விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்...

14th Oct 2020 04:04 AM

ADVERTISEMENT

வல்லரசு கனவு
 குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கருத்து மிகச் சரியே. நேர்மையான தலைவர்களின் கீழ் அரசு அமைய வேண்டும். பொது வாழ்வு என்பது பணம் சம்பாதிப்பதற்காகவும், செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் என்ற மனப்பான்மை நாட்டு நலனுக்கு எதிரான போக்கை உருவாக்கும். வல்லரசுக் கனவுடன் உள்ள நம் நாடு வளர்ச்சி பெற இது போன்ற கடுமையான சட்டங்கள் அவசியம் தேவை.
 வி.எஸ். ரவி, கடலூர்.
 அனைத்துக் கட்சி ஆதரவு
 குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது சரியே. கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல்வரை போட்டியிட்டவர்கள் பலரும் குற்றப் பின்னணி உடையவர்கள்தான். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் வருங்காலத்திலாவது தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 புனித பூமி
 இக்கருத்து மிகவும் சரி. சட்டம் இல்லையெனில் குற்றங்கள் பெருகி அவை சமுதாயத்தையே அழித்துவிடும். அரசியல்வாதிகள் அக்குற்றங்களைக் களைய முன்வர மாட்டார்கள். குற்றம் தடுக்க வேண்டிய காவல்துறை கைகட்டி நிற்க நேரிடும். அப்பாவிப் பொதுமக்கள் வாழ வழியின்றித் தவிப்பார்கள். புனித பூமி என்பது கலவர பூமியாக மாறிவிடும். எனவே சட்டத்திருத்தம் தேவை.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 அளவுகோல் இல்லை
 அரசியலில் இருப்பவர்கள் கைது செய்யப்படுவதும் சிறைக்குப் போவதும் வழக்கம்தான். கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் மேல் முறையீட்டில் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே குற்றப் பின்னணி என்பதற்கு அளவுகோல் எதுவும் இல்லை. மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
 கு. பாண்டுரங்கன், நாமக்கல்.
 எப்படி சாத்தியம்?
 குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது முற்றிலும் சரியே. அதற்கான வலுவான சட்டங்கள் உடனடித் தேவை. ஆனால், குற்றப் பின்னணி உள்ளவர்கள் பலரும் ஆட்சி அதிகாரத்திலும், சட்டம் இயற்றும் நிலையிலும் இருக்கின்றனர். இந்த நிலையில் அது எப்படி சாத்தியப்படும்? பணம், பதவி, அதிகாரம் எல்லாமே சேர்ந்துகொண்டு சதிராட்டம் போடுகின்றன. சட்டத்திருத்தம் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
 கரு. பாலகிருஷ்ணன், மதுரை.
 நல்லாட்சி
 இக்கோரிக்கை நியாயமானது ஆகும். குறிப்பாக, பிணையில் வெளிவர முடியாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது அவசியம்.தேர்தலில் வென்று மக்கள் பிரதிநிதிகளாக செயல்படுபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பின் அவர்களிடமிருந்து நல்லாட்சியை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 அங்கீகாரம் ரத்து
 குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை சட்டம் தேவை இல்லை. கட்சிகள் குற்றப் பின்னணி வேட்பாளர்களை தேர்ந்தடுத்தது நிரூபிக்கப்பட்டால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். கட்சிகள் அடையாளப்படுத்தாத வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெறுவது மிக அரிது. கட்சிகளுக்குள்ள பொறுப்புகளை அதிகப்படுத்துவது ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 மக்களின் எதிர்காலம்
 தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதி என்ற ஒன்றை இன்னும் நிர்ணயிக்கவில்லை. ஆனால், குற்றச் செயல் புரிந்தவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பது அடிப்படையாக இருப்பதில் தவறில்லை. ஆள்வதற்கு அதிகாரத்தினை கையிலெடுத்துக் குற்றங்கள் செய்வோர் மலிந்து விட்ட இக்காலத்தில் நாட்டு மக்களின் எதிர்காலம் கருதி குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்
 ஏற்கத்தக்கதன்று
 இந்தக் கருத்து சரியல்ல. ஒருவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றால் அன்றி அவர் குற்றவாளிதான் என்று எப்படி முடிவு செய்ய முடியும்? குற்றப் பின்னணி இல்லாதவர்கள், மக்கள் பிரதிநிதி ஆன பின்னர் நேர்மையாக நடந்து கொள்கிறார்களா? குற்றவாளிகள் ஏன் மனம் திருந்தியிருக்கக் கூடாது? இக்கருத்து ஏற்கத்தக்கதன்று.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 வாக்காளர் விருப்பம்
 மக்கள் தொண்டு செய்ய ஆசைப்படுபவர்கள் தூய்மையானவர்களாக, நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எவ்வித சமூக விரோத செயல்களில் ஈடுபடாமலும் எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே வாக்காளர்களின் விருப்பம். தனிப்பட்ட வாழ்வில் குற்றம் புரிந்தவர்கள் பொது வாழ்விற்கு வந்தாலும் குற்றமே புரிவார்கள். இவர்களை முதலிலேயே நீக்கி விடுவது நல்லது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 உயர் குணங்கள்
 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தியாக மனப்பான்மை, நேர்மை தவறாமை, வெளிப்படைத்தன்மை, நீதி வழுவாமை போன்ற உயர்குணங்கள் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டோரிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. இவர்களின் குற்ற இயல்பு மாறுமா, மாறாதா என்ற நிச்சயமற்ற நிலையில், இவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டியது மிக அவசியமே.
 கே. ராமநாதன், மதுரை.
 தவறான புரிதல்
 குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் வென்றால், நீதிமன்ற நடைமுறைகளில் தலையிட்டு, தான் தப்புவதற்கான அனைத்து நடைமுறைகளிலும் ஈடுபடுவர். இது நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையை நீர்த்துப் போகச் செய்யும். தோற்றாலும், அவர் பெற்ற வாக்குகள், அவருக்கு தான் புரிந்த குற்றங்களை மக்களில் ஒரு சிலர் ஆதரிக்கிறார்கள் என்ற தவறான புரிதலை ஏற்படுத்தும். ஆகவே சட்டம் இயற்றப்பட வேண்டும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 சந்தேகம்தான்
 இக்கருத்து மிக மிகச் சரியானதே. ஆனால் சட்டம் இயற்றப்படுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் எல்லாக் கட்சிகளிலும் குற்றப் பின்னணி உடையவர்கள் இருக்கின்றனர். அப்படியே சட்டம் இயற்றப்பட்டாலும் எந்தக் கட்சியும் சட்டத்திற்கு உட்பட்டு தம் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியாத அவலநிலையில் உள்ளன. தேர்தல்ஆணையம்தான் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 வரையறை இல்லை
 குற்றப் பின்னணி என்பதை வரையரையறுக்க இயலாது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாலும், கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், குற்றப் பத்திரிகை கொடுக்கப்பட்டிருந்தாலும் நீதிமன்றத்தைப் பொருத்தவரை அவர் "குற்றம் சாட்டப்பட்டவர்' மட்டும்தான். குற்றம் சுமத்தப்பட்ட பலர் குற்றமற்றவர் என்று விடுதலை ஆகிறார்கள். ஆக, புதிய சட்டம் தேவையில்லை.
 க. சண்முகம், சேலம்.
 நல்ல தகுதி
 குற்றம் செய்தவர்களால் நேர்மையாகப் பணியாற்ற முடியாது. அவர்களின் மனத்தில் எப்படி அடுத்த முறையும் பதவியைப் பிடிக்கலாம் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும். இந்த சிந்தனையில் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று என்ன சாதனையையோ மக்களுக்கு தேவையான நல்ல செயல்களோ செய்ய முடியும்? இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் அவர்களால் தேர்தலில் நிற்கவே முடியாது. இந்த சட்டம் அவசியம்.
 உஷா முத்துராமன், மதுரை.
 ஊழல் நிர்வாகம்
 குற்றப் பின்னணி உடையவர்கள் வெற்றி பெற்றால், தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி மேன்மேலும் தவறுகளையே செய்வார்கள். லஞ்சமும், ஊழலும் நாட்டில் அதிகமாகும். அரசு இயந்திரம் தவறாக வழி நடத்தப்படும். அதிகாரிகளையும் தங்களுக்கு சாதகமாக மாற்றி விடுவார்கள். ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையே ஊழல் நிர்வாகமாக மாற்றி விடுவார்கள். எனவே சட்டத்திருத்தம் தேவைதான்.
 க. இளங்கோவன், மயிலாடுதுறை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT