசின் அறிவிப்பு தவறாகும். பணி வாய்ப்புக்காக பல ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு இது விரக்தியை ஏற்படுத்தும். பதினைந்து ஆண்டுகளாவது அரசுப் பணி புரியலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தரும் அறிவிப்பு இது. நாற்பத்தைந்து என்றாவது வைக்கலாம்.
 பா. இராமகிருஷ்ணன், சிந்துபூந்துறை.
 உலகியல் அறிவு
 முன்பெல்லாம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இவர்கள் இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று, சிறந்து விளங்கினார்கள். அன்றைக்கு நாற்பது வயது ஆசிரியர்கள் கல்வி அறிவோடு உலகியல் அறிவும் பெற்று விளங்கியதால்தான், அவர்களிடம் பயின்ற மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினர். எனவே, நாற்பது வயதுக்கே முன்னுரிமை என்று முடிவெடுப்பதே சரி.
 டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.
 பயன் விளையாது
 நாற்பது வயதில் பணியில் சேரும் ஒருவருக்கு, பதினைந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியரின் கற்பிக்கும் திறன் நிச்சயமாக இருக்காது. நவீன கல்விமுறைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள இயலாதவர்களாகவே இருப்பார்கள். மாணவர்களுக்கோ அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனத்திற்கோ பெரிய பயன் விளையாது. எனவே, அரசின் முடிவு சரியே.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 வயது வரம்பு கூடாது
 ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் தேர்வுகள் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் நடத்தப் படுவதில்லை. பணி வேண்டி விண்ணப்பித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டேதான் இருக்கும். அதனால் விண்ணப்பதாரர் வயதும் கூடிக்கொண்டே இருப்பதனால் அவர்களின் வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயம் இல்லை. அரசு எல்லாப் பணிகளுக்கும் வயது வரம்பை நிர்ணயிக்கலாம். அதையே கண்டிப்பாக பின்பற்றவும் வேண்டும். ஆசிரியப் பணிக்கு வயது வரம்பு கூடாது.
 வி.எஸ். ரவி, கடலூர்.
 தவிர்க்கப்பட வேண்டும்
 ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்தை தனிப்பட்ட முறையில் வளர்த்துக் கொண்டு, நவீன காலத்திற்கு ஏற்ப தங்கள் அறிவுத்திறனையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரே வேலை வாய்ப்புப் பெறுகிறார்கள். குறிப்பிட்ட துறைக்கு என்றே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். ஆசிரியர்களுக்கு வயது நிர்ணயம் வேண்டாம்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 ஏற்புடையதன்று
 உயர்நிலைக் கல்வியைக் கற்று, பட்டம் பெற்று, ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர் தேர்வு வாரியத் தகுதித் தேர்வை எழுதி, ஆசிரியராக முழுத்தகுதி பெறுவதற்கே கிட்டத்தட்ட முப்பது வயது முடிந்துவிடும். மேலும், முப்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள்தான் பக்குவம் பெற்றுத் திகழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதுதான் சரி. இந்த அறிவிப்பு ஏற்புடையதன்று.
 நெ. இராமச்சந்திரன், திருக்களம்பூர்.
 அரசின் இயலாமை
 அரசின் அறிவிப்பு தவறானது. ஒருவர், பட்டப் படிப்பு படித்து முடித்து, ஆசிரியர் பயிற்சியும் முடித்திருந்தால் அவருக்குக் கட்டாயமாக ஆசிரியர் பணி வழங்கியே தீர வேண்டும். அப்படி வழங்க இயலவில்லை என்றால் அது அரசின் இயலாமையாகும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை. அரசு இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.
 எஸ். முத்துரத்தினம், சத்தியமங்கலம்.
 இது என்ன நியாயம்?
 ஏழு ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் திறனறித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்காணவர்களுக்கு இன்னும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏழாண்டு கடந்து விட்டதால் அவர்கள் தற்போது மறுபடியும் தேர்வெழுத வேண்டியுள்ளது. கல்வியாளராக இல்லாத அரசியல்வாதிகள் எந்த வயதிலும் தேர்தலில் நிற்கலாம்; மக்கள் பிரதிநிதியாக ஆகலாம்; தங்கள் ஊதியத்தைத் தாங்களே உயர்த்திக் கொள்ளலாம்; ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆசிரியர் பணிக்கு மட்டும் நாற்பது வயதைத் தாண்டக்கூடாது. இது என்ன நியாயம்?
 க. ஆறுமுகம் கண்ணா, நாங்குனேரி.
 மறுபரிசீலனை தேவை
 அரசு வேலை கிடைக்கும்வரை தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி புரியலாம் என்று நினைத்து பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் ஆசிரியப் பணிக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. தகுதி அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 அரசே பொறுப்பு
 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்திற்காகக் காத்திருக்கிறார்கள். ஆசிரியர் பணியை பெறாததற்கு இவர்கள் எந்த வகையிலும் காரணமாக மாட்டார்கள். இதற்கு அரசுதான் முழுப் பொறுப்பு. இவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்வரை அரசு உதவித்தொகை வழங்குவதே முறையாகும். எந்த வயதிலும் ஆசிரியர் பணியை வழங்க வேண்டும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 விதிவிலக்கு ஏன்?
 எந்தப் பணிக்குமே வயது வரம்பு இருக்கும்போது ஆசிரியர் பணிக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? எல்லாருக்குமே நாற்பது வயதாகும்போது ஒருவித சோர்வு, மறதி போன்ற குணங்கள் வந்து விடுவது இயற்கை. இப்படிப்பட்டவர்களால் உற்சாகமாகவோ ஆர்வமாகவோ பணி செய்ய முடியாது. இதனால் இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
 உஷா முத்துராமன், மதுரை.
 செய்த பாவமென்ன?
 ஐம்பது வயது ஆனவர்கள்கூட எம். ஏ., பி. எட். முடித்துவிட்டு வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்ததைப் புதுப்பித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். முழுப்பயிற்சியும் முடித்தும் இருபது ஆண்டுகளாக அவர்கள் எந்த வேலையும் கிடைக்காமல் அல்லல் படுகின்றனர். அவர்கள் செய்த பாவமென்ன? இந்த அறிவிப்பு மிகவும் வேதனை தருவதாகும். ஆசிரியர் பணி வயது வரம்பு இல்லாமல் வழங்கப்படவேண்டும். தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்து வயது வரம்பையாவது கூட்டி அறிவிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 ஈடுபாடு இருக்காது
 தமிழக அரசின் அறிவிப்பு சரியே. நாற்பது வயதில் ஆசிரியருக்கான கல்வித் தகுதிதான் இருக்குமேயன்றி, மனம் ஒன்றிய ஈடுபாடு இருக்காது. படிப்பு முடித்து, பயிற்சி இல்லையெனில் ஆசிரியராகப் பணிபுரிவது கடினம். ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகள் போல் அல்ல. நினைவாற்றலும், உடல் உழைப்பும்கூட நாற்பது வயதில் குறையத் தொடங்கும். எனவே, அரசு அறிவித்திருப்பது சரியே.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 முறையன்று
 முன்பெல்லாம் அரசுப் பணிக்கு ஊதியம் குறைவாகவே இருக்கும். ஆயினும், அரைக் காசு என்றாலும் அரசாங்க உத்தியோகம் என்று திருப்தியுடன் பணியாற்றினார்கள். இந்நாளைய ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறுவதும், சில வருடங்கள் மட்டும் பணிபுரிந்துவிட்டு, பல வருடங்கள் ஓய்வூதியம் பெற எண்ணுவதும் முறையன்று. தமிழக அரசின் அறிவிப்பில் தவறில்லை.
 ஆர். தீனதயாளன், காரமடை.
 கேள்விக்குறியே
 ஏராளமானோர் வேலைக்காக வெகு காலமாகக் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்கும்போது நடுத்தர வயதினைத் தாண்டி விடுவதோடு, கற்ற பாடங்கள் நினைவிற்கு வந்து இவர்களால் சிறப்புறக் கற்பிக்க இயலுமா என்பது கேள்விக்குறியே. இன்றைய மாணவ சமுதாயத்தின் மன நிலைக்கேற்ப பணியாற்றுவது மிகவும் கடினமானதாகும். எனவே அரசின் அறிவிப்பு மிகச்சரியானதே .
 கே. ராமநாதன், மதுரை.
 புனிதமான பணி
 ஆசிரியர் வேலைக்காகப் படித்துப் பயிற்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி இல்லை என்றால் அவர்கள் வேறு எந்த வேலைக்குப் போவார்கள்? அவர்களுக்கு வாழ்க்கையே இல்லையா? அரசாங்கமே இப்படிச்சொன்னால் எப்படி? வயது வரம்பு நிர்ணயித்தால் வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி ஒழியும்? வேலை கிடைக்கும் என்று காத்திருப்பவர்களின் நம்பிக்கையைக் குலைப்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. மற்ற பணிகளுக்கும் ஆசிரியர் பணிக்கும் வேறுபாடு உள்ளது. ஆசிரியர் பணி என்பது புனிதமான ஒரு பணி. அந்தப் பணியில் சேர கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல.
 அரங்க. சேகர், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT